Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சர்வதேசப் புகழ்பெற்ற,பொதுவுடமைத் தத்துவ ஆசான்தோழர் சண்முகதாசன்:அசலகேசரி-பிரான்ஸ்.

இனியொரு... by இனியொரு...
02/07/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
33
Home பிரதான பதிவுகள் | Principle posts

 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும், சர்வதேச ரீதியாக மதிக்கப்படும், ‘மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் காலமாகிப் பதினேழு வருடங்களாகின்றன.
 

இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே, பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும், பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி, முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார்.

 1960களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும், சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது, இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் ‘திரிபுவாதம்” எனக் கண்டித்தார்.

குருசேவ் முன்வைத்த ‘சமாதான சகவாழ்வு” என்ற சோவியத் பொதுவுடமைச் சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை, புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன.

1964ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க, வாலிபர் சங்க, கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர்.

சோவியத்சார்புப் பொதுவுடமைக் கட்சியினர் அன்று முதலாளித்துவப் பாராளுமன்றப் பாதையூடாக சோசலிச சமுதாயத்தைக் காணலாம் என்று கூறி வர்க்க சமரசமாகியதைச் சண் கடுமையாகச் சாடினார். தொழிலாளி – விவசாயி வர்க்கம் ஒரு வர்க்கப் போராட்டத்தின் – புரட்சியினூடாகவே விடுதலை பெறமுடியும் என்பதை வலியுறுத்தினார்.

1964-ல் இடதுசாரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் அரசுடன் இணைந்துகொண்டதை கடுமையாக விமர்சித்த சண், இது தொழிலாளி வர்க்கத்திற்கு மிகப்பெரிய துரோகம், இடதுசாரி இயக்கம் கண்ட மோசமான பின்னடைவு எனக் கண்டித்தார்.

மொஸ்கோவில் படித்துக்கொண்டீருந்தவரான ரோகண விஜயவீரா இடைநடுவில் நாடுதிரும்பி கட்சியில் இணைந்து தீவிர சீனச்சார்பாகக் காட்டிக்கொண்டார்.

கட்சி வாலிபர் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலிருந்தவாறு, கட்சி விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டார்.. மலையக மக்களுக்கெதிரான பிரச்சாரத்தையும் (இந்திய விஸ்தரிப்பு வாதம் என்றவகையில்) மேற்கொண்டார். இதனால் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.. பின்னரே அவர் ‘ஜே. வி. பி.” என்ற இயக்கத்தை உருவாக்கினார்.

அந்த இயக்கத்தின்மீதும், விஜயவீராமீதும் சண் முன்வைத்த கடுமையான விமர்சனம் குறிப்பிடத்தக்கது. ஜே. வி. பி. என்பது மார்க்ஸிச கொள்கைகளுக்கு எதிரான ஒரு பேரினவாத சக்தியென, அன்று சண் அடையாளங்காட்டியிருந்தமையைப் பின்னர் அரசியல் விமர்சகர்கள் பலரும் ஏற்றுக்கொண்டனர்.

சீனச்சார்பானதாக, பலம்பொருந்தியதாக வளர்ந்துவரும் கட்சியைப் பிளவுபடுத்தி அழிக்கவென சோவியத் உளவு நிறுவனத்தினால் பயிற்சியளிக்கப்பட்டு அனுப்பப்பட்டவரே விஜயவீரா எனச் சண் ஓரிடத்தில் குறிப்பிட்டார்.

அன்று சண் தலைமையில் கட்சி பெரும்வளர்ச்சிபெற்று வந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள், கலை இலக்கியவாதிகள் பலரும் கட்சி ஆதரவாளராகினர்.

அன்று இடதுசாரி இயக்கத்திலும், பாராளுமன்ற அரசியலிலும் ஜாம்பவான்களெனச் சொல்லப்பட்ட கலாநிதி என். எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா, பேர்ணாட் சொய்சா, டாக்டர் விக்ரமசிங்கா, பீட்டர் கெனமன் ஆகியோருக்குச் சித்தாந்தரீதியாகச் சவால்விடக்கூடிய அறிவாற்றல், ஆழ்ந்த புலமை, எழுத்தாற்றல், பேச்சாற்றல் மிக்கவராக, அவர்களுக்கெல்லாம் ‘சிம்மசொப்பனமாக” சண்முகதாசன் விளங்கினார். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் ஆழமான அரசியல் பேருரைகளை நிகழ்த்தும் வல்லமையுள்ளவராக மதிப்புப்பெற்று விளங்கினார்.

இலங்கையெங்கும் நூற்றுக்கணக்கான மார்க்ஸிச வகுப்புகளை, கருத்தரங்குகளை மும்மொழிகளிலும் நடத்தியுள்ளார். ‘சண்முகதாசனின் வகுப்புகளில் கலந்துகொண்டேன்” என்பது அன்று பெருமைமிக்க அரசியல் தகுதியாகச்  சிங்கள, தமிழ் மக்களால் கருதப்பட்டது.

மூத்த தொழிற்சங்கவாதியாகவும், தொழில் சம்பந்தமான சட்ட விடயங்களில் நிபுணராகவும் விளங்கிய இவர், இலங்கையெங்கும் தொழில் சம்பந்தமான வழக்குகளில் தொழிலாளர் சார்பில் ஆஜராகி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவியுள்ளார். வடபகுதியிலும் சினிமாத் தொழிலாளர் சங்கம், மில்க் வைற் சோப் தொழிற்சாலைத் தொழிலாளர் சங்கம், சிமெந்துத் தொழிற்சாலைத் தொழிலாளர் சங்கம் ஆகியனவுட்படப் பல சங்கங்களைச்  சேர்ந்த தொழிலாளர்கள் சார்பில் வழக்குகளில் ஆஜராகி வெற்றிகண்டவர். இந்த வழக்குகள் பலவற்றில் முதலாளிகள் – நிர்வாகத்தினர் சார்பில் தமிழரசு – தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த சட்டத்தரணிகளே ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையகத்தில் ‘செங்கொடிச் சங்கம்” பின்னர் ‘புதிய செங்கொடிச் சங்கம்” ஆகியனவற்றின் மூலம் தொழிலாளார்  ஐக்கியத்தைக்கட்டி வளர்க்கப் பாடுபட்டார்.

வடபகுதியில் தீண்டாமைக் கொடுமைக்கெதிரான பேராட்டம் கட்சிக்குப் பெருமை சேர்த்தது எனலாம். அன்றைய பாராளுமன்றப் பிரதிநிதிகள் தமது பதவிகளையும், வர்க்க நிலைப்பாட்டையும் காப்பாற்றிக்கொள்ள துரோகமிழைத்துவந்தவேளை, 1966 அக்டோபர் 21-ம் திகதி யாழ் முற்றவெளிப் பொதுக்கூட்டத்தில் சண் விடுத்த அறைகூவல் வடபகுதில் ஆலயப்பிரவேசப் போராட்டங்களுக்கும், தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்களுக்கும் உந்துசக்தியானது.

