60 நீண்ட வருடங்களாகத் தமிழ்த் தேசிய இனம் அழித்து துவம்சம் செய்யப்பட்டு அதன் உச்ச வடிவமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளை உலகமே அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க நிறைவேற்றியது இலங்கைப் பேரினவாத பாசிச அரசு. சிங்கள மொழியையும் பௌத்ததையும் கலந்த மேலாதிக்க நச்சுக்கலவை கொண்டு மனிதர்களை மிருகங்களாக மாற்றியிருக்கிறது. ஏன் கொல்லப்படுகிறோம் என்று செத்துப்போகின்ற அப்பாவி மனிதர்கள், குழந்தைகள், முதியோர் குரல்கள் மனிதத்தை உலுக்கிப்பார்க்கின்றன.
மனிதர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அப்பட்டமான வியாபாரிகள் அவலங்களின் மத்தியிலிருந்து முளைத்து அகோரமாகக் காட்சிதருகின்ற துயர்படிந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
உலகத் தொழிலாளர்களை பிய்த்துப் பிளந்து கூறுபோட்டு கொலைகளின் களமாக உலகத்தை மாற்றியிருக்கிறது. உலகக் கொலைக்களத்திற்கு இலங்கை இன்று உலகிற்கு முன்னுதாரணம். பல் தேசியப் பெருமுதலைகளாலும் சிங்கள இராணுவக் குடியேற்றங்ளாலும், சிங்கள பௌத்த திட்டமிட்ட குடியேற்றங்களாலும் சுறையாடுப்படும் நிலப்பரப்பு நாளுக்கு நாள் பெருகிச் செல்கிறது.
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் வடக்கில் தமிழ்ப்பேசும் மக்கள் சிறுபான்மையாகிவிடுவார்கள். அதற்கான அத்தனை முரண்பாடுகளும் கூர்மைப்படுத்தப்பட்டுக் கையாளப்படுகின்றன. தெற்கில் எட்டிப்பார்க்கும் மனித முகங்களையும், அப்பாவி சிங்கள உழைக்கும் மக்களையும் கொன்று போடுவதற்கும் பேரினவாத அரசு தயாராகிறது.
மனிதக் கசாப்புக்கடை இலங்கை முழுவதும் ராஜபக்ச குடும்பத்தின் தலைமையில் நடத்தப்படுகிறது. அவர்கள் தெளிவாக முரண்பாடுகளைக் கையாள்கிறார்கள்.
மாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் கிழக்கில் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறைவேற்றிய நீண்டகால தரவுகள் எம்முன்னே விரவிக்கிடக்கின்றன.
அதுவரை காலமும் உள்வீட்டுச் சண்டையும் சகோதரத்துவமாக வாழ்ந்த தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனங்களான முஸ்லிம்களுக்கும் பூர்வீகத் தமிழர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை இடதுசாரிகளோ, ஈழ விடுதலை இயக்கங்களோ தமது போராட்டங்களுக்காகக் கையாண்டதில்லை. இலங்கை அரசாங்கம் கையாண்டது. முரண்பாடுகளைத் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தி வன்முறையாகவும் மோதலாகவும் மாற்றியது.
இந்த மோதலின் இடைவெளியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மகாவலித் திட்டத்தின் ஊடாக இலங்கை அரசு நிறைவேற்றியது. கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மையானார்கள். இதன் மறுபக்கத்தில் ஈழ விடுதலை இயக்கங்கல் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதில் இலங்கை அரசிற்கு ஆதரவாகச் செயற்பட்டன. உலகின் அத்தனை உளவு நிறுவனங்களாலும் உள்வாங்கப்பட்டிருந்த ஈழ விடுதலை இயக்கங்களின் வரலாற்றுத் துரோகத்தின் மற்றொரு விளைபலன் கிழக்கில் இலங்கை அரச ஆக்கிரமிப்பு நோக்கத்திற்குத் துணைபோனதாகும்.
இதே ஆக்கிரமிப்புத் தந்திரோபாயத்தின் மறு வடிவம் இன்று வடக்கில் நிறைவேற்றப்படுகின்றது.
வடக்கு முரண்பட்ட சாதிகளின் கூட்டமைப்பு மட்டுமல்ல, ஆதிக்கசாதி வேளாள அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தது. கடந்த முப்பது வருடங்களில் தேசிய இன ஒடுக்குமுறை இராணுவ ஒடுக்குமுறையாகக் கொலைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த ஒவ்வொரு கணமும், வெளித் தெரியாமல் அமிழ்த்தப்பட்டிருந்த சாதிய முரண்பாடுகள் சமாதானக் காலம் ஒவ்வொன்றிலும் ஆங்காங்கு வன்முறைகளாக வெடித்திருக்கின்றன.
எதிர்காலம் குறித்த எந்த அக்கறையும் அற்ற நிலப்பிரபுத்துவ மனோபாவம் கொண்ட குழுவாதிகளான எந்த ஈழ விடுதலை இயக்கத்திடமும் சாதிய முரண்பாடுகளைக் கையாள்வதற்கான குறைந்தபட்ச திட்டம்கூட இருந்ததில்லை. இளைஞர்களை துப்பாக்கிகளோடு கோரமான எதிரிக்கு இரையாகத் தீனிபோட்டு இராணுவ வெற்றிகளை மட்டுமே அரசியலாக்கிய விடுதலைப் புலிகள் வரை கிழக்கில் முஸ்லிம்களுடனான முரண்பாடுகள் குறித்து அரசியல் முன்வைக்கப்படாதது போன்றே வடக்கில் சாதிய முரண்பாடுகள் குறித்தும் அரசியல் இருந்ததில்லை.
அந்த முரண்பாடுகளை தனக்குச் சார்பாக பேரினவாத அரசு கையாளும் வழிகள் அனைத்தையும் தேசிய விடுதலை இயக்கங்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் திறந்து விட்டிருந்தன.
இன்று சாதிய முரண்பாடுகளை மிகவும் திட்டமிட்ட வகையில் பேரினவாத அரசு கையாள்கிறது. அரசிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு நிலையில் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த முரண்பாட்டை இலங்கை அரசு கையாள்வதற்கான அனைத்து கதவுகளையும் அகலத் திறந்து வைத்துள்ளது.
வடக்கில் இலங்கை அரசிற்கு ஆதரவான சுதந்திர இளைஞர் முன்னணி என்ற சாதிச் சங்கம் உருவாகியுள்ளது. இதன் தோற்றத்திற்கு பாசிச ராஜபக்ச ஆட்சி ஒரு புறத்திலும், மறு புறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் காரணமாக அமைந்ததைக் காணலாம்.
