சர்வேதசமகளிர்தினத்தை முன்னிட்டு 8.03.2013 அன்று ஆற்றியஉரையின் தொகுப்பு : வி.தேவராஜ் (வாரஇதழ் ஆசிரியர் – வீரகேசரி)
சமூக சிந்தனை, சமூக பொறுப்பு இவை இரண்டுமே எம்மிடையே இன்று அருகி வருகின்றது. ‘நாம்’ நாங்கள் ;என்று நினைத்து செயற்பட்ட காலம் போய் ‘நான்’; என்ற சுற்றுவட்டத்திற்குள் எமது சமூகம் பெரும்பாலும் சிறுசிறு கூறுகளாகப் பிரிவுபட்டுக் கிடக்கின்றது.
இத்தகைய மனப்போக்கு தமிழர் சமூகத்தில் இதற்கு முன் இருந்ததில்லை என்று நான் இங்கு கூறவரவில்லை.
இத்தகைய மனப் போக்கு சமூகத்தில் இருந்ததென்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இன்று அதன் அளவீடு மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
30 வருட காலப் போர் தமிழர் சமூகத்தின் ஒட்டு மொத்த கட்டமைப்பையே சிதைத்துவிட்டது . அந்தச் சிதைவுகளுக்குள் சமூக சிந்தனையையும் சமூகப் பொறுப்பையும் தேடுவதென்பது கடினம்தான்
ஆனால் தமிழச்சமூகம் தான் கொண்டிருந்த மனிதத்துவத்தையுமா வீசி விட்டு நிற்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும்போது நெஞ்சு கனக்கின்றது.
அதற்காக ஒட்டு மொத்த தமிழினமும் ஈரமற்று இரும்பாக இருக்கின்றது என்று நான் கூற வரவில்லை.
நெஞ்சில் ஈரமும்,மனிதத்துவமும் இருப்பதினால்தான் கண்ணீருடனான கண்களைக் காண முடிகின்றது.
உண்மையில் இன்றைய இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு நான் சம்மதித்தது கூட நெஞ்சில் ஈரமும்,மனிதத்துவமும் என்னுள்ளும் இருப்பதினாலாகும்.
அதற்கும் அப்பால் போர் தின்ற எச்சங்களால்,புழுதிக்குள் வீசப்பட்டுக் கிடக்கும் பேசாப் பொருளானன தமிழ்ப் பெண்கள் குறித்து சர்வதேச மகளிர் தினத்தில் பேசப்பட வேண்டும் என்ற உந்துதலும் ஒரு காரணமாகும்.
இன்று இலங்கையின் மூலைமுடுக்கெலலாம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு
‘பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் செயற்பாட்டிற்கான காலம்’ இதுவாகும்;. இது ஒரு உறுதி மொழி.
என்ற கருப் பொருளை 2013 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர்தின தலைப்பாக ஐ.நா. பிரகடனப்படுத்தியுள்ளது.
இலங்கையைப் பொறுத்து வடக்கு, கிழக்கு, மலையகம் ,தெற்கு என பிரதேசரீதியில் சர்வதேச மகளிர் தினக் கருப்பொருளாகப் பல்வேறு விடயங்கள்; பிரகடனப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இலங்கையில் பிரதேசரீதியில் பெண்களின் அந்தஸ்;து அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன.
இன்றைய இந்தநிகழ்வு இது குறித்து குறிப்பாக கருப் பொருளாக எதனையும் பிரகடனப்படுத்தாவிடினும் நெடுந்தீவு முகலனின் சாம்பல் குறும்படம் போர் தின்ற எச்சங்களால் புழுதிக்குள் வீசப்பட்டுக் கிடக்கும் இளம் விதவைகள் குறித்துப் பேச முற்படுகின்றமை வரவேற்கத்தக்கதாகும்.
பெண்ணியல் வாதம் உச்சத்தில் இருக்கும் இவ் வேளையில் பெரியளவில் பேசப்படாத விடயமாக இருக்கின்ற இளம் விதவைகள் குறித்து நெடுந்தீவு முகிலனின் குறும்படம் பேசுகின்றது.
காதலையும் காம களியாட்டங்களையும் அழுதுஅழுது சீழ் வடியும் காட்;சிகளையும் கலையாக்கி உலாவவிடும் இக்காலத்தில் இன்றைய யதார்த்தத்தை தனது குறும்படம் மூலம் பேசவந்த நெடுந்தீவு முகிலனை நாம் பாராட்டியாகவேண்டும்.
நான் ஏற்;கனவே குறிப்பிட்டது போன்று தமிழ்ச் சமூகத்தின் ஒட்டு மொத்த கட்டமைப்பும் சிதைக்கப்பட்டுவிட்டது.
அரசியல் சமூகம், பொருளாதாரம், கல்வி என அனைத்து துறைகளும் மீள கட்டியெழுப்பப்படல் வேண்டும்.