சங்கானை – நிற்சாமம், கரவெட்டி – கன்பொல்லை, நெல்லியடி, சுன்னாகம், காங்கேசந்துறை, மட்டுவில், கொடிகாமம் உட்படப் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள் குறித்து இலங்கை வானொலி மௌனம் சாதித்தவேளைகளில் பீக்கிங் வானொலி உண்மைநிலை குறித்து தொடர்ந்து செய்திகளை ஒலிபரப்பியது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் மகத்தான வெற்றிகளைக் கண்டது. சண் தலைமையில் கட்சி இதற்கு உறுதுணையாகவிருந்து பூரண ஆதரவு வழங்கியது. தென்னிலங்கை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. இலங்கைப் பாராளுமன்றத்திலும்,தமிழ்த் தலைவர்களது வர்க்க நிலைப்பாடு அம்பலமானது.

1969-ல் மேதினம் கொண்டாடத் தடைவிதிக்கப்பட்டபோது அத்தனை அரசியல் கட்சிகளும் பின்வாங்கிய நிலையில், தடையை மீறி கொழும்பு, யாழ்ப்பாணம், மலைநாடு ஆகிய இடங்களில் படையினருடன் மோதி ஊர்வலமும் கூட்டமும் நடாத்தி வெற்றிகண்டது சண் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியாகும்.

1971 ஏப்ரலில் விஜயவீரா தலைமையிலான ஜே. வி. பி  இயக்கத்தினரது காட்டிக்கொடுப்பிலான கிளர்ச்சியின்போது சண்முகதாசனும், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், அனுதாபிகள் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இக்காலத்தில் வடபகுதியிலும் கம்யூனிஸ்ட் கட்சியின்  பிரதேசத் தலைவர்கள் தேடுதலுக்குள்ளாகியதால் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர். மக்கள் எழுத்தாளர் கே. டானியல் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கட்சி சிதறடிக்கப்பட்டது. கட்சி அலுவலகங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டன. சுமார் ஒரு வருடத்தின் பின்னரே சண், டானியல் ஆகியோர் விடுதலையாகினர்.

வெளிநாட்டவர் எவரும் அனுமதிக்கப்படாத, கட்டுப்பாடு மிகுந்த கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் சண்முகதாசன் சீனா சென்றார். தலைவர் மாஓவைச் சந்தித்து உரையாடினார். உலக நாடுகள், கட்சிகளின் தலைவர்களில், தலைவர் மாஓவைப் பலமுறை சந்தி;த்து உரையாடிய பெருமைக்குரியவர் தோழர் சண்முகதாசன் மட்டுமே…

சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் காலமாகியபின் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றிக்கொண்டவர்கள் அங்கு மாஓவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை ஒதுக்கத்தொடங்கினர். மாஓவின் ஆதரவுடன் மகத்தான கலாச்சாரப் புரட்சியை முன்னின்று நடாத்திய மாஓவின் மனைவியுட்படப் பலரைச் சிறையிட்டனர். இக்காலப்பகுதியில் சீன ஆட்சிபீடத்தினரால் வலியுறுத்தப்பட்ட ‘மூன்று உலகக் கோட்பாடு” சீரழிவுப் பாதையைக் காட்டுகிறது என சண் விமர்சித்தார் – நிராகரித்தார். இது பின்னர் உலக நாடுகளிலுள்ள புரட்சிகர  இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தது. சண்ணின் அறிவாற்றல் மதிப்புக்குள்ளாகியது.

எழுபதுகளின் பிற்பகுதியிலும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இது சண் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மாஓவின் கொள்கைகளையும், புரட்சிப்பாதையையும் முன்னெடுக்க உலகமெங்குமுள்ள மாஓ பாதைக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டார். அவர்களை ஒருங்கிணைத்து மாநாடுகளை நடாத்தி கொள்கைகளை முன்னெடுத்துச்செல்ல ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் வழங்கினார்.

இலங்கையின் தலைசிறந்த அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பலரும் அன்று கட்சியின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக, அனுதாபிகளாக சண்முகதாசனின் பாசறையில் வளர்ந்தவர்களாவர்.

கட்சியின் ஆதரவுடன் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் தம்மை இணைத்து நின்ற, ஆதரவுச் சக்திகளாகத் திகழ்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களில், பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சி. தில்லைநாதன், பேராசிரியர் என் சண்முகரத்தினம், கலாநிதி சி. மௌனகுரு, கே. டானியல், சுபைர் இளங்கீரன், இ. முருகையன், எச். எம். பி. மொகைதீன், சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன், நீர்வைப் பொன்னையன், எம். கே. அந்தனிசில், செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், கே. தங்கவடிவேல்,  யோ. பெனடிக்ற் பாலன், சுபத்திரன், இ. செ. கந்தசாமி, கே. ஆர் டேவிட், புதுவை இரத்தினதுரை, எஸ். ஜி. கணேசவேல், எஸ் வில்வராஜ், க. தணிகாசலம், செல்வ பத்மநாதன், இ. சிவானந்தன், கே. பவானந்தன், வி. ரி. இளங்கோவன், நந்தினி சேவியர், தேவி பரமலிங்கம், நல்லை அமிழ்தன், பொன் பொன்ராசா, பாசையூர் தேவதாசன், குமார் தனபால், இராஜ தர்மராஜா, முருகு கந்தராசா, எஸ். முத்துலிங்கம், எஸ். கனகரத்தினம், க. இரத்தினம், கு. சிவராசா, அண்ணாவியார் கணபதிப்பிள்ளை, எஸ் சிவபாதம், ஆ. தங்கராசா, நா. யோகேந்திரநாதன், செல்லிதாசன், எம். செல்லத்தம்பி, முருகு இரத்தினம், நவின்டில் சிவராசா, சோதி ஆகியோர்  குறிப்பிடத்தக்கவர்களாவர்.

யாழ்ப்பாணம் – நவாலியைப் பிறப்பிடமாகக்கொண்ட சண்முகதாசன், பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் அன்று சகல மாணவர்களையும் உள்ளடக்கிய மாணவர் சங்கத்தின் தலைவராக விளங்கிய காலம் முதல் புரட்சிவாதியாகச் செயற்பட்டு வந்தவர்.