ஜீவசிங்கம் சிவகுமார் என்பவர் யாழ்ப்பாண பிரதேச சபை உறுப்பினராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றிபெற்றார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இவரை ஒரு வருடங்களின் முன்னர் சாதி அடைமொழிகளோடு கூட்டமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்கள் திட்டியிருக்கிறார்கள். தேசியக் கூட்டமைபின் மேலாதிக்க வன்முறைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து கடந்த ஒரு வருடமாக கூட்டமைப்பு அதனைப் புறக்கணித்தது. போரின் பின்னரான அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மேட்டுக்குடி வேளாளர்கள் தமது அதிகார நிலைகளை உறுதிப்படுத்த ஆரம்பித்திருந்தனர்.
இலங்கை அரசினதும் உலக ஏகாதிபத்தியங்களதும் உள்ளூர்ச் சண்டியர்களாகத் தொழிற்படும் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கசாதி வெள்ளாளர்களின் தற்காலிகத் தங்கு மடம். அவர்கள் பல ஆண்டுகளாகப் பிரதிநிதித்துவப்படுத்திய வெள்ளாள மேலாதிக்கம் மீண்டும் அதிகாரப் போட்டியில் சாதி வெறியையும் மேலாதிக்கத்தையும் நிறுவ முற்படுகின்றது. தமிழ் தேசியம் என்பது இவர்களின் அடிப்படை முழக்கமாகவிருந்த போதும் வடக்கில் தமிழ்ப்பேசும் மக்களைப் பிளவுபடுத்தி தமது குறுகிய அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முற்படுகின்றனர்.
தேசிய வாதிகள் தமது சந்தை நோக்க்கங்களை நிறைவேற்றிக்கொள்ள சாதிய ஒடுக்குமுறைய தவிர்க்க முடியாமலாவது நிராகரிப்பது வழமை. மக்களை தமது தலைமையில் ஒன்றிணைப்பதற்கான தந்திரோபாயமாக தேசிய ஒருங்கிணைவு பயன்படுவதுண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தேசிய வாதிகள் அல்லர். தேசியத்திற்கு அடிப்படையில் எதிரான விதேசிகள். மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதே இவர்களின் வழிமுறை.
இவர்களின் நோக்கம் தமது அதிகாரத்திற்காக நேரரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை அரசுக்கும் அதன் பின்புலத்தில் இயங்கும் அனைத்து ஏகபோக அரசுகளுக்கும் சேவையாற்றுவதே.
ஜீவ சிங்கம் சிவகுமாரின் மீதான தொடர்ச்சியான சாதியத் தாக்குதலையும், புறக்கணிப்பையும் எதிர்கொள்ள முனைந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களே சுதந்திர இளைஞர் முன்னணியைத் தோற்றுவித்தார்கள். ஆரம்பித்த சில நாட்களிலேயே ஈ.பி.டி.பி என்ற அரச துணை இராணுவக் குழுவின் தலைவர் டக்ளஸ் தேவாவை அணுகிய முன்னணி இளைஞர்கள் ஆதரவு தருமாறு கேட்ட்டார்கள். தீவுப்பகுதி வாக்குகளை கணக்கிட்டுப்பார்த்த டக்ளஸ் அதனை நிராகரிக்க, பசிலும் சிறிய துணை இராணுவக் குழுக்களும் பின்னணியில் செயற்பட ஆரம்பிக்க சிங்கள பௌத்த குடியேற்றங்களை எதிர்ப்பின்றி மேற்கொள்ள பலமான முரண்பாடுகளை இலங்கை அரசு உருவாக்க ஆரம்பித்துவிட்டது.
மக்கள் மத்தியிலான முரண்பாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும் தெளிவான தத்துவ விசாரணைகள் எம்முன் உள்ளன. இவற்றை அறிந்துகொள்ளாத பலரும் தெரிந்துகொள்ள விரும்பாத பிழைப்புவாதிகளும் ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்து அடிமைகள் சமூகமாக மாற்றுவதற்குத் துணைபோகிறார்கள்.
கடந்த முப்பதுவருட ஆயுதப் போராட்டங்களின் ஆழத்துள் வெளித்தெரியாமல் உறங்கிக்கிடந்த சாதிய ஒடுக்குமுறையை முன்வைத்துப் பிழைப்பு நடத்துவதற்காக புலம்பெயர் நாடுகளில் சில குழுக்கள் ஏற்கனவே தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்தன. ஏகாதிபத்திய நிதிவளத்தில் இயங்கும் தன்னார்வக் குழுக்களோடு நேரடியான உறவுகளைக் கொண்ட இக்குழுக்கள் தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அடையாள அரசியல் என்ற அழுகிப்போன கோட்பாட்டை முன்வைத்து தமது இனப்படுகொலை ஆதரவு அரசியலை ஏற்கனவே ஆரம்பித்திருந்தனர்.
யாழ். மேலாதிக்கத்தின் கிழக்கு மக்கள் மீதான ஒடுக்குமுறையைப் பயன்படுத்தி கிழக்கைத் தனிமைப்படுத்துவதற்கான கருணா, பிள்ளையான் போன்ற குழுக்களை உருவாக்குவதில் புலம்பெயர் பிழைப்புவாதிகள் கணிசமான வெற்றி கண்டிருந்தனர். இந்த அனுபவங்களிலிருந்து, வன்னிப்படுகொலை முடிந்ததும் பிரான்சை மையமாகக் கொண்டு செயற்படும் தலித் முன்னணிக்கு இலங்கை அரசு முக்கியத்துவம் கொடுத்து, வடக்கில் அவர்களை முடுக்கிவிட்டது.
வடக்கில் ஏற்கனவே டக்ளஸ் குழு இந்தத் தளத்தில் தனது செல்வாக்கைச் செலுத்தியிருந்தது. டக்ள்ஸ் குழுவின் அரசியல் துறைப் பொறுப்பாளர் கிருஷ்ணபிள்ளை போன்றவர்களின் நீண்டகால அனுபவம், செல்வாக்கு என்பன தலித் முன்னணி போன்ற சாதிச் சங்க அமைப்புக்கள் ஒரு எல்லைக்கு மேற்செல்லாமல் தடுத்திருந்தது. தவிர, தமிழ் நாட்டைப் பிரதியெடுத்திருந்த இவர்களின் ‘தலித்’ முழக்கம் முற்றிலும் அன்னியமாகிய நிலையிலேயே சுதந்திர இளைஞர் முன்னணி செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தது.
தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் சனசமூக நிலையங்களூடாகத் தொடர்புகளை கிராமங்களோடு சாதீய அடிப்படையில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சுதந்திர இளைஞர் முன்னணி ஆறாயிரம் உறுப்பினர்களைக் கொண்டது என சொல்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் தங்களை அறியாமலேயே இன அழிப்பிற்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் துணைபோகிறார்கள் என்பதே உண்மை. இன்று பசில் ராஜபக்ச அரசின் முழுமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்றே பெரும் அழிவுகளை ஏற்படுத்த வல்லவர்கள்.
அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகா சபை என்ற அமைப்பு தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநித்துவப் படுத்துகிறோம் என்று உருவாகித் தோல்விகண்ட வரலாற்றை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருகிறது சுதந்திர இளைஞர் முன்னணி. ஜூவல் போல் போன்ற தாழ்த்தப்படோர் மத்தியிலிருந்த மேல் மத்தியதர வர்க்கத்தினர் உருவாக்கிய மாணவர் அமைப்பு பின்னர் சிறுபான்மைத் தமிழர் மகாசபையாக தேர்தல் வெற்றிகள் சிலவற்றோடு பிளவடைய ஆரம்பித்தது. பஞ்சமர்கள் என்று இலங்கையில் அழைக்கப்பட்ட நளவர், பள்ளர், பறையர், அம்பட்டர், வண்ணார் என்ற ஐந்து சாதிகளையும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக இணைத்து இன்றைய தலித் அமைப்புக்கள் போன்றே தோற்றம்பெற்ற சிறுபான்மைத் தமிழர் மகாசபை தனக்குள்ளேயே மோதும் முரண்பாடுகளின் களமானது. பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வெளியேறி திருவள்ளுவர் சபை என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர்.
பறையர் சமூகத்தின் மேல்தட்டுவர்கத்தினரால் தோற்றம்பெற்ற திருவள்ளுவர் சபை, வறியவர்களைப் புறக்கணித்தது. இதனால் தோன்றிய முரண்பாடுகள் திருவள்ளுவர் சபையை செயலிழக்கச் செய்தது.
இதே காலப்பகுதிகளைத் தொடர்ந்து மார்க்சிய அரசியலை முன்வைத்து சண்முகதாசன் தலைமை தாங்கிய கம்யூனிசக் கட்சி, சாதிச் சங்கங்களை நிராகரித்து, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தீண்டாமை ஒழிப்பு வெகுஜன முன்னணி என்ற இயக்கத்தின் ஊடாக முன்னெடுத்தது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன முன்னணி பல வெற்றிகளைக் கண்டது. கோவில் நுளைவுப் போராட்டம், சிரட்டை எரிப்புப் போராட்டம் போன்றன சாதி ஒடுக்குமுறையின் கோரத்தைத் தணித்தது. அதன் பலன்களை இன்றுவரை காணலாம்.
தெற்காசியாவின் சாதிய ஒடுக்குமுறை காணப்படும் நாடுகளுக்கே முன்னுதாரணத்தை வழங்கும் போராட்டங்களை நடத்தியது தீண்டாமை ஒழிப்பு இயக்கம்.மார்க்சிய லெனினியக் கட்சி அரசியலால் தலைமை தாங்கப்பட்ட இவர்களின் போராட்டங்கள் இலங்கையில் சமூக அசைவை ஏற்படுத்தியது. ஒடுக்கப்பட்ட கூலி விவசாயிகளாகப் பெருமளவு தொழிலில் ஈடுபடும் பள்ளர் சமூகத்தின் பங்கு இந்தப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்கது. இறுதியில் இந்தப் போராட்டங்களுக்கு வறிய மற்றும் கூலி விவசாய வர்க்கத்தைச் சார்ந்த ஏனைய சமூகத்தின் பங்களிப்பையும் காணக்கூடியதாகவிருந்தது.
சிங்கள மக்கள் மத்தியில் கூட இடதுசாரி இயக்கங்களின் பங்களிப்பே சாதிய ஒடுக்குமுறையின் கோரத்தைத் தணித்தது என்பது வரலாற்று உண்மை. எது எவ்வாறாயினும் இன்றும்கூட கொய்கம ரதள போன்ற ஆதிக்க சாதிக் குழுக்களைச் சார்ந்தவர்களே ஆளும்வர்க்கத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை ஜனாதிபதித் தேர்த்தலில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறோம் பேர்வளிகள் என்று சாதிச் சங்கங்கள் இனக்கொலையாளி ராஜபக்சவோடு ஒட்டிக்கொண்டார்கள். அதே தேர்த்தலில் மீன்பிடி கராவ சமூகத்தைச் சேர்ந்த சரத் பொன்சேகாவிற்கு எதிராக தனது கொய்கம ஆதிக்கசாதி வெறியை அவிழ்த்துவிட்ட மகிந்த ‘நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்மீது மீன் வாடை வீசாது’ என்று மார்தட்டிக்கொண்டார். அப்போதே இவர்களின் தலித் முகமூடி ராஜபக்சவின் காழுத்தில் மாலையாக விழுந்து தொங்கியது.
வெற்றிபெற்ற முன்னுதாரணங்களை நிராகரித்து தோல்வியடைந்த வழிமுறைகளையே மீளமைக்கும் முன்னணி போன்ற சாதிச்சங்களின் நோக்கம் சாதி நிக்கம் செய்வதல்ல. சாதி ஒடுக்குமுறையை ஆழப்படுத்துவதே, அதுவே அவர்களின் பிழைப்புவாத அரசியலுக்கு வசதியனது. இலங்கை இனப்படுகொலை அரசு தனது இனப்படுகொலை நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள இவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறது.
கடந்த தேர்தலில் சாதிச்சங்கமான சிறுபான்மைத் தமிழர் மகாசபை போட்டியிட்ட போது இலங்கை அரசும் தலித் முன்னணியும் ஆதரவு வழங்கியது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற 40 வது இலக்கியச் சந்திப்பு என்ற புலம்பெயர் ‘மேதாவிகளின்’ ஒன்று கூடல் நிகழ்வு ஒன்றில் தலித் முன்னணியும் ஆதரவாளர்களும் தமது ‘தடத்தைப்’ பதித்தனர். இவர்கள் சார்ந்தவர்கள் இலங்கையில் அடுத்த சந்திப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர். அதனை எதிர்த்த ஒவ்வொரு மனிதனையும் வெள்ளாளன் எனத் திட்டித்தீர்த்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்குமுறையில் முன்னணியிலிருந்த வேளாளக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ஏனையவர்களை வெள்ளாளர் என்று திட்டியிருக்கிறார்கள்.
இலங்கை பாசிச அரசின் சிங்கள பௌத்த நிலப்பறிப்பிற்குத் துணைபோகும் அரச ஆதரவுக் குழுக்களாக வளர்ச்சியடையும் சாதிச் சங்கங்களுக்கு மாற்றாக தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை வழங்கும் வர்க்க அரசியலே இவர்களை அழிப்பதற்கான ஒரே வழி. இனச்சுத்திகரிப்பைத் துரித்தப்படுத்துவதற்கு சம்பந்தனோடும் சரவணபவனோடும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் தலித் தன்னார்வக் குழுமங்கள் அபாயகரமானவை. ராஜபக்ச பாசிசம் நிலப்பறிப்பை தீவிரப்படுத்த சாதிய முரண்பாடுகளைப் பயன்படுவதற்கு இவர்கள் அனைவருமே துணை போகிறார்கள்.