வடக்கு,கிழக்கைப் பொறுத்து இன்று எமக்குப் பிரதானமாகத் தெரிவது அரசியல்தான்.
அதாவது தேர்தலில் போட்டிபோட வேண்டும், நாற்காலிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றNhம். ஆனால் நாற்காலிகளைக் கைப்பற்றிய பின் அடுத்து என்ன என்பது குறித்து நாம் சிந்திப்பதில்லை
சிந்தித்து நடப்பதுமில்லை.
பொதுத் தேர்தல் அடுத்ததாக உள்ளுராடசி; மன்றங்களுக்கான தேர்தல்,பிறகு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தற்போது வடமாகாணத்துக்கான தேர்தல்,என்று தமிழர்அரசியல் இவ்வாறு தெடர்ந்து நாடாளுமன்ற,உள்ளுராட்சி,மாகாணசபைகளுக்கான நாற்காலிகளுக்கான கனவில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியத்தின் பெயரில் தொடர்ச்சியாக தேர்தல் வெற்றிகள் அறுவடை செய்யப்படுகின்றன.
ஆனால் தமிழ்த் தேசியத்தைக் காப்பற்ற,தமிழ்த் தேசியத்தின் பால் ஒன்றிணைந்து நிற்கின்ற தமிழ் மக்களுக்காக தேர்தல் நாற்காலிகள் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை என்ற கசப்பான உண்மையை ஒத்துக் கொண்டாக வேண்டும்.
உண்மையில் தமிழர் அரசியலில் நாற்;காலி அரசியலுக்கப்பால் தமிழ்த் தேசியம், தமிழ் மக்கள் குறித்த திட்டவட்டமான நிகழ்ச்சி நிரல் இல்லை. இப்படியே எவ்வளவு காலத்திற்கு இத்தகைய அரசியலுடன் தமிழ் மக்கள் காலம் கடத்தப் போகின்றனர் என்பது கேள்விக்குறியாகும்.உண்மையில் அரசியல் பணிகளுக்கு சமாந்தரமாக சமூக, பொருளாதார, கல்வி குறித்த துறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாம் அதனை முன்னெடுக்காது மற்றவர்களை மட்டும் குறை கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை.
வடக்கும் கிழக்கும் சமூக ரீதியில ; எழுதப்படாத ஆனால் மிகவும் இறுக்கமான சமூக பாதுகாப்பு அம்சம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இருந்தது.
இன்று அது தாக்கப்பட்டுவிட்டது.
இதற்கு புத்துயிர் அளிக்கப்பட வேண்டும்.
பெண்களைப் போற்றிய சமூகம் தமிழ்ச் சமூகம்.
இன்று பெண்களுக்கான பாதுகாப்பில்லாத ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில சமூகத்தில் சிவில் அமைப்புக்களை சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்பும் பெரும் பொறுப்பு சமூகத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் ஊடகத் துறைக்கும் உண்டு.
சர்வதேச மகளிர் தினமான இன்று நெடுந்தீவு முகிலனின் குறும்படம் இளம் விதவைகள் பற்றிப் பேசுகின்றது.
தமிழ்ச் சமூகத்தில் பெரியளவில் பேசப்படாத பொருளாக இந்த விவகாரம் உள்ளது.
தமிழ்ச் சமூகமும் தமிழ் அரசியல்வாதிகளும் இன்றும் இந்த விடயம் குறித்து பேசாது மௌனமாகவே இருக்கின்றனர். ஆல்லது பேசுவதும் வெறும் ஒப்புக்காகவே உள்ளது.
வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த எண்ணிக்கை தகவல்கள் எம்மிடம் இல்லை.
வடக்கு கிழக்கில் 70 ஆயிரம் விதவைகள் இருப்பதாக ஒரு தகவல் கூறுகின்றது.
இன்னொரு தகவல் 80 ஆயிரம் என்றும் மற்றொரு தகவல் 90 ஆயிரம் என்றும் கூறுகின்றது. இத்தகைய தகவல்களுக்கு அப்பால் 59 ஆயிரம் என்று கணக்கிடுபவர்களும் உள்ளனர்.
ஆனால் போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களாகியும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்தோ, விதவையாக்கப்பட்டவர்கள் குறித்தோ சரியான புள்ளி விபரங்கள் இல்லாது நாம் இருக்கின்றோம்.
இந்த புள்ளி விபர சர்ச்சைகளுக்கப்பால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தமது அன்றாட குடும்ப வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்;றன. பரவலாகவும் பேசப்படுகின்றன.
ஆனால் இது குறித்தும் சரியான தகவல்கள் திரட்டப்படவில்லை. பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்களும் பெரிதாக சென்றடையவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு புறம் இருக்க மறுபுறம் பெண் போராளிகளின் நிலை இன்னும் மோசமாக இருக்கின்றது.