யான், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐக்கிய நாடுகள் தொண்டராகப் பணியாற்றிவிட்டு நாடு திரும்பியதும் தோழர் சண்முகதாசனைச் சந்தித்து உரையாடச் சென்றேன். அப்போது பிலிப்பைன்ஸ் நாட்டு அனுபவங்கள், அங்குள்ள அரசியல் நிலைமைகள், மக்களின் வாழ்நிலை, போராட்டங்கள் குறித்துப் பேசினேன் . என்னே.. ஆச்சரியம்… அங்குள்ள அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடு, ‘புதிய மக்கள் படையின்” போராட்டம், மின்டனாவோ மாநிலத்தில் இயங்கும் ‘மோரோ தேசிய விடுதலை முன்னணி”யின் போராட்டம், மேற்கு மின்டனாவோவில் முஸ்லிம் மக்களுக்கான, பெயரளவிலான சுயாட்சி அரசு என்பன குறித்தெல்லாம் அற்புதமாக எடுத்துச் சொன்னார். அங்கு நேரில் பார்த்துவந்த எனக்கு அவரது விளக்கங்கள் ஆச்சரியத்தைக் கொடுத்தன. ஆம்.. அது தான் அவரது அறிவாற்றல்…! உலகின் எந்த நாட்டினதும் அரசியல் வரலாறு, நடப்பு நிலைமை, பொருளாதாரம், போராட்டங்கள்  குறித்துக்கேட்டாலும் மூன்று மொழிகளிலும் விளக்கமளிக்கும் அற்புத ஆற்றல் அவருக்கிருந்தது.

தோழர் சண் கலை இலக்கியப் படைப்புகள் குறித்தும் மதிப்பிட்டு நெறிப்படுத்தும் தகமையுள்ளவர். ஒருமுறை, அமெரிக்க கறுப்பின மக்களின் வரலாற்றை ஓரளவு வெளிப்படுத்தும் ‘வேர்கள்” ( Roots))  நாவல் குறித்தும், முன்னர் வடசீனாவில் ஏற்பட்ட வரட்சி – பஞ்சம் குறித்து நெக்குருகச் சித்தரிக்கும் (தமிழிலும் வெளிவந்தது, பெயர் ஞாபகத்தில் இல்லை) ஒரு நாவல் குறித்தும் அவரோடு பேசிக்கொண்டது ஞாபகம்.

டானியலின் படைப்புகளை அவர் தொடர்ந்து வாசிப்பவர். டானியல் இறுதியாகத் தமிழகம் புறப்பட முன்னர் கொழும்பில் சண் வீட்டில் ஒரு சில தினங்கள் தங்கியிருந்தார். முன்னதாக சண்ணிடம் தனது அச்சேறாத ‘பஞ்சகோணங்கள்” நாவல் பிரதியைப் படிக்கக் கொடுத்திருந்தார். நாவலை முழுதாகப் படித்து முடித்த சண், அந்த நாவலின் முடிவில் மாற்றம் செய்வது நல்லது என டானியலிடம் குறிப்பிட்டது எனக்கு இன்றும் ஞாபகம். அதன்படியே டானியல் நாவலின் முடிவில் சிறிது மாற்றஞ்செய்து பிரசுரத்திற்கெனப் பேராசிரியர் அ. மார்க்ஸிடம் கொடுத்தார்.

1983-ம் ஆண்டுக்குப் பிறகு பேரினவாத ஒடுக்குமுறையின் உக்கிரம் தமிழ் மக்களைப் போராட்டப்பாதைக்கு உந்தித் தள்ளியதிலுள்ள நியாயத்தைச் சண் ஆதரிக்கத் தவறவில்லை. ஆனால், இதற்கும் சிங்கள முற்போக்குச் சக்திகளைப் புறம்தள்ளிய, தமிழ்த் தேசிய வாதத்திற்குள் மூழ்கிய சில தளம்பல் இடதுசாரிகளின் செயற்பாட்டிற்கும் மிக்க வேறுபாடு உண்டு.

சண் என்றும் ஒரு சர்வதேசியவாதியாகவே விளங்கியவர்.  மனித சமத்துவம், ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் எழுச்சி, போராட்டங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற கொள்கையிலிருந்து அவர் வழுவியதில்லை.

சர்வதேச தொழிற்சங்க அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான டொலர்கள் சம்பளத்தில் பணிபுரிய அழைப்புகள் கிடைத்தும், கொள்கையிலிருந்து கொஞ்சம் வழுவிக் கோடீஸ்வரனாக வாழ வழியிருந்தும், கொண்ட கொள்கைக்காக இறுதிவரை நேர்மைமிக்க சாதாரண மனிதனாகவே வாழ்ந்தவர். இவரது மனைவியும் இறுதிவரை இவரது இலட்சியங்களுக்கு ஏற்ப உற்றதுணையாகவே  கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வாழ்ந்தவர்.

தோழர் சண் எழுதிய தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளிலான மார்க்ஸிச விளக்கக் கட்டுரைகள் ஏராளம். பல நூல்களையும் இம்மொழிகளில் எழுதியுள்ளார். அவற்றுள் ‘மார்க்ஸிச நோக்கில் இலங்கை வரலாறு, தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது, வாழ்க்கை வரலாறு குறித்த நூல்” என்பன மிக முக்கியமான நூல்களாகும். சண் காலமாகிய பின்னரும் அவரது பல கட்டுரைகள் நூலுருப் பெற்றுள்ளன.

இருதய நோயினால் பாதிக்கப்பட்ட சண் இறுதிக் காலத்தில் இங்கிலாந்திலுள்ள மகளுடன் தங்கியிருந்தபோது 1993-ம் ஆண்டு மாசி மாதம்  8-ம் திகதி திங்கட்கிழமை காலை… ..74-வது வயதில் காலமானார்.

 தோழர் சண் வாழ்நாள் எல்லாம் எந்த இலட்சியத்திற்காக உழைத்தாரோ, அந்த தத்துவத்தைத் தந்த பேராசான் கால்மார்க்ஸ் 1883-ல் இங்கிலாந்திலுள்ள ‘கைகேற்” பக்கத்திலுள்ள சமாதிப் பூங்காவில் அடக்கம்செய்யப்பட்டார். சண்ணும் கால்மார்க்ஸ் காலமாகி 110-வது ஆண்டில் பேர்மிங்காம் நகரில் அடக்கமானார்.
 

சர்வதேசப் புகழ்பெற்ற, ஒரு நேர்மையான அரசியல், தொழிற்சங்கவாதி, மார்க்ஸிசத் தத்துவ ஆசான் சண்முகதாசன். அவரது இழப்பு மார்க்ஸிச அறிவுலகுக்கு மட்டுமன்றி இலங்கைத் தொழிலாள, விவசாய வர்க்கத்திற்கும், ஒடுக்குமுறைக்குள்ளான சகல மக்களுக்கும் பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.

கொழும்பில்  இயங்கும், ‘மார்க்ஸிச கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்” சண் எழுதிய  நூல்கள், கட்டுரைகளின் தொகுப்புகள் ஆகியவற்றை வெளியிட்டுவருவதுடன் கருத்தரங்குகள், அவரது நினைவுச் சொற்பொழிவுகளையும் ஒழுங்குசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பட விபரம்:

1. மேதினக் கூட்டமொன்றில் சண் உரையாற்றுகிறார்.

