கடந்த 26-12-2009 அன்று யாழ் நகரில் இடம்பெற்ற “ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் எதிர்காலமும்” என்னும் தலைப்பிலான பகிரங்க அரசியல் கருத்தரங்கின் உரை:
கடந்த முப்பது வருட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையனாலோ அந்த அதிகாரக் கதிரைக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதியினாலோ இந் நாட்டின் உழைக்கும் மக்களுக்கும் குறிப்பாக தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்களுக்கும் எவ்வித நன்மைகளோ விமோசனங்களோ கிடைத்ததில்லை. அதற்குப் பதிலாக பொருளாதார நெருக்கடிகளையும் இன ஒடுக்குமுறைகளையும் யுத்தக் கொடுமைகளையும் மட்டுமே அனைத்து மக்களும் அனுபவிக்க வேண்டியவர்களாயினர்.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களில் எவர் வெற்றி பெற்றாலும் உழைக்கும் மக்களின் பொருளாதார வாழ்க்கை நெருக்கடி தீரப்போவதும் இல்லை தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்போவதும் இல்லை. இதனை உணர்ந்து கொள்ளாது இப்பிரதான வேட்பாளர்களில் ஒருவரைத் தெரிவு செய்வது மக்கள் தமக்கான மேலும் பலத்த அடிகளைத் தரக்கூடிய ஒருவரைத் தெரிவு செய்வதாகவே அமையக் கூடியதாகும். சவுக்கால் அடிவாங்குவதா அல்லது இரும்புச் சப்பாத்தால் உதை வாங்குவதா என்பதைத் தீர்மானிப்பதற்கான நிர்ப்பந்தம் மிக்க தேர்தலாகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காணப்படுகிறது. இத்தகைய தேர்தலில் மக்கள் யாருக்கும் வாக்களிக்காது தேவைதானா என்பது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியதாகும். எனவே தான் மக்கள் இத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காது வாக்குச் சீட்டுக்களைச் செல்லுபடியற்றதாக்கித் தமது எதிர்ப்பையும் வெறுப்பையும் தெரிவிக்க வேண்டும் என எமது கட்சி வேண்டிக் கொள்கிறது.
இவ்வாறு யாழ் நகரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் எதிர்காலமும் என்னும் தலைப்பில் நடைபெற்ற புதிய ஜனநாயக கட்சியின் பகிரங்க அரசியல் கருத்தரங்கில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் கூறினார். பெருந்தொகையான அரசியல் ஆர்வலர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்ட மேற்படி கருத்தரங்கு யாழ் – ப. நோ. கூ. சங்க மண்டபத்தில் 26.12.2009 அன்று பிற்பகலில் இடம்பெற்றது. வட பிரதேசச் செயலாளர் கா. கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற இவ் அரசியல் கருத்தரங்கில் அரசியல் குழு உறுப்பினர் தோழர் க.தணிகாசலம் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் செந்திவேல் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் போட்டியிட்டு நிற்கும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் ஒரே யுத்தத் தேரில் இருந்து யுத்தத்தை முன்னெடுத்தவர்கள். இவர்கள் இருவரினதும் பிரதான பிரச்சாரம் யார் யுத்த வெற்றிக்கு வழிவகுத்தவர் என்பதேயாகும். அத்தகைய கோர யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டனர். இன்றும் தமது உறவுகளுக்கு என்ன நடைபெற்றது என்று தெரியமுடியாத சோக நிலையில் தாய்மாரும் , மனைவிமாரும், சகோதரர்களும், உறவுகளும் கலங்கி நிற்கிறார்கள். இவற்றுக்குக் காரணமான இரண்டு பிரதான வேட்பாளர்களும் எந்த முகத்தோடு வந்து தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்க முடியும். யாராவது இவ்விருவரில் ஒருவருக்கு வாக்களிக்கும்படி கேட்பார்களேயானால் அத்தகையவர்களை எந்தப் பட்டியலில் சேர்க்கமுடியும். எனவே தன்மானம் உள்ள மனச்சாட்சி மிக்க எந்தத் தமிழரும் இவர்களுக்கு எவ்வாறு வாக்களிக்க முடியும் என்ற கேள்வியையே எமது கட்சி எழுப்புகிறது.