இவர்களைப் போராளிகளாக மாற்றியதில் தமிழ்ச் சமூகத்திற்குப் பெரும் பங்குண்டு. அவர்களுடைய வீர தீரச் செயல்களை புகழ்ந்த தமிழ்ச் சமூகம் இன்று புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பியவர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
அங்கீகரிக்க மறுக்கின்றது.
இது எந்தளவுக்கு நீதியானது நியாயமானது என்று தெரியவில்லை.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த 12007 போராளிகளில்; 3 ஆயிரம் பேர் பெண் போராளிகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்ச் சமூகத்தின் விடிவுக்காக, விடுதலைக்காக போராட்டக் களம் புகுந்த இந்தப் பெண் போராளிகள் சமூகத்தில் ஒதுக்கப்பட்டுக் கிடப்பதை ஊடகவியலாளர் துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை சமகாலம் சஞ்சிகையில் தோலுரித்துக்காட்டியுள்ளார்.; (2013 டிசம்பர் 16.30 பக்கம் 43)
போராட்டக் களம் புகுந்து வீழ்ந்து கிடக்கும் இந்த முன்னால் போராளிகள் சிறுமை கொண்ட தமிழ்ச் சமூகத்தின் சிந்தை கண்டு காறி உமிழ்ந்தால் கூட தப்பில்லை.
ஏனெனில் எந்தச் சமூகத்தின் விடிவுக்காய் புறப்பட்டு வீழ்ந்து கிடக்கின்றார்களோ அந்தச் சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்து உதாசீனப்படுத்தி நிற்பதை எண்ணும் போது அவர்களது வேதனையை உள்ளக் குமுறல்களை உணர்ந்து கொள்ள முடியும்.
நமக்கு சமூகம் என்ன செய்தது என்பது பற்றி கவலைப்படாது சமூகத்திற்காக உயிரைப் பணயம் வைத்து ஆற்றிய பங்களிப்புக்குக் கைமாறாக தமிழ்ச் சமூகம் இந்தப் பெண்களுக்கு என்ன செய்யப் போகின்றது என்பதே இன்றைய கேள்வியாகும்.
ஒவ்வொரு பெண்ணும் மாற்றத்தின் முகவராகவே கருதப்படவேண்டும். பெண் போராளிகளைப் ‘பாதிக்கப்பட்டோர்’ என்ற நிலையில் இருந்து ‘ வெற்றியாளர்’ என்ற நிலைக்கு உயர்த்த வேண்டியது சமூகத்தின் கடப்பாடாகும்’ என்ற துஷியின் கோரிக்கையை ஒட்டு மொத்த பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக தமிழ்ச் சமூகத்தின் முன் வைக்கிறேன்.
போர் முடிவடைந்தவுடன் செய்திகளுக்கு பஞ்சமாகப் போய்விட்டது என்ற மனப் போக்கு தமிழ் ஊடகத்துறைக்குள் இன்று மிக ஆழமாகப் பரவிக்கிடக்கின்றது.
போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் போருக்குப் பிந்திய சூழ்நிலைகளுக்கேற்ப
தமிழ் ஊடகத் துறை தன்னை தயார்படுத்திக் கொள்ளவிலலை என்ற கசப்பான உண்மையை
ஏற்றுக் கொண்டாக வேண்டும். எனவேதான் எமக்கு முன்னே போரின் பாதிப்புக்குள்ளாகி; நோயாளியாகக் கிடக்கின்ற சமூகத்தின் நிலை செய்தியாகத் தெரிவதில்லை போலும்.
அத்துடன் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப அவர்கள் கடிவாளமிட்டு தமிழ் ஊடகத்துறையின் முதுகில் சவாரி செய்யும் போக்கினை தமிழ் ஊடகத்துறை உள் வாங்கிக் கொண்டு பயணிப்பது தமிழ் ஊடகத்துறைக்கு மாத்திரமில்லை தமிழ்த் தேசியத்திற்கும் செய்யும் துரோகமாகவே அமையும்;.
இது என்னுடைய கருத்தாக மாத்திரமல்ல வடக்கில் உள்ள முக்கிய ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியத்தை நேசிப்போரின் ஆதங்கமாகவும் உள்ளது என்பதை இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன்.
எனவே தமிழ் ஊடகத்துறையும் தமிழ்ச் சமூகமும் தனது சமூகப் பொறுப்பை உணர்ந்து செயற்பட முன்வரவேண்டுமென்று போர் தின்ற எச்சங்களாய் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
In 1983 my friend Mervin Joseph said in America that we are all Human Beings. Tamil is a stem language like Sanskrit, Latin, Arabic and Greek. Then it is a Single Sri Lankan Citizenship. That means, rights, previlages and responsibilities. Keep up the good work.