2. சிறையிலிருந்து மீண்ட சண்.

 3. தலைவர் மாஓசேதுங்கை மகிழ்ச்சியுடன் சண் சந்திக்கிறார்.

 4. தலைவர் மாஓசேதுங்குடன் சண் உரையாடுகிறார்.

 5. அல்பேனியத் தலைவர் அன்வர்கோசாவுடன் சண் தம்பதிகள்.

 6. கால்மார்க்ஸ்  சமாதி

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

உண்மையான இராணுவ சூழ்ச்சி குறித்த தகவல்கள் வெளியாகின!

Comments 33

  1. பஞ்சன் says:
    15 years ago

    தோழர் சண்ணின் 17ம் ஆண்டு நனைவு கூறப்படுகின்ற இந்த நேரத்தில் இப் பதிவை எழுதிய தோழர் அலசகேசரிக்கு நன்றியும் பாராட்டும்.தோழர் சண்ணை மீண்டும் மீண்டும் நினைவு கூற அவர் சிந்தனைகளை செயல்படுத்த நாம் எல்லோரும் முனைவதே நாம் அவருக்கு செய்யும் பெரிய அஞ்சலியாகும்.

  2. karan says:
    15 years ago

    நல்ல கட்டுரை. நன்றி!

  3. thamilmaran says:
    15 years ago

    இனியொருநிர்வாகத்தினருக்குநல்ல கட்டுரை.தொடர்ந்து தோழர் சண்முகனாதனைநினைக்கச் செய்து விட்டீர்கள். புதுவை முற்போக்குச் சிந்தனை கொண்டவர் சிங்களவரோடு இனைந்ததே தமிழர் விடுதலையும் என் எழுதியவர்.கம்பன் கவியரங்குகளீல் அவர் கவிதை பாடுவதைக் கேட்டு ரசித்து,ஈர்க்கப் பட்டிருக்கிறோம்.இன்னொருவர் முருகையன்.டொமினிக் ஜீவா அவர்களது தார்மீக் ஆவெசம் கம்பன் விழாக்களீல் மிக பிரபல்யம்.இன்றூ புதுவை எங்கே என்ற ஏக்கம் மட்டும் எஞசிநிற்கிறது.சிறந்த கவிஜன்,சிறந்த சிற்பி.போர் குடித்த உயிர்களீல் எங்கள் புதுவையின் உயிரும் ஒன்றோ அறீயோம்.

  4. xxx says:
    15 years ago

    தமிழ்மாறன் தயவுசெய்து விடயப் பொருத்தமாக எழுதப் பழகுங்கள்.

  5. yogan says:
    15 years ago

    டொமினிக் ஜீவா ஒரு போதும் சீன கம்யுனிஷ கட்சியை ஆதரித்தவர் கிடையாது. இந்திய கம்யுனிஷ தலைவர் ஜீவாவை எந்த நேரமும் திட்டி திரிந்தவர்,அதாலேயே அவருக்கு “ஜீவா ” சேட்டையாக தாம் பெயர் வைத்தாக பிரபல எழுத்தாளர் எஸ்போ ஆவன படுத்தியிள்ளார்.
    தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்திலும் அவர் கலந்து கொள்ளாதவர்.
    ஆனால் இன்று அவர் எதோ பெரிய கொள்கை வாதி போலவும் ,பேசியும் எழுதியும் வருவது கேலிக்கிடமானது.
    சி.க.செந்திவேல் .தணிகாசலம், என்.கே.ரகுநாதன் (மாஸ்டர் ),கே.தங்கவடிவேல் மாஸ்டர் போன்றோரிடம் சந்தேகமானவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தெணியான் என்பவரும் ஜீவா போன்றவரே .

    • Shiva says:
      15 years ago

      தயவு செய்து பொன்னுத்துரையின் கூற்றுக்களை வரலாற்று ஆதாரங்களகக் கொள்ளாதீர்கள்.
      எனினும் நீங்கள் சொல்வது போல டொமினிக் ஜீவா திரிபுவாதிகளுடன் தான் நின்றார்.
      நல்லவர்கள் சிலர் அப் பக்கம் போக குடும்ப, நட்புச் சூழல்களும் காரணமாயிருந்தன.

      சண், கார்த்திகேசன், கே.ஏ. சுப்பிரமணியம் போன்றோர் அற்புதமான விதிவிலக்கான மனிதர்களுள் சிலர்.
      அவர்களுட்ன் முரண்படலாம்.
      அரசியலை விமர்சிக்கலாம்.
      அவர்களே தம்முள் முரன்பட்டுள்ளனர் .
      ஆனால் அவர்களது நேர்மையும் கொள்கைப் பிடிப்பும் கேள்விக்கு அப்பாற்பட்டது.

  6. Pravda says:
    15 years ago

    தோழர் சண்னிடம் இருந்து கற்போம்
    க்வவி://ழெழடயாயா.நெவ/ப்சழதநெளவ/07hவவி://ழெழடயாயஅ.நெவ/pசழதநஉவ/16/1542/1542.pனக/655/655.ப்னக
    ;
    hவவி://ழெழடயாயஅ.நெவ/pசழதநஉவ/16/1531/1531.pனக
    @

    சண்னைத்தூற்றியவர்கள் அவரை நினைவுறுகின்றனர். நல்லது தாம் கடந்து வந்த பாதையை மீள்பார்ப்பதன் ஊடாக செயற்படுவதுதன் மூலமே சரியான பாதைக்கு வந்தடையமுடியும்.

    தோழர் சண்காட்டிய பாதையை மீளவும் தூசி தட்டுவதன் மூலமே அவருக்கான உண்மை அஞ்சலி செலுத்த முடியும்

  7. Pravda says:
    15 years ago

    http://noolaham.net/project/07/655/655.pdf

  8. Pravda says:
    15 years ago

    http://noolaham.net/project/16/1542/1542.pdf

  9. Pravda says:
    15 years ago

    http://noolaham.net/project/16/1531/1531.pdf

  10. Pravda says:
    15 years ago

    தோழர் சண்னும் தோழர் மார்க்ஸ்க்கும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. சண் பேர்மிங்காம் இது லண்டனில் இருந்து சில மணிப்பயணம். மார்க்ஸ்தான் நீங்கள் குறிப்பிடும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். (கைகேற்) இது ஒன்றும் பெரிய தவறில்லை. சரியான தகவலுக்காக

  11. thamilmaran -thamil.maran@yahoo.com says:
    15 years ago

    புதுவையும் முற்போக்காளரே அவர் மல்லிகையில் எழுதியதாகநான் அறீயேன்.டொமினிக் ஜீவாவும் அவரது தார்மீக் ஆவேசமும் இத்தனை காலம் மல்லிகையாய் தொடர்கிரது.கம்பன் கழகம் கவுரத்திருக்கிறது. தமிழக் ஜீவாவின் கால் தூசுக்கு டொமினிக் வருவாரா தெரியாது.தமிழ்க ஜீவா சைவ பிள்லை தன் சாதியை சொல்லி பிழைப்புநடத்தத் தெரியாத தொண்டனும் தலைவனும் தமிழக் ஜீவா.எளீமையும், தொழிலாழர் ஏற்றத்திற்காக் உழைத்த ஒப்பற்றவர் தமிழக் ஜீவா.