தத்தமது பாராளுமன்றப் பதவிகளுக்கும் அமைச்சர் பதவிகளுக்கும் ஏனைய வசதி வாய்ப்புகளுக்குமாகவே பிரதான வேட்பாளர்களின் பக்கம் தமிழ், முஸ்லிம, மலையகத் தலைமைகள் ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகிறார்களே தவிர தாம் பிரதிநிதித்துவம் செய்யும் ஏகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்காகவோ அன்றி விருப்பத்திற்காகவோ இல்லை என்பது தெளிவானது. இத்தகைய சூழலிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் சார்புநிலை நின்று முடிவெடுக்க முடியாது நின்று திண்டாடி வருகிறது. அவர்கள் வடக்கு, கிழக்கில் சென்று தமிழ் மக்கள் மத்தியில் அபிப்பிராயத்தைப் பெறமுடியாத கையறு நிலையில் இருந்து வருகிறார்கள். காரணம் நடந்து முடிந்த பேரழிவு யுத்தத்திற்கும் தொடரும் பேரவலங்களுக்கும் இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ள ஐந்து தமிழ் கட்சிகளும் பொறுப்பும் பதிலும் கூறவேண்டியவர்களேயாவர். அவர்கள் முப்பத்துமூன்று வருடங்களுக்கு முன்பு வைத்த தவறானதும் சாத்தியமற்றதுமான தமிழீழக் கோரிக்கையான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மோசமான எதிர்விளைவையே இன்று தமிழ் மக்கள் அனுபவித்து நிற்கின்றனர்.
இத்தகைய குற்ற உணர்வே தமிழ்க் கூட்டமைப்பை தமிழ் மக்கள் மத்தியில் தலைகாட்ட விடாது தடுத்து வருகிறது. அன்று செய்த தவறை இன்று சுயவிமர்சன ரீதியில் ஏற்றுக் கொள்ளவோ மறுபரிசீலனை செய்யயவோ தயாரில்லாத நிலையில் அவர்கள் மற்றொரு பாரிய தவறையும் துரோகத்தையும் மீண்டுமொரு முறை தமிழர்களுக்குச் செய்வதற்குத் துணிந்துள்ளார்கள். அதன் போக்கிலேயே பிரதான இரண்டு வேட்பாளர்களுடன் பேசி வருகிறார்கள். இவர்கள் தவறான முடிவுகளை எடுத்து அவற்றைத் தமிழ் மக்கள் மீது திணிக்கவே முற்படுவார்கள் என்றே எதிர்பார்க்க முடியும்.
எனவே தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் மத்திக்கு வந்து மக்களின் கருத்தறிந்து முடிவை எடுக்க இயலாமல் கொழும்பில் இருந்தவாறே தமிழ் மக்களுக்கு ஆணையிடும் ஆதிக்க அரசியலையே தொடர்கிறார்கள். இந் நிலையில் தமிழ் மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம். கடந்த காலங்களில் இணக்க அரசியல், எதிர்ப்பு அரசியல், போராட்ட அரசியல் என்றெல்லாம் கூறிவந்த நிலைகளால் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியவில்லை. இப்போது சலுகை அரசியலை முன்னெடுக்க சிலர் முற்படுகிறார்கள். இது உருப்படியான அரசியல் தீர்வைக் கோராது முன்னெடுக்கப்படும் அடிமைத்தன அரசியலாக இருக்க முடியுமே தவிர தமிழ் மக்கள் இதுவரை கொடுத்த இழப்புகளுக்குரிய விலையாக இருக்கப் போவதில்லை.