இன்றுள்ள அபாயகரமான பிளவுவாத அரசியலது புள்ளியைப் பேசாதிருக்குஞ் சந்தர்ப்பத்தை”வேளாத்திமிர்”என்ற உளவியற்றாக்குதலூடாகப் பலர் செய்கின்றனர்.அதுள், நீங்கள் குறிப்பிடும் மேட்டுக்குடி வேளாளர்கள்கூட இலக்கியச் சந்திப்புள் ஒன்றுபட்டு இத்தகைய அரசியலை முன்னெடுப்பதென்பது, இலங்கை அரசினது நிகழ்ச்சிக்குட்பட்டவர்கள் இவர்களென்பதைச் சோபாசக்தியின் ஒவ்வொரு குறிப்புகளிலும்,இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடாத்த அவர்தம் அதீதக் கருத்தியல் வினையாற்றுவதூடாகவும் சோபாசக்தி மிக நுட்பமாகப் பிளவுவாதச் சதியோடு கிழக்குப் பாணி அரசியல் நடாத்துவது காணத் தக்கதே! கிழக்கு மாகாணத்தைப் பிளவுப்படுத்தும் இந்திய -இலங்கை அரசியலுக்கு நியாயத் தன்மையும், கருத்தியந் பரப்புரையையும் ,கிழக்கு மக்களைது நலனாகக் கட்டிய எம்.ஆர்.ஸ்டாலின்-விஜீ போன்றவர்களது அதே பாணியிலேதாம் தற்போது வடமாகாண மக்களைப் பிளந்து, சிங்கள அரசின் பின்னே கணிசமான மக்களை அணிதிரட்ட இத்தகையத் தலித்துவக் குழுக்களும் முனைகின்றனர்.
ஞானத்தின் கருத்தியலுக்கும் அதன் பின்னான மாகாண அரசு-முதலமைச்சர் ,பதவிகளுக்குப் பின் ,கிழக்கு மாகாணத்துள் அடிக்கடி தலைக் காட்டிய பிரான்சுத் தலித்துவ முன்னணியாளர்கள் திட்டமிட்டபடி இலங்கை அரசின் பிளவுவாத அரசியலுக்கான தெரிவுகளைக் கற்கவும், அதுசார்ந்து கூட்டிணைவு பெறவும் முனைந்தனர்.இதுள் ,ஞானம் போன்றவர்களது அதே பிரதேசவாதத்தின் தெரிவு இங்கு, சாதிரீதியாக இயங்குவது தனிப்பட்டவர்களது தெரிவில்லையென்பதையும் அஃது, இலங்கை மற்றும் அந்நியத் தேசங்களது தூண்டுதலென்பதை மிக தெளிவாகச் சொல்லித்தாம் தீரவேண்டும்!
வட மாகாணத்தில் தமிழ்பேசும் இனத்தைக் கூறுபோட்டெழுப்பும் இந்த அரசியலானது இலகை-இந்திய உளவுப்படைகளது நேரடியான கண்காணிப்பின் கீழே இயங்குகிறது.
மொழிவாரியாகவும் ,பிராந்தியவாரியாகவும் வாழும் அநேகமான மூன்றாம் மண்டலத் தேசங்களில் சிறுபான்மையினர் -காலனித்துவ ஆட்சியின்கீழ் இத்தகைய தேசங்கள் மொத்தாமாக அடிமைப்பட்டதைவிட -இன்றிந்தத் தேசங்களது பெரும்பான்மை இனச் சார்புடைய அரசுகளால் சிறுபான்மை மக்களினங்கள் படும் இன்னல்கள் இனவழிப்புவரை யெட்ட முடியுமென்பதற்கு இலங்கையின் இனமுரண்பாடே மிகப்பெரும் சாட்சியாகும்.
இந்தப் பிளவுவாத அரசியலது உச்சம் தமிழ்ச் சிறுபான்மை இனத்துக்குள் பிரதேசரீதியாகவும் ,அதன் அகமுரண்பாடான சாதிரீதியாகவும் மிக வேகத்தோடு நகர்த்தப்படுவதிலிருந்து பயனடையும் சிங்கள ஆதிக்கமானது , இலங்கையில் முழுமொத்தச் சிறுபான்மை இனங்களையும் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க முடியுமென்பதற்குத் தமிழ் தேசியவாத இயக்கவாதமும் வரலாற்றை நிறுவிச் சென்றதன் பலவீனமான இன்றைய சூழல், இலங்கைப் பாசிச அரசுக்குச் சாதகமாகவிருக்கிறது.
தமிழ்த் தேசியவினமானது தனது தேசிய இன அடையாளத்தைச் சிதைப்பதற்கான தயாரிப்புகளை மெல்லத் தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் பரவலான தளமே தலித்தியக்கக் குழுக்களது இன்றைய அரசியல் முகிழ்ப்பாகவிருத்தியுற்றது தற்செயலானது அல்லவென்பதை மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.இதுசாரியானதே!
அழித்து நிர்மூலமாக்கப்பட்டுச் சிங்கள இராணுவக் குடியேற்றங்களுகுள் உட்படுத்தப்பட்ட தமிழ் நிலப்பரப்புடனும் ,சிதறிப் போயிருக்கும் தலைமையுடனும் ,பழமை ஏற்றதாழ்வுகளது கூர்மைப்படுத்தப்பட்ட அரசியலோடும் பிளவுப்படுத்தப்பட்டுவரும் தமிழ்த் தேசியவினமானது அதன் உள் போட்டிகளாலும், அண்டிப் பிழைப்பு அரசியல் பிழைப்பாலும் மீண்டும் ,மீண்டும் தமது இனத்துக்கே துரோகமிழைத்து வருகிறது.இவர்கள் இங்ஙனம் தமக்குள் பிளவுப்பட வைக்கும் அரசியலை விளக்க முற்பட்டு, மிகச் சுருக்கமாகவும் ,தெளிவாகவும் முன் வைத்திருக்னிறீர்கள் நாவலன்.நன்றி!
ப.வி.ஶ்ரீரங்கன்
27.04.2013
பிளவுவாத அரசியலை முனைமழுங்கச் செய்யும் செயல் முறை சார்ந்த அரசியலை முன்னெடுக்கவும் அதன்பாலனா ஊக்கிகளாகவும் செயல் பட மக்கள் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் முயலவேண்டும் அதுவே அழிவின் விளிம்பில் அல்லாடும் அடக்குமுறையில் துயருறும் மக்களுக்கும் நாம் ஆற்றும் சேவையாகும். நன்றிகள் நாவலன்.