    • ANKAYATPIRIYAN says:
      15 years ago

      டொமினிக் ஜீவாவை நான் நன்கறிவேன்.எனது கல்லூரி நாட்களில் மாணவர் மன்றத்திற்கு வருகை தந்து பேசியிருக்கிறார்.அவரின் தண்ணீரும் கண்ணீரும் என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்தன் பின்பு அதன் இயல்பான எழுத்தின் மூலம் எனக்கு ஈழத்து இலக்கியங்களில் ஆர்வம் ஏற்பட்டது.தானே அச்சுக் கோர்த்து தானே அச்சிட்டு ஒரு பையில் போட்டு விற்பதற்காக செல்வார்.யாழ் பூபாலசிங்கம் புத்தகசாலை இவருக்கு பெரிய ஆதரவை வழங்கியிருந்தது.தமிழகத்தின் கவர்ச்சிகரமான சஞ்சிகைகளுக்கு நடுவில் எந்தவிதமான அட்டைக் கவர்ச்சியுமில்லாது துணிவாக வீற்றிருப்பதைக் கவனித்திருக்கிறேன்.அவர் தனது அச்சுக்கூடத்தை யாழ் ராஜா தியேட்டருக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் வைத்திருந்தார்.நான் படம் பார்க்கப் போகிற போது அங்கு சென்று அவரைச் சந்தித்து கதைப்பேன்.எனது பார்வையில் ஒரு கர்ம வீரராகவே பார்க்க முடிகின்றது.ஈழத்து இலக்கியம் என்ற தளத்தில் இவரின் உழைப்பும் பதிவு செய்யப்பட வேண்டியதே.சமகால பங்களிப்புகள் எதிர்காலத்தை நகர்த்துகின்றன என்பதை நாம் மறப்பது எம்மை நாம் மறந்ததற்கு சமன்.

      • thamilmaran says:
        15 years ago

        தங்கள் வருகைக்கு மிகவும் நன்றீ.எனக்கும் அவ்வாறான அனுபவம் உண்டு.சன்சிகையூடாகவே வீடும் கட்டி, பிள்லைக்கு கலயாணமும் கட்டி வைத்த சாதனையாளர் என்றூ கம்பன் கழகத்தில் கதைக்க கேட்டிருக்கிரேன்.

    • ANKAYATPIRIYAN says:
      15 years ago

      தமிழ்மாறன் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.தமிழக ஜீவாவின் கால்தூசிற்கு டொமினிக் ஜீவா வருவாரா என தரங்கெட்ட வார்த்தைகளால் ஒப்பீடு செய்திருக்கிறீர்கள்.ஈழத்தமிழரை பொறுத்தவரை டொமினிக் ஜீவா எமது முற்றத்து மல்லிகை.தமிழக இலக்கிய கர்த்தாக்கள் தாம எழுதுவதுதான் உலக இலக்கியம் என இறுமாந்திருந்தார்கள்.ஈழத்து இலக்கியம் அப்படியானது அல்ல.எமது இலக்கியம் வரம்புகளையும் வாய்கால்களையும் வடலிகளையும் பனைகளையும் கல்லையும் மண்ணையும் அதனோடு இணைந்து வாழ்ந்த மனிதர்களையும் இழைத்து சொன்ன இலக்கியம்.செம்பியன் செல்வனும் செங்கை ஆழியனும் இணைந்து “நிழல்கள் “எனும் பேராதனைப் பல்கலைக்கழக சூழலை வைத்து அழியாத காதல் காவியம் எழுதினர்.ஈழத்து இலக்கியங்கள் எமது வாழ்பவைச் சொல்பவை.2008 ஆண்டு செங்கை ஆழியனை நான் திருச்சியில் சந்தித்தேன்.எனது மகிழ்ச்சி அளவு கடந்ததாக இருந்தது.ஒரு குருவைக் கண்டது போல் உணர்ந்தேன்.
      என் தாய் எனக்கு கடவுள்.எங்கள் ஈழத்து இலக்கியம் எமக்கு பெரிதே.தமிழ்மாறன் அவர்களே “தூசிற்கு வருவாரா”என்ற எகத்தாளமான உங்கள் விமர்சனத்திற்காகவே இவ்வளவும் எழுத வேண்டி வந்தது.கேரளத்து ஜெயராம் எங்கள் தமிழ்ப் பெண்களை தடித்த கறுத்த எருமைகள் என்ற போது கொதிப்படைந்தவர்கள் நாங்கள்.புரிந்து கொள்ளுங்கள்.

      • thamilmaran says:
        15 years ago

        வணக்கம் அங்கய பிரியன் தங்கள் வருகை மிகவும் பயணூள்ளதாய் அமைகின்றது.செங்கை ஆழியான் அவர்கலை நான் நன் கு அறீவேன் அவரது ரசிகன் நான். கம்பன் கழகம் நான் வாழ்ந்த மண்.இலக்கிய் ரசிகனாய் பலரை அறீந்திருக்கிரேன்.இலக்கிய அவை என்ற ஒன்ரை அமைத்து மூங்கில் என்ற இலக்கிய இதழை மாணவனாய் வெளீயிட்டு இருக்கிறேன்.எங்கள் கல்லூரி தமிழ்தினத்திற்கு வந்த சிவத்தம்பி அவர்கலையும் நான் அறீவேன்.நாமெல்லாம் தமிழ் படித்தது சிவராமலிங்கம் அய்யாவிடம் எம் ஆசானாய் சொக்கன் அய்யா அவ்ர்கலும் இருந்தார்கள், நாம் டொமினிக் ஜீவா வை மதிப்பவன்,நேசிப்பவன்.தங்கள் வருகைநல்வரவாகுக.

  12. msri71@yagoo.com says:
    15 years ago

    தமிழகத் தலைவர் ஜீவாவை > டொமினிக் ஜீவா திட்டித்தீர்க்க நியாயமில்லை.இது எஸ.பொ.வின் கண்டுபிடிப்பாக இருக்கலாம். சண்ணை யாரும் (திரிபுவாதிகளைத்தவிர) தூற்றியது கிடையாது> தேசியஇனப்பிரச்சினையில்> தமிழ்மக்கள் தேசிய இனம் இல்லை தவறை விமர்சித்து> அதை சரியென ஏற்கவைத்தது> துர்ற்றல் அல்ல. சண் அல்ல எவரும் தவறுகளுக்க அப்பாற்பட்வர்கள் அல்ல. புதுவை இரத்தினதுரை மல்லிகை குமரன் போன்ற சஞசிகைகளுக்கு எழுதியவர்தான். அதன்பின்பே சண் தலைமையிலான கட்சியன் இலக்கிய மேடைகளில் கவிதை பாடியவர்; தாயகம் சஞ்சிகைக்கும் எழுதிவர்.