ஒரு புறத்தில் பௌத்த சிங்களப் பேரினவாதம் இந் நாட்டின் தமிழ்த் தேசிய இனத்தை ஒடுக்கி வந்ததென்றால் மறுபுறத்தில் தமிழ்ப் பழைமைவாத குறுந் தேசியவாதம் தமிழ் மக்களின் அழிவுகள், இழப்புகளுக்கு காரணமாகி வந்துள்ளது. எனவே அதே பாதையில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை வழங்க தமிழ்த் தேசியவாதிகள் முற்படுவதும் அதனை செக்கிழுத்த பாதையில் மக்கள் கேள்வி நியாயமின்றி ஏற்றுக் கொள்வது அடிமைத்தன அரசியலுக்கே வழிவகுக்கும்.
எனவே தான் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு இன்று தேவைப்படுவது மாற்று அரசியல் மார்க்கமாகும். அந்த மார்க்கம் உழைக்கும் மக்கள் அனைவரினதும் ஐக்கியப்பட்ட வெகுஜனப் போராட்ட மார்க்கமாகவே அமைய முடியும். தமிழ்த் தேசிய இனம் எவ்வகையிலும் தனது சுயநிர்ணய உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் சமத்துவத்திற்குமான கோரிக்கையைக் கைவிடவோ சமரசத்திற்கு உள்ளாகவோ முடியாது. ஆதலினாலேயே எமது புதிய-ஜனநாயக கட்சி தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஐக்கியப்பட்ட இலங்கையில் பல்லினத் தேசியத்தை ஏற்றுக்கொள்ளும் சுயாட்சி முறை வழங்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தி நிற்கிறது. இதனை வென்றெடுப்பதற்கு அந்நிய ஏகாதிபத்திய சக்திகளையோ மேலாதிக்கவாதிகளையோ நம்பிச் செல்லும் போக்கை கைவிட்டு சிங்கள உழைக்கும் மக்களோடு இணைந்து நின்று சகலரையும் அடக்கி ஒடுக்கி வரும் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்க சக்திகளை எதிர்த்துப் போராடும் புதிய மாற்று அரசியல் பாதையில் தமிழ் மக்கள் பயணிக்க வேண்டும். இதனையே எமது கட்சி இவ்வேளை வற்புறுத்தி நிற்கிறது.
தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் இளந் தலைமுறை கடந்த காலங்களின் வரலாற்றுப் பாடங்களின் பட்டறிவால் குறைந்தது ஒரு முற்போக்கான தமிழ்த் தேசியத்தையாவது முன்னெடுக்க முன்வரல் வேண்டும். இதுவரையான பிற்போக்கு பழைமைவாத தமிழ்க் குறுந் தேசியவாதத்தை நிராகரித்து தமிழ் மக்கள் மத்தியிலான அனைத்து மக்கள் பிரிவினரையும் ஐக்கியப்படுத்தக் கூடிய முற்போக்கு தேசியத்தை முன்னெடுக்க முன்வருமாறு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். வெறுமனே இனமொழி உணர்ச்சிகளை பழைமைவாதநிலை நின்று எழுப்பி சுயநலப் பதவி வழியிலான பாராளுமன்ற ஆதிக்க அரசியல் செய்யும் பழைய நிலைப்பாடு நிராகரிக்கப்பட வேண்டும்.
எனவே தமிழ்த் தேசிய இனம் இத்தனை அழிவுகள் இழப்புக்கள் அவலங்களுக்குப் பின்பு மிக நிதானமாகவும் தூரநோக்குடனும் உறுதியான சரியான அரசியல் மார்க்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் ஆரம்பத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுபட்ட எதிர்ப்புக் குரலாகவும் வெறுப்பின் அடையாளமாகவும் வெளிப்படுத்தவேண்டும். அதற்கான ஒரே வழிமுறை இத் தேர்தலை நிராகரித்து வாக்குச் சீட்டுக்களை செல்லுபடியற்றதாக்குவதேயாகும். இதுவே அடுத்த கட்டத்தின் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வை வற்புறுத்த உள்ள ஒரு ஆரம்ப சமிக்ஞையாகவும் அமைய முடியும் என்றும் கூறினார்.