சாதிப்பிரிவுகளைக் காட்டி மற்றவர்கள் எம்முள் நுழைகிறார்கள் என்றால் எம்மால் ஏன் சாதிப்பாகுபாட்டுக்கெதிராக இணைந்து போராட முடியாது? அனைத்துத் தமிழரும் அதுபற்றிய புரிந்துணர்வைப் பெறவேண்டும். வெறுமனே அரசியல்வாதிகளைக் குறைகூறிப்பயனில்லை. தாழ்த்தி வைக்கப்பட்டவர்கள் கோபப்படத்தானே செய்வார்கள். மூக்கறுபட்டாலும் முழுவியளத்தக்கு கூடாமல் இருந்தால் சரி என்பதுதானே எமது கொள்கை. அவர்களும் எமது சகோதரர்கள்தானே? அவர்களும் எம்மைப்போல்தானே சிந்திப்பர். மற்றவர்களில்இருந்தே மாற்றம் வரவேண்டும் என்றால் வந்தமாதிரித்தான்.
தாகம் தீர்க்க ஒருவாய் தண்ணீர் கிள்ளிக் குடிக்கமுடியாது உயர் சாதி ? (யார் இவர்களுக்கு இந்த உயர் சாதிப் பட்டம் கொடுத்தது) தடியர்களால் அனுமதி அளிக்கப் படாமல் இருக்கும் துயரம் இன்றும் யாழ்பாணத்தில் திமிர்த்தனமாக தொடரும் போது எவ்வாறு தமிழ் தேசிய அரசியல், அதன் அரங்கில் பொது நிலைப்பாடு எடுத்து வெகுசன போராட்டமாக மக்கள் ஒன்றாக இணைந்து போராட முடியும்.
அவ்வாறு சமத்துவ சமுகத்தை கட்டியெழுப்பவும் சமுகம் சார்ந்து போராடவும் இன்றுள்ள தமிழரசு கட்சியின் காட்டெருமைகள் முயலமாட்டா.
மன்னார் ஆயர் தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்ய கோரியபோது சுமந்திரன் எனும் கோடரி காம்பும் , சம்மந்தன் ஐயாவும் கூறிய பதில் இவர்கள் எங்கு நிற்கிறார்கள்? இவர்கள் என்ன? அரசியலை செய்கிறார்கள்! யாருடன் யாரின் தேவைக்கு ஏற்ப செயல் படுகிறார்கள் என்பதை அறிய முடியும்.
இலங்கை, இந்திய, அமெரிக்க கூட்டுக் களவாணிகளுக்கு தமிழரசு கட்சியின் சந்தர்பவாதமுகமூடிகளும் அவர்களது அரசியலுமே தேவையாக இருக்கும்.
விபச்சார அரசியல் செய்யும் தமிழ் தலைமைகள் எவ்வாறு தமிழ் சமுகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை களைந்து தமிழ் சமுகம் சார்ந்து அவர்களின் உரிமைக்காக போராடுவார்கள் என நம்பமுடியும்
ஆக எம்மத்தியில்பல சாதிச் சங்கங்கள் முளைக்கும் அவர்கள் சிங்கள, இந்திய கூட்டு நிகழ்ச்சி நிரலுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கும் கும்பலாக மாறுவார்கள்.இவை தமிழ் மக்களின் உரிமை குறித்த எழுச்சியை முனை மழுங்கச் செய்து கொண்டிருக்கும்.
தமிழ் நாடு உட்பட இந்திய தேசம் எங்கும் சாதிய இனத்துவ மோதல் விரவி கிடக்க ஆளும் சுரண்டும் வர்க்கம் தனது சுரண்டலை அடக்கு முறைகளை இனத்துவ சிதைப்புகளை செய்கின்றது.
இந்திய உளவு அமைப்புகள் இந்த விபச்சார அரசியலை அதன் பொறிமுறையை இலங்கை இனவெறி அரசுடன் பகிர்ந்து கொள்கின்றது. இதனை நாம் உணர்ந்து கொண்டு எமக்கான அரசியலையும் எமக்கான தலைமையையும் பொது பண்புகளோடு உருவாக்காத வரை அல்லது உருவாகும் வரை எமது விடுதலை தள்ளிப் போகும் அதுவரையில் அடக்கு முறை தொடர்கதையாகும்.
பேரினவாதம் தமிழன் தமிழன் என வதைக்கிறது. புலி துரோகி துரோகி என கொன்று குவித்தது. சாதியத்தை தூக்கியுள்ளவர்கள் வெள்ளாளன் வெள்ளாளன் என வெறி கொண்டு அலைகிறார்கள்.
புகலிட இலக்கியச் சந்திப்பின் தடம் (part-1)
by Ravindran Pa (குறிப்புகள்) on 30 ஏப்ரல் 2013, 05:55 PM க்கு
இலக்கியச் சந்திப்பு சம்பந்தமான உரையாடல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில் நடந்து சர்ச்சைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. இந்த சர்ச்சையை உடனடிக் காரணங்களால் வியாக்கியானப்படுத்துவது முழுமையடையாது. அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் பார்த்தாகவேண்டியுள்ளது. இதனடிப்படையில் எனது பார்வையில் இதை ஒரு பதிவாக எழுதலாமென எடுத்த முயற்சிதான் இது.
இங்கு நான் எழுதும் விடங்கள் பெரும்பாலும் இலக்கியச் சந்திப்பை புறநிலையில் இருந்து பார்க்கும் பார்வைகள்தான். ஏனெனில் 1993 இல் சுவிசில் மனிதம் குழு நடத்திய இலக்கியச் சந்திப்பைத் தவிர வேறு எந்த இலக்கியச் சந்திப்பிலும் நான் பங்குபற்றியதில்லை. சுவிஸில் நான் அங்கம் வகித்த வாசகர் வட்டம் (மனிதம் குழு) இன் செயற்பாடுகளில் நாம் கொண்டிருந்த ஈடுபாட்டையும், செயற்பாட்டையும் மீறி இலக்கியச் சந்திப்பு என்னை மட்டுமல்ல, மனிதம் குழுவிலிருந்த பலரையும் ஈர்க்கவில்லை. இலக்கியச் சந்திப்புகளுக்கு ஓரிரு தோழர்களே மனிதம் குழுவிலிருந்து அவ்வப்போது போய்வந்தார்கள்.
இலக்கியச் சந்திப்பு பற்றிய மனிதம் குழுவின் (அன்றைய) நிலைப்பாடு இலக்கியச் சந்திப்பு தன்னளவில் ஆற்றிய சமூகப் பாத்திரத்தை மறுத்தல் என்பதாகாது. அதற்கொரு முக்கியத்துவம் இருக்கிறது. அதேநேரம் இலக்கியச் சந்திப்புப் பற்றிய ஒரு பெரும் பிம்பத்தை கட்டியமைப்பது தேவையற்றது. அதன் பலவீனங்களை ஜனநாயகத்தன்மை அல்லது பன்முகத்தன்மையின் அடையாளமாகக் காட்டுவது ஏற்புடையதல்ல. அதனடிப்படையில் முரண்பாடுகள் இன்னமும் கூர்மையடையுமே தவிர குறைவடையாது.