  13. meerabharathy says:
    15 years ago

    எங்கோ எப்பொழுது வாசித்தது என்பது ஞாபகம் இல்லை…
    இரஸ்சிய சீன பிரிவின் போது இலங்கையில் மட்டுமே சண்முகதாஸன் தலைமையில் கம்யூனிஸ் கட்சியின் தொழிற்சங்கம் சீன சார்பு பாதையைப் பின்பற்றியதாக அறிகின்றேன்…..பிற நாடுகளில் தொழிற்சங்கங்கள் இரஸ்சிய வழியில் சென்றுள்ளன….
    இதுவும் ஒரு முக்கிய காரணம் அவர் உலகளவில் மார்க்ஸிய வட்டத்தில் முக்கியத்தும் பெறுவதற்கு……
    இருப்பினும் நண்பர்களே….மார்க்கியத்தையோ சண்முகதாஸனையோ மீளக் கற்பது மட்டும் பிரச்சனைகளுக்கு மற்றும் முரண்பாடுகளுக்காக தீர்வல்ல…நாம் மேலூம் அவர்கள் பார்க்காத அல்லது தவறவிட்ட பக்கங்களை மட்டுமல்ல அதன்பின்னான அறிவியல் வளர்ச்சியையும் உள்வாங்கி செல்லும் பொழுது மட்டுமே நாம் ஒரு பன்முகதன்மைவாய்ந்த கருத்தியலை நிலைநாட்டி முன்செல்ல முடியும் என நம்புகின்றேன்…..குறிப்பாக புரட்சிகர போராட்டங்களில் பங்குபற்றிய சமூக மாற்றத்திற்காக சிந்தனையை வளர்த்தெடுத்த மனிதர்களின் தனிமனித உளவியலையும் அவர்களது எல்லைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்…இது அவர்களை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல…மாறாக நாம் முன்னேற்ற பாதையில் செல்வதற்காக கற்றலே….அவரவர் ஆற்றிய பாத்திரங்களின் பங்களிப்புகள் என்று மதிப்புக்குரியனவே…..நன்றி மீராபாரதி…..

    • Shiva says:
      15 years ago

      அல்பேனிய, இந்தோனேசிய, பிலிப்பினிய, கொரிய கட்சிகள் உட்பட பல பெரிய கட்சிகள் பாராளுமன்றப் பாதையை அன்று நிராகரித்தன.
      வியற்னாம் பாராளுமன்றப் பாதையை நிராகரித்த போதும் பகிரங்கமாக சோவியத் யூனியனுடன் முரண்பட இயலாத போர்ச் சூழல். பெரும்பாலான விடுதலை இயக்கங்கட்கும் அதே சங்கடம். அவை நடைமுறையில் சோவியத் யூனியனை மீறின. விவாதத்தைத் தவிர்த்தன.

      இலங்கையிற் போன்று தீவிரமாக ஒரு அரசியல் விவாதம் அங்கெல்லாம் முன்னெடுக்கப்படவில்லை. சண் விவாதத்தைக் கட்சியின் தொண்டர் தொழிலாளி வர்க்க மட்டம் வரை கொண்டு சென்றார்.

      இந்தியாவில் நக்சல்பாரி இயக்கம் எழுந்த பின்பே முறையான தத்துவார்த்த விவாதம் கட்சியின் கீழ் மட்டங்களிலும்நடந்தது.

  14. அசலகேசரி. says:
    15 years ago

    பேராசான் கால்மார்க்ஸ் அடக்கம்செய்யப்பட்ட இடத்தில் தோழர் சண் அடக்கம்செய்யப்படவில்லையெனச் சுட்டிக்காட்டிய தோழருக்கு நன்றி..

    …. ….’சண்ணின் அரசியல் பாதையில் தவறு கற்பித்து அவரின் அணியிலிருந்து பிரிந்து சென்ற சகலருமே இன்று அரசியல் ரீதியில் சீரழிந்து ‘சந்தர்ப்பவாத சகதிக்குள்” உழல்கின்றமை ஒன்றே போதும் அவரின் பாதையில் இருந்த தவறற்ற தன்மையையும் நியாயத்தையும் நிகழ்கால – எதிர்கால சந்ததிகளுக்கு உணர்த்த..!” – தனபாலசிங்கம், ‘வீரகேசரி” – 14 – 02 – 1993

    யான் புதுவை இரத்தினதுரையுடன் அன்று சில வருடங்கள் நெருங்கிப் பழகியவன். உணர்ச்சியைக்கொட்டி கவிதை சொல்வார்.

    ‘அ.. தொடங்கியுள்ள அரிவரிகள் சிற்சிலரால் சீனாவின் தாசனெனச் ‘சீல்” குத்தப்பட்டவன் நான்…” – எனக் கவிதை பாடியவர். சிங்கள தமிழ் மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்திப் ‘புரட்சிக் கவிதை” வடித்தவர். கட்சியுடன் இணைந்து நின்றவர். 1977-ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின்பின் குறுகிய இனவாத ‘வெறிக்கவிஞனாக” மாறினார். ‘மேடை .. .. பெயர்..” அவருக்கு மிக விருப்பமானவை. கைதட்டலை மிக விரும்பி ரசித்துக்கொள்வார்.

    — ‘சிங்களப் பெண்கள் வயிற்றில் புற்றெழும்பும்”

    — ‘சிங்களக் கிணறுகள் ஊற்றடைக்கும்” – என்றவாறெல்லாம் இனவாதம் பொழிந்து அறம்பாடினார்.

    எப்படியிருப்பினும் இன்று அவர் எங்கே… என்பது வருத்தத்திற்குரியது.

    டொமினிக் ஜீவா, அரசோடு சேர்ந்தியங்கும் ரஸ்ய சார்புக் கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்து இயங்குபவர். அவர் ஆவேசமாகப் பேசுவது வழமை. ஆனால் தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிரான போராட்டங்களில் களத்தில் நின்றவரல்ல.

    எஸ். பொன்னுத்துரையின் காழ்ப்புணர்வுப் புலம்பல்களைக் கவனத்தில் எடுக்கத் தேவையில்லை.

    ‘சண்” பாதையில் இறுதிவரை இயங்கிய டானியல், வாழ்நாள் எல்லாம் சொல்லும் செயலும் ஒன்றாக, அரசியல், சமூக விடுதலைப் போராட்டங்களில் பங்களித்த போராளியாகத் திகழ்ந்தவர். தமிழக, இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களினதும் இலக்கிய விமர்சகர்களினதும் மதிப்புக்குரிய மனிதனாகத் திகழ்பவர். ‘கம்பராமயணத்தில் கற்புத் தேடும்” கூட்டங்களில் எல்லாம் டானியல் பேசியதில்லை.