உருப்படியான கருத்து
ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் எதிர்காலமும் என்னும் தலைப்பில் புதிய ஜனநாயக கட்சியின் அரசியல் கருத்தரங்கில் இன்றைய, மக்களின் நிலை, நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு நிங்கள் கூறிய கருத்துக்கள் எல்லாம் ஏற்றுகொள்ளக்கூடியதாக உள்ளது, “தமிழ்த் தேசிய இனம் இத்தனை அழிவுகள் இழப்புக்கள் அவலங்களுக்குப் பின்பு மிக நிதானமாகவும் தூரநோக்குடனும் உறுதியான சரியான அரசியல் மார்க்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்”.
கடைசியில், “அதன் ஆரம்பத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுபட்ட எதிர்ப்புக் குரலாகவும் வெறுப்பின் அடையாளமாகவும் வெளிப்படுத்தவேண்டும். அதற்கான ஒரே வழிமுறை இத் தேர்தலை நிராகரித்து வாக்குச் சீட்டுக்களை செல்லுபடியற்றதாக்குவதேயாகும்”
என்று கூறியுள்ளீர்கள். ஆனால் அது முன்பு புலி செய்தது போலவே ஆகிவிடும். எனென்றால் இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு அமைய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வரும் நிலை உள்ளது.
அதிலும் இந்தமுறை புலிகளின் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு, புலிகளின் தலைமையை நிர்மூலப்படுத்துவதை விட்டிட்டிடு, இடையில் ஆக்கப்பட்ட அப்பாவி மக்களை பகடை காய்களாக பாவித்தது மட்டுமல்லாமல் அவர்களை மூச்சுகூடவிடவிடாமல் தொடர்ந்து குண்டு மழை பொலிந்து 30,000 இற்கு மேற்ப்பட்ட மனித பேரழிவை உண்டு பண்ணிய இராணுவ தலைமை; அரசியல் தலைமை இன்று அவர்களை இழந்து நிற்கும், பெற்றோரிடம், சகோதரரிடம், கணவன்மாரிடம், மனைவிமாரிடம், பிள்ளைகள்ளிடம், உறவினரிடம் வாக்கு கேட்கும் நிலை.
இதில் இவர்கள் வாக்களிக்கிறார்களோ இல்லையோ பெருன்பான்மையினத்தை சேர்ந்த ஒருவரே, அதுவும் இம்மக்களின் துயரத்திற்கு பொறுப்பானவர்களில் ஒருவரே ஜனாதியாக போகிறார், அதுவும் கிழக்கிலும், வடக்கிலும் இரு அமைச்சர்களின், மாற்று தமிழ் தலைமைகளின் பிரச்சாரத்தடன் ஒருவரும், சம்பந்தன் கோஸ்டியின் பிரசாரத்துடன் மற்றையவரும் வலம் வருகிறார்கள்.
இதுவே அடுத்த கட்டத்தின் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வை வற்புறுத்த உள்ள ஒரு ஆரம்ப சமிக்ஞையாகவும் அமைய முடியும் என்று கூறியுள்ளீர்கள்.
இதில் தாங்கள் கூறும் அறிவுறுத்தல், கருத்தில் சகல சிறுபான்மை இனத்தவரான தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை களம் இறக்கினாலோ அல்லது ஒற்றுமையாக சேர்ந்து பகிஷ்கரித்தாலோ அன்று வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை. அதிலும் ஒற்றுமையாக பகிஷ்கரித்தாலும் அவர்களில் ஒருவரே வருவார், ஆனால் சர்வதேசத்திற்கு காட்டலாம்.
இதற்கு நீங்கள் உங்கள் விளக்கம் பதிலை இவ் இணையம் ஊடாக வைப்பீர்கள் என எதிபார்க்கிறேன், நன்றி.
– அலெக்ஸ் இரவி.
இச் செய்தி பு.ஜ.க. இடுகையல்ல.
இவ் இணையத்தளம் அவர்களதுமல்ல.
ஒரு அரசியற் கட்சி ஒவ்வொரு இணையத் தளத்திலும் கேள்விகட்கு விடை சொல்ல இயலாது.