புகலிட சிறுபத்திரிகை சூழல்
புகலிட சிறுபத்திரிகைச் சூழலை புரிந்துகொள்ளாமல் இலக்கியச் சந்திப்பை வியாக்கியானப்படுத்துவது இயலாத காரியம் என்பது என் கணிப்பு. இந்த சிறுபத்திரிகைகளின் உருவாக்கம் பெரும்பாலும் 1980 களின் ஆரம்பத்தில் முனைப்புக் கொண்ட ஈழவிடுதலை இயக்கங்களிலிருந்து வந்தவர்களாலும், இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களாலும் ஆரம்பமாகியது. இன்னுமொரு குறிப்பிடத்தக்க தரப்பினராக இடதுசாரி இயக்கங்களில் இருந்தவர்கள், அதன் (1970 களின் ஆரம்பத்தைய) சாதியெதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் என்பவர்களும் இருந்தார்கள்.
1983 இன் இனக்கலவரமும், 80 களின் நடுப்பகுதியில் இயக்கங்கள் மீதான புலிகளின் தடைகளும் அழித்தொழிப்பும், இயக்கங்களின் உள்முரண்பாடுகளில் பிதுங்கி வெளியே விழுந்தவர்களுமாக ஒரு பகுதியினரின் அகதி வாழ்வு தொடங்குகிறது. இந் நிலைமைகளைப் பாவித்து பொருளாதார தேவைகளை ஒட்டி பலர் அகதிகளாக மேற்குலகிற்கு இடம்பெயர்ந்தனர். பொருளாதார தேவை என்பதும் ஒரு அரசியல் பிரச்சினைதான் என்றளவில், அரசியல் அகதிகள் என்ற சொல் பொதுமையாகப் பாவிக்கப்படுவது சரியெனவே தோன்றுகிறது.
வந்துசேர்ந்த அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களிடையே ஒரு பகுதியினர் தளத்தில் (நாட்டில்) இயக்க அரசியலில் நேரடியாக ஈடுபட்டவர்களும், பின்தளத்தில் (இந்தியாவில்) ஆயுதப்பயிற்சிக்கென போய்வந்தவர்களும், அந்த இயக்கங்களுக்காக ஓடித்திரிந்து வேலைசெய்தவர்களும் இருந்தனர். அதேநேரம் புகலிட நாடுகளில் இந்த இயக்கங்களில் சேர்ந்து ஒரு பகுதியினர் அர்ப்பணிப்புடன் வேலைசெய்தனர். பிரச்சாரம் செய்தல், பணம் சேகரித்தல் என நம்பிக்கையுடன் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
அகதிச் சூழல்
தமிழ் அகதிகள் இந்த நாடுகளின் மக்களுடன் தகமைந்த வாழ்வை தொடங்கிக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர். நிறவெறி, மொழிப்பிரச்சினை, கலாச்சார முரண்பாடு, காலநிலைக்கு பழக்கப்படாமை, பன்முகத்தன்மையற்ற சிந்தனைமுறையில் பழக்கப்பட்டிருந்தமை, இதற்குமுன்னரான தமிழ்ச் சந்ததியென்ற ஒன்று இல்லாமை (இலண்டன் விதிவிலக்கு) எல்லாமே ஒரு அந்நியப்பட்ட தன்மையில் அவர்களை வைத்திருந்தது. சாதியச் சிந்தனைமுறைகளும், சமூக உறவுமுறைகளும் அதிகாரம் செலுத்துதல், ஒடுங்கிக்கொள்ளல் என்ற மனோபாவத்தை வளர்த்துவிட்டிருந்த நிலையில், வெள்ளையினக் கருத்தியலுக்குள் அகப்பட்டிருந்த நம்மவர் வெள்ளையினத்தவர் முன்னால் ஒடுங்கிக்கொள்ளும் சுபாவத்தை வரித்துக் கொண்டனர். தமக்குள் குறுகிப்போயிருந்தனர்.
இது நாட்டுக்கு நாடு வேறுபாடுகளையும் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். பிரான்சில் பாரிஸிலும், இங்கிலாந்தில் இலண்டனிலும், கனடாவில் ரொறன்ரோவிலும் தமிழர்கள் கூட்டமாக வாழும் நிலை ஏற்பட்டது. ஆனால் சுவிஸ், யேர்மன் இலும் ஸ்கன்டினேவியன் நாடுகளிலும் இப்படி ஒன்றுகுவியும் நிலை அனுமதிக்கப்படவில்லை. நாம் போய் இருக்கவேண்டிய மாநிலங்களை இந்த நாடுகளே தீர்மானித்தன. அதனால் நாடு முழுவதும் பரந்து கிராமங்கள், மலைப் பகுதிகளென பரம்பி அந்தந்த நாட்டுச் சமூகங்களுடன் ஒன்றுகலந்து இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இது வாழ்நிலைகளில், தகவமைதலில், மொழியாற்றலில் எம்மவரிடையே வேறுபாடான நிலைகளை நாட்டுக்கு நாடு தோற்றுவித்தது.
ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போவதானால் நகர நிர்வாகத்தில் (பொலிஸ்) அனுமதி பெற்றே போக வேண்டிய நிலை யேர்மனியில் இருந்தது. கடவுச் சீட்டு இல்லாததால் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு போவதை நினைத்துப் பார்க்கவே முடியாது. சிறு உதவித் தொகையை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு பல வருடங்கள் (10 இலிருந்து 20) காத்திருக்க வேண்டியிருந்தது. நாட்டுக்கு நாடு இது வேறுபடுகிறது.
சிறுபத்திரிகைகளின் தோற்றம்
இந்தக் காரணிகள் ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் மற்றைய இயக்கங்களிலிருந்து வந்தவர்கள் பயங்கரமான மன உளைச்சல், ஆத்திரம், இயலாமை, ஏமாற்றம், குற்றவுணர்வு… என்ற மனித உணர்வுகளுக்குள் சிக்குப்பட்டு அல்லாடினார்கள். அவர்களுக்கிடையில் அறிமுகம், பகிர்வு, உறவு… என தொடர்பாடல் தொடங்குகிறது. பின்னர் இது ஐரோப்பா கனடா என சிறுபத்திரிகைகள் மெல்லத் தலையெடுத்து, சுமார் 40 சிறுபத்திரிகைகள் வரை வெளிவருவதற்கு வழியமைத்தது. குழுக்களாகவும் சில செயற்படத் தொடங்கின. சுவிசிலிருந்து வாசகர் வட்டமும் (மனிதமும்), கடனாவிலிருந்து தேடகமும் ஒப்பீட்டளவில் பெரிய குழுக்களாக இருந்தன.