    ஜீவா ‘மல்லிகையைத்” தொடர்ந்து வெளியிட்டு வருவது கணிப்பிற்குரியது தான்..!

    தெணியான், டானியல் – ஜீவா இருவருடனும் மிக நெருக்கமாகப் பழகியவர். தீண்டாமைக்கெதிரான போராட்டங்களை உளச்சுத்தியோடு ஆதரித்தவர்.

    – அசலகேசரி.

    • thamilmaran says:
      15 years ago

      புதுவை மத்திய கிழக்கில் கடமையாற்றீ விட்டு விடுமுரைக்கு வந்த போதே இலங்கையின் அன்றய சூழல் அவரை யாழ்ப்பாணத்திலேயே தங்க வைத்து விட்டது பின்னாளீல் அவர் புரட்சிக் கவிஜராகி விட்டார்.மிக அண்மைக்கால அவரது கவிதைகளீல் சமாதனத்திற்கு எங்கியதை உணர முடிகிறது.கே.டானியல்நம்மில் அனேகருக்கு தெரிய வாய்ப்பில்லை.யாரென்றூ அறீமுகம் தர முடியுமா?செங்கை ஆழியான் முற்போக்கு இலக்கிய வாதியே சமூக் மாற்றத்திற்காக் உழைத்தவரே.இன்னொருவர் ராதெயன்.அடுத்து ஒரு ஈ-மெயில் மாதிரி தங்கள் தமிழ் இருக்கிறது.கம்பன் ஒரு சமூகப் போராளீ தன் காவியத்தில் கற்பை அவன் விவாதிக்கவில்லை.தமிழை தமிழ் மரபை விதைத்தவன்நாமெல்லாம் கம்பராமாயணத்தை பிழையாகவே புரிந்துள்ளோம்.

      • ANKAYATPIRIYAN says:
        15 years ago

        புதுவை இரத்தினதுரை மத்தியகிழக்கில் வேலை செய்யவில்லை.இவர் சிங்கப்பூரில் செம்பவான் கப்பல் கட்டும் வேலைத்தளத்திலேயே வேலை செய்தவர்.அவர் அங்கு வேலை செய்த போது நானும் அங்கு ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தேன்.அவரின் வேலைத்தள நண்பரின் காதல் பிரச்சினையில் தலையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்னால் வந்து நின்றதைக் கண்டவன் நான்.அவரை அப்பொழுது “இரத்தினம்”என்றே சொல்வார்கள்.

        • thamilmaran says:
          15 years ago

          தங்கள் தகவலகளூக்கு மிகவும் நன்றீ நல்ல நண்பரே.ஒரு வயதுக்கு மீறீய இலக்கிய ஆர்வலனாய் அந்த நாளீல் அவரை சந்தித்தது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.அவரது பிள்லைகள் எல்லாம் அப்போது சிறூ பிள்லைகள்.காலம் கடக்கும் போதும் மனமெங்கும் வலி.புதுவை ஈழத்தமிழ்க் கவிதையை மலர வைத்தவன் என்ற பெருமை எனக்கு எப்போதுமே உண்டு.

  15. xxxxxx says:
    15 years ago

    அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசம்! மார்க்சைக் கற்பவர்களுக்கு இந்தப் பகுதி பயன்படும்

  16. thamilmaran says:
    15 years ago

    மார்க்ஸூம் மரித்ர்கு மார்க்ஸ்ஸீசமும் மரித்துப் போனபின் ஏட்டுச்சுரைக்காயை வைத்து கறீ செய்வது எப்படி எனற புது ஆராய்சி மட்டும் தொடர்கிறது.சைவமே ஒரு கம்யூனிசம்தான் எனும் உண்மையே நமக்கும் புலப்படவில்லை.இன்னும் மார்க்ஸ் என்ற வேற்றூ மனிதனைச் சுமந்து கொண்டிருக்காமல் நமது மனிதர்களீல்நாம் பெருமை பெறூவது எப்போது?

    நம்மிடம் இல்லாத தத்துவமா? எம்மிடம் இருந்ததை எமக்கே திருப்பித் தருவேரிடம் இருந்து நாம் விடுதலை பெறூவது எப்போது?

  17. xxx says:
    15 years ago

    “சைவமே ஒரு கம்யூனிசம்தான் எனும் உண்மையே நமக்கும் புலப்படவில்லை.”
    தமிழ்மாறன் அவர்களே
    உளறல் மன்னர் நீங்களே என ஒப்புக் கொள்கிறோம்.
    தயவு செய்து வேறெங்காவது போய் அறுங்கள்.

  18. xxxxxx says:
    15 years ago

    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=02&article=1929

  19. Pravda says:
    15 years ago

    அதுசரி தோழர் சண் பிழைவிட்டார் என்று கூறுகின்றார்கள் என்ன பிழைவிட்டார்?
    இன்று புதிய ஜனநாயகப்புரட்சி என்று கருத்துக்கு வந்திருப்பவர்கள் அல்லது புதிய பாதையை காண்போம் என்பவர்கள் தமிழ் தேசியவாதத்தில் இருந்து வெளிவந்தவர்கள் இல்லையா?
    புதியஜனநாயகப்புரட்சியைத் தானே தோழர் சண் வலியுறுத்தியிருந்தார்.
    வாருங்கள் வரலாற்றாற்றைப் படிப்போம் சரியான பாதைக்கு வருவோம்

