இலங்கையில் போர்நிறுத்தம் கோரி லண்டனில் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்திவருகின்ற புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் நாடாளுமன்ற வீதியை மறித்து சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இலங்கையின் வடபகுதியில் போர் நடக்கும் இடத்தில்,பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் இலங்கை இராணுவத்தினர் நுழைந்துவிட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து, நடைபாதையை விட்டு நகர்ந்து நாடாளுமன்ற வீதியிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் அமர்ந்து விட்டார்கள்.
இந்த இடத்தில் கடந்த 15 நாட்களாக இலங்கை இளைஞர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்கள் மாத்திரமல்லாமல், இலங்கையில் இந்திய இராணுவம் இருப்பதாக குற்றஞ்சாட்டும் அவர்கள், இலங்கையில் இருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் கோஷமிட்டார்கள்.
தவிர இலங்கை நிகழ்வுகள் குறித்தும் தமது போராட்டங்கள் குறித்து ஊடகங்கள் சரியாக செய்தி வழங்கவில்லை என்று அவர்கள் குறைபட்டார்கள். குறிப்பாக பிபிசிக்கு எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதற்கிடையே லண்டன் பெருநகரப் பொலிஸார் இந்த வீதிமறியல் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வீதிமறியலில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்காக அவர்களுடன் தாம் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக கூறியுள்ளனர்.
தற்போது சுமார் 2000 பேர் வரை நாடாளுமன்றத்தை சுற்றவரவுள்ள வீதிகளில் கூடியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