மனிதம் என்ற பெயர் வருமுன் அதன் முதற்தோற்றம் வாசகர் வட்டம் என்ற சிறு குழுவாகவே இருந்தது. வாசகர் வட்டம் புலிகளின் அடாவடித்தனத்துக்கு அகப்படாமல் இருப்பதற்காக இரகசியமாக கூடியது. புலிகளுக்கு இது தெரியவர, நாம் துரோகக் குழுக்களென பிரச்சாரம் செய்தார்கள். அதனால் நாம் வெளியில் வரவேண்டியிருந்தது. மனிதம் என்ற வீடியோ சஞ்சிகையை 1988, 89 களில் (அரசியல், சமூக பார்வைகளை முன்வைத்து) வெளிக்கொணர்ந்தோம். 5 காணொளி சஞ்சிகைகள் வந்தன. இதுவே மனிதம் குழு என்ற பெயரால் அழைக்கப்பட காரணமாயிற்று. 1989 செப்ரம்பரில் -மனிதம் என்ற பெயரிலேயே- வாசிப்புக்கான கையெழுத்துச் சஞ்சிகை உருவத்துக்கு அது மாறியது.
இவைபற்றி எழுத நிறைய இருக்கிறது. அன்றைய நிலையை ஓரளவாவது புரிந்துகொள்ள வைக்க உதவும் என்ற வரையறைக்குள் நின்றுதான் இவற்றைச் சொல்கிறேன். இங்கே நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். (இயக்கங்கள் தவிர்ந்த) சிறுபத்திரிகைகள், அல்லது அது சார்ந்த குழுக்களின் பெயர்கள் பெரிதும் அரசியற் சொற்களாக இல்லாததுதான் அது. இது ஒருவகை தற்காப்பு உத்தியென கொள்ள இடமிருக்கிறது. மனிதம், தூண்டில், சிந்தனை, சுவடுகள், சமர், சஞ்சீவி, அஆஇ, சுமைகள், காலம்… என சஞ்சிகைகள் தம்மை பெயரிட்டுக் கொள்ள, வாசகர் வட்டம், தேடகம்.. என குழுப் பெயர்களும் இருந்தன. இலக்கியச் சந்திப்பு என்ற பெயரிடலும் இதன் அடிப்படையில் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு. (இச் சிறுபத்திரிகைகளில் எழுதியவர்களில் பெரும்பாலானோர் புனைபெயர்களில்தான் எழுதினார்கள்.)
இலக்கியச் சந்திப்பின் தோற்றம்
யேர்மனிக்குள் வெளிவந்த சஞ்சிகையாளர்களையும் வாசகர்களையும் சந்திக்க வைத்து கருக்கொண்ட ஒரு தொடர்பாடல் குழுவாக நாம் இலக்கியச் சந்திப்பின் தோற்றத்தை பார்க்கலாம். புதுமை, சிந்தனை, தூண்டில், வண்ணத்துப் பூச்சி, ஏலையா, வெகுஜனம், கலைவிளக்கு, பெண்கள் வட்டம், யாத்திரை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களும் வாசகர்களும் 24.9.88 அன்று யேர்மனியின் கேர்ண் நகரில் (முதல் இலக்கியச் சந்திப்பு) சந்தித்துக் கொண்டனர். இதை “ஓர் அதிசயம்“ என்று தூண்டிலில் ஜோசப் என்பவர் எழுதியிருந்தார். “இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மஞ்சள் ஏடுகளின் ஆக்கிரமிப்பை உடைப்பது, சமுதாய விழிப்பை ஏற்படுத்துவது, அரசியல் கருத்துகளைப் பரவலாக்குவது என்ற நோக்கங்களை அனைத்து சஞ்சிகை ஆசிரியர்களுமே பரவலாகக் கொண்டிருந்தார்கள்.“ என அவர் குறிப்பிட்டுமிருந்தார். இலக்கியச் சந்திப்பு இலக்கியம் பேசுவதற்காக மட்டும் உருவாகியதல்ல என்பதை இந்தக் கூற்று வெளிப்படுத்துகிறது.
இது பின்னர் படிப்படியாக மற்றைய புகலிட நாடுகளின் சஞ்சிகையாளர்கள் வாசகர்கள் என விரிந்த தளத்துக்கு வந்தது. இதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களில் பார்த்திபன், பீற்றர் ஜெயரத்தினம், ஸீனி லோகன், பாரதிதாசன், பரா மாஸ்ரர், மல்லிகா, சுசீந்திரன், இன்பா, சிவராஜன், புஸ்பராசா, சபாலிங்கம், கலைச்செல்வன், லக்ஷ்மி, அசோக் … என நீண்ட ஒரு பட்டியல் இருக்கிறது. (இவர்களில் சபாலிங்கம் புலிகளால் பாரிஸில் வைத்து கொலைசெய்யப்பட்டார்.)
இலக்கியம், அரசியல் இடையிலான உறவு என்பது பிரிக்கமுடியாதது. இன்னமுமாய் அகதிநிலை மாந்தர்களிடம் போராட்ட அரசியலானது இலக்கியத்துடன் எவ்வாறான கூட்டியக்கத்தை கொண்டிருக்கும் என்ற புரிதல் கவனிப்புக்கு உரியது. வெளிவந்த சிறுபத்திரிகைகள் பெரும்பாலுமே அரசியல் உள்ளடக்கம் கொண்டவையாக இருந்தன. எனவே இலக்கியச் சந்திப்பின் உள்ளடக்கத்தை இவை தீர்மானித்தன. இலக்கியச் சந்திப்பின் உரையாடல்களில் அரசியல் மிதப்பாகியது.
புகலிடத்தில் புலிகளின் விரிவாக்கம்
மற்றைய இயக்கங்களின் அழிவுகளோடும் அழிப்புகளோடும் புலிகள் அமைப்பு தன்னை பெருமெடுப்பில் கட்டமைக்க முனைகிறது. இதை கருத்தியல் தளத்தில் வேலைசெய்வதன் மூலமும் எட்ட முனைகிறார்கள். ஒருபுறம் புலிகளின் சாகசங்களை காட்சிப்படுத்தலும் விவரித்தலுமென இருக்க, மறுபுறம் துரோகக் குழுக்கள், ஒட்டுக் குழுக்கள், சமூகவிரோதக் கும்பல்.. என்றவாறான மற்றைய இயக்கங்களின் மீதான அவதூறுகளும் நடந்தேறுகின்றன. மற்றைய இயக்கங்களை ஆதரிப்போர் கண்காணிக்கப்படுகின்றனர்.