ஒரு ஆதரவாளன் என்ற வகையில் நான் சொல்லக்கூடியது:
நீங்கள் சொல்வது போல
1. தமிழர் பகிஷ்கரித்தாலும் வெல்லப் போவது ஒரு பேரினவாதியே.
அவ்வாறே
2. பொதுவான இடதுசாரி + தேசிய சிறுபான்மை வேட்பாளரை நிறுத்தியிருந்தாலும் முடிவில்தாலும் வெல்லப் போவது ஒரு பேரினவாதியே.
3. தமிழர் யாரை ஆதரித்தாலும் வெல்லப் போவது ஒரு பேரினவாதியே.
இவற்றில் (2.) நடந்திருந்தால் (அதாவது பொதுவான இடதுசாரி + தேசிய சிறுபான்மை வேட்பாளரை நிறுத்தியிருந்தால்) புதிய அரசியல் சாத்தியப்பாடுகட்கு இடமிருந்தது. அதையே பு.ஜ.க. தேர்தல் அறிவிக்கப்பட்ட போதிருந்து கோரி வந்தது.
அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்பே பகிஷ்கரிப்பு ஆலோசனை முன்வைக்கப் பட்டது.
இப்போது கூட இடதுசாரி வேட்பாளர்களும் தமிழ் + முஸ்லிம் வேட்பாளர்களும் ஒரு பொது வேலைத் திட்டத்துக்கு உடன்படுவார்களானால் நிலைமை (2.) சாத்தியமே.
புலிகளின் 2005 பகிஷ்கரிப்பு அரசியல் விளக்கமற்ற மக்களுடன் கலந்துரையாடலற்ற நடவடிக்கை என்பதை விடப் பணம் பரிமாறப்பட்ட குற்றச்சாட்டும் கவனிப்பிற்குரியது.
அதே தேர்தலில் தமிழ் மக்கள் வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்க வேண்டுமெனப் பு.ஜ.க. சொன்னதைப் புலிகள் புறக்கணித்தனர்.
இறுதி நேரத்திலேயே புலிகள் பகிக்ஷ்கரிப்பை அறிவித்தனர். இது ஆராய வேண்டியது.
” அதிலும் ஒற்றுமையாக பகிஷ்கரித்தாலும் அவர்களில் ஒருவரே வருவார். ஆனால் சர்வதேசத்திற்கு காட்டலாம்.”
இது மிகவும் சரியான கருத்து.
பு.ஜ.க. பகிக்ஷ்கரிப்பை / பழுதாக்கலை ஒரு அரசியல் நடவடிக்கையாகவே முன்னெடுத்துள்ளது.”
Thank you! Shiva,
I accept your point of view. But in Tamils & Muslims side there is no sign for UNITY….only we see dividing/ seperation……forming new groups/ political parties.
In this situation what is the practical political solution?
As Max Lerner said, “When you choose the lesser of two evils, always remember that it is still an evil”
What to do all Tamil & Muslim leaderships are betrayers of the nation, they all only to safe guard their leadership, party & votes………hmmm
Only we need HUMANITY!
Dear Alex,
Thanks.
The leaders of the Sinhalese or the Hill Country Tamils are no better. That is politics in a post-colonial society dominated by the exploiting classes.
Our struggle should aim to give the initiative to the people, firstly make them question and challenge their (mis)leaders.
Unity is not automatic and not above class interests. Let us believe in the people and keep working hard.
Let us be inspired by the American Civil Rights Movement slogan: “WE SHALL OVERCOME”.
தமிழர் யாரை ஆதரித்தாலும் வெல்லப்போவது ஒரு பேரினவாதியே என்பது முற்றிலும் உண்மையே.
இதனடிப்படையில் பார்க்கும்போது புதியஐனநாயகக் கட்சியின் கோரிக்கை மிகவும் சரியானதே.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் குரல் அல்ல. யாழ்ப்பாண மக்கள் இவர்கள் சொல்வதை கேட் கமாட்டார்கள். பு.ஜ.க நிலைப்பாடு மக்கள் சார்பானது..
..