தனிநபர்களின் முயற்சியில் நடந்த சமூக அசைவியக்கங்கள் புலிகளால் உள்வாங்கப்படுகின்றன. வானொலிகள், கோவில்கள், சங்கங்கள், தமிழ்ப் பாடசாலைகள் என சமூக ஊடாட்ட அமைப்புகளையெல்லாம் கையகப்படுத்தியது புலிகள் அமைப்பு. இந்த கையகப்படுத்தல் தொலைக்காட்சிவரை போய்ச் சேர்ந்தது. எந்த இயக்கத்தவரும் பகிரங்கமாக கூடவே முடியாத நிலை. பணம் கொடுக்க மறுப்பவர்களை “நாங்கள் நாட்டிலை பார்த்துக் கொள்ளுறம்“ என்ற வெருட்டலுடன் அடிபணிய வைத்தார்கள். இவை 80 களின் இறுதிப் பகுதிகளின் நிலை.
இலக்கியச் சந்திப்பின் அரசியல்
புகலிடத்தின் அநேகமாக எல்லா சமூக இயங்குதளங்களும் புலிகளிடம் போய்ச்சேர்ந்ததும், முக்கியமான சிறுபத்திரிகைத் தளம் இந்த மாற்று அரசியல் தளத்தில் நின்றதற்கு உறுதுணையான ஒரு இணைப்புக் குழுவாக இலக்கியச் சந்திப்பை வரையறுக்க முடியும். இலக்கியச் சந்திப்புக்கான அரசியல் உண்மையில் வெளியிலிருந்து -அதாவது புகலிட சிறுபத்திரிகைகளிலிருந்தும், இடதுசாரி சிந்தனைகொண்ட தனிபர்கள், குழுக்களிடமிருந்தும்- உள்ளே வந்ததுதான். சிறுபத்திரிகைகளின் உள்ளடக்கம் பேசும் அரசியல் இலக்கியச் சந்திப்பின் விவாதப் பொருளாகி -உடன்பாடுகளோடும் வித்தியாசங்களோடும்- ஒரு குழு வடிவத்தை படிப்படியாக வடிவமைத்துக்கொண்டே இருந்தது. இதுவே பொதுமைப்படுத்தலாக இலக்கியச் சந்திப்பு ஜனநாயகத்துக்காக, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நின்ற பாரம்பரியம் உடையது என தனது கோசத்தை உயர்த்திப் பிடிப்பதற்கு அர்த்தத்தை வழங்கியது.
புகலிட நாடுகளில் வந்த இந்த சஞ்சிகையாளர்கள் தனித்தனித் துருவமாக இருந்திருப்பின், அவையும் புலிகளிடம் பறிபோயிருக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கும். அந்தளவில் ஒரு இணைப்புப் பாலமாக வாசகர்களையும் சேர்த்து இலக்கியச் சந்திப்பு உருவாகியதன் மூலம் அன்றைய சூழலில் ஒரு வரலாற்றுத் தேவையை பூர்த்திசெய்திருக்கிறது என சொல்லலாம். ஆரம்பத்தில் புலிகளின் அராஜகத்துக்கெதிராக விடாப்பிடியாக இயங்கும் மனோநிலையையும், சிறுபத்திரிகைகளை முடிந்தவரை கொண்டுவரும் உற்சாகத்தையும் உளவியல் தளத்தில் அது வழங்கியது.
சிறுபத்திரிகைகள் பலவும் புலிகளை விமர்சிப்பதோடு நின்றுவிடவில்லை. அவை அரசு, மற்றைய இயக்கங்கள், பேரினவாத கட்சிகள், தமிழ்க் கட்சிகள், ஜேவிபி.. என அரசியல் சக்திகளையும் விமர்சித்தன. முஸ்லிம் மக்கள்மீதான தமிழ் இனவாத செயற்பாடுகள் பற்றியும் பேசின. இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் தலையீடு மற்றும் அதன் இராணுவத் தலையீடு என்பன பற்றியும் பேசின. அத்தோடு தாம் வாழும் நாடுகளில் முகங்கொடுத்த நிறவெறி, பண்பாட்டுப் பிரச்சினைகள் என்பனவும் அவைகளின் பேசுபொருளாக இருந்தன. சாதி ஒடுக்குமுறை, பெண் ஒடுக்குமுறை போன்ற சமூக ஒடுக்குமுறைகள் பற்றியும் அவை பேசின. குழந்தை வளர்ப்பு, தமிழ்க் கல்வி முறைமைகள், மதம் பரப்பும் அமைப்புகள், பண்பாட்டின் பெயரில் நடந்த கொண்டாட்டங்களின் விகாரங்கள் என்பன பற்றியும் பேசின. பெண்ணியச் சிந்தனை கொண்டவர்களால் பெண்கள் வட்டம், நமது குரல், கண், ஊதா, சக்தி போன்ற பெண்கள் சஞ்சிகைகள் பெண்களின் முழுமையான உழைப்புடன் வெளிவந்தன.
இந்த பன்முக உள்ளடக்கம்கொண்ட சிறுபத்திரிகை யாளர்களினதும், அதன் வாசகர்களினதும் சந்திப்பு என்பது ஒரு பன்முகப் பார்வைகளுடனும் வித்தியாசங்களுடனும் சந்தித்து உரையாடும் களமாக இலக்கியச் சந்திப்பை உருவமைத்ததில் முக்கிய பங்கை ஆற்றின. அதில் புலிகள் உட்பட எவரும் பங்குகொள்ளவும் கருத்துச்சொல்லவும் கோட்பாட்டளவில் வாசல்கள் திறந்திருந்தன. அச்சமும் இருந்தன. புலிகளின் நெருக்குதலை சந்தித்துக்கொண்டிருந்த காலத்தில்கூட, அவர்கள் அதுவும் பொறுப்பாளர்கள்கூட அதற்குள் இலக்கியச் சந்திப்பின் வாசலுக்குள்ளால் வந்து ஒரு “மார்க்கமாக” உட்கார்ந்து இருந்த சம்பவங்களும் உண்டு.
இலக்கியச் சந்திப்பின் கட்டமைப்பு
எனவே இது ஒரு அமைப்பு வடிவமாக வரையறுக்கப்பட்டு தொடங்கப்பட்டதல்ல. அதற்கான சட்டதிட்டங்கள், நிர்வாக முறைமைகள், இலக்குகள், வேலைமுறைகள் எதுவும் வரையறுக்கப்படவில்லை. இது கூட்டுவிவாதங்களையும், தோழர்களுக்கு இடையிலான தொடர்பாடலையும் உறவுகளையும் பேணியதோடு தனிக்குரல்களை கூட்டுக் குரலாக ஒலிக்கவைக்கும் களமாகவும் மட்டுமே இருந்தது. இதற்கு மேலாக, வெகுஜன அரசியல் தளத்தில், செயற்பாட்டுத் தளத்தில
கீழுள்ள இணைப்பில்…
(part-2)
http://www.facebook.com/notes/ravindran-pa/test/498728216864944
xதிருவள்ளுவர், ஔவையார்,நந்தனார், கண்ணபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற எனதில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு “வள்ளுவ பறையர்கள்”, இவர்கள் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் BC ஆக கன்வெர்ட் ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக கன்வெர்ட் ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை. இந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.