  20. Naran2010 says:
    15 years ago

    தமிழீழ மக்களின் 25 ஆண்டு தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தேசிய சுதந்திரம் மக்கள் விடுதலை என்ற இலட்சியத்துடன் பல இயக்கங்கள்> சில கட்சிகள் உருவாகின. இந்த இலட்சியங்களை எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டு அதற்கு நேர்மையாக இருந்து உறுதியுடன் இயக்கத் தலைமைகள் போராடினார்கள்> என்பதை இன்று வரலாறு காட்டுகிறது. நாம் கண்டு கொள்ள முடிகிறது.
    புலிகள் இயக்கம் மட்டுமே தேசிய விடுதலை யுத்தத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. மற்றய இயக்கங்கள் எல்லாம் ஒன்றில் அரசுடன் சமரசம் அடைந்து விட்டன. அல்லது சிதைந்து செயற்பாடு இழந்துவிட்டன. சிறிலங்கா அரசின் ||தேசிய சனநாயக|| நீரோட்டத்தில் நேரடியாக கலந்து விட்டனர். அல்லது சமாதான இயக்கங்களில்> மனித உரிமை அமைப்புக்களில் கரைந்து விட்டனர்.
    இவ்வியக்க – கட்சித் தலைமைகளை> கொள்கைகளை> திட்டங்களை நம்பி தமிழீழ மண்ணுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் விடுதலை வேண்டும் என்ற உத்வேகத்துடன் இணைந்து ஆயிரம் ஆயிரம் போராளிகளை (ஆண்களும் – பெண்களும்) போராட்டத்தில் இருந்தே அப்புறப்படுத்தி விட்டார்கள். இத்தலைமைகள்> இவற்றுக்குப் பின்னால் இன்னமும் சில நூறு இளைஞர்கள் இருக்கின்றார்கள்; என்றால் அவர்களது வாழ்க்கைக்கு> உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலைமை நாட்டில் நிலவுகிறது.
    தமிழீழப் போராட்டத்தில் இருந்து சொந்த தலைமைகளால் அந்நியப்படுத்தப்பட்ட புலிகளின் அழித்தொழிப்பில் தப்பிய போராளிகள் உலகம் முழுவதும் சிதறுண்டார்கள். சிதறுண்டுள்ள போராளிகள் உலகம் முழுவதும் சிதறுண்டுள்ள போராளிகள் மத்தியில் இருந்து பல குரல்கள்> பல நாடுகளிலிருந்து வெளிப்பட்டது. மீண்டும் ஒரு புரட்சிகர கட்சி வேண்டும்> பழைய அரசியல் திட்டம்> அமைப்பு> நடைமுறை பட்டறிவுகளில் இருந்து புதிய பாதையில் கட்சி உருவாக வேண்டும் என பல முன்முயற்சிகள் வெளிவந்தது.
    இயக்கங்களின் அராஜகம் இயக்கத்துள்ளும் மக்கள் முன்பும் கூட தலைவிரித்தாடியது. தேசியத்துக்கும் – மக்கள் முன்பும் கூட தலைவிரித்தாடியது. தேசியத்துக்கும் – மக்கள் சனநாயகத்துக்குமாக நின்ற உண்மையான போராளிகளை> தலைவர்களை புலிகள் உள்ளடங்க எல்லா அராஜகத் தலைமைகளின்> உளவுப்பிரிவுகள் கொலைப்பட்டியலின் அடிப்படையில் தேடி நாயாக அலைந்தன. கைதுகள்> கடத்தல்கள்> சிறைகள்> உரிமை கோரப்படாத கொலைகள் எனத் தொடர்ந்தன.

    புலிகளின் தலைமையிலான தேசியப் போராட்டம் வெளிப்படையாக இப்போராட்ட வழி யாருடைய வழி எனப் பிரகடனப்படுத்தாது. செயற்பட்டாலும்> இது தமிழீழ முதலாளிவர்க்க ஆதிக்க சக்திகளின் வழிதான் என்பது அரசியல் அரிச்சுவடு தொpந்தவர்களுக்கு மட்டுமல்ல> போராட்ட வரலாற்ரை உற்று நோக்கி வந்த தமிழீழ மக்களுக்கும் தெளிவான ஒன்று. ஆனால் மாற்று வழி> ஒன்று போராட்டக் கழத்தில் இல்லையே என்ன செய்ய முடியும்? புலிகளின் தனி இலட்சிய வழி அதற்கு அனுமதிக்காது என்பதை தமிழீழ வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. மாற்று வழிப்போராட்டம் ஒன்று களத்தில் உருவாக வேண்டும் எனில் முதலில் புரட்சிகர தேசியப் போராட்ட மாற்று அரசியல் வழி ஒன்று தன்னைத் திடப்படுத்த வேண்டும். ஆனால் முதலாளித்துவ தேசிய வாத வழி புதிய புதிய கோட்பாடுகளை முன்வைத்து முளைத்தெளுகின்ற அளவுக்கு புரட்சிகர தேசியப் போராட்ட வழி உருவாகி தன்னைத் திடப்படுத்திக் கொள்ள முடியாமல் இருந்தது. இதற்கு புறநிலையில் தேசிய> சர்வதேசிய சூழ்நிலைமைகளும் முக்கிய பங்காற்றுகிறது.
    இலங்கையில் தேசிய போராட்டம் குறித்து புரட்;சிகர தேசபக்த சனநாயக சக்திகள் மத்தியில் நடக்கின்ற கோட்பாடு போராட்டத்தை> நடைமுறை முரண்;பாடு போராட்டத்தை> நடைமுறை முரண்பாடுகளை> திசை விலகலை> தேசபக்தர்கள் எதிர் கொண்டு வந்திருக்கின்றனர். பிரித்தானிய கொலனி எதிர்ப்பு இலங்கை தேசிய இயக்கத்தில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவப் பாதைக்குப்பின் தொழிலாளி வர்க்கமும்> புரட்சிகர வர்க்கங்களும் ஏன் வால்பிடித்தது? கலைந்து போனது? நவ காலனிய இலங்கையில் எஸ்எல்எவ்பி இன் ||தேசிய வாத- கலப்புப் பொருளாதார|| பாதைக்குப் பின் தொழிலாள வர்க்கக் கட்சிகள் ஏன் இழுபட்டுச் சென்றன? சிறீலங்காவில் 1970 இல் ஜே.வி.பி யின் தேசிய சோசலிச எழுச்சிக்குப் பின் சிறீலங்காப் புரட்சிகர வர்க்கம் ஏன் திரண்டது?
    1980 களில் தமிழீழ தேசிய எழுச்சிக்குப்பின் தொடங்கி இன்று புலிகளின் தேசியப் போரின் பின் தமிழீழ தொழிலாளர் வர்க்கமும்> புரட்சிகர வர்க்கங்களும் ஏன் பின்நிற்கிறது? வல்லரசிய எதிர்ப்பு> சோசலிசம் எனப் பேசிய தலைமைகள் ஏன் திசைமாறின. நவீன தேசியக் கோட்பாடுகள் என்ற பெயரில் மீண்டும் திசைவிலகல் வெளிப்பட்டது ஏன்? ரசியாவிலும்> சீனாவிலும் நடந்த முதலாளித்துவ மீட்சியை முன்னிறுத்தியும்> உலகளவில் குட்டி முதலாளிய தேசிய இனவிடுதலை இயக்கங்களின் அராஜகங்களை> தோல்விகளை காட்டியும் ஓர் ஒட்டுமொத்த உலகப்புரட்சிக் கோட்பாட்டை ட்ரொஸ்கிய நான்காவது அகிலம் துடிப்புடன்> மீண்டும் முன்னிறுத்துகிறது. ஆசிய> ஆபிரிக்க> லத்தீனன் அமெரிக்க நாடுகளின் தொழிலாளி வர்க்கம் தனது சமூக விடுதலைக்காகவும் வல்லரசியத்துக்கு எதிராகவும் தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் நான்காவது அகிலம்> முதலாளித்துவ வல்லரசு நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தின் சோசலிசப் புரட்சித் திட்டத்தை முன்வைத்து |தேசிய இன விடுதலை எதிர்ப்பு| கோட்பாட்டை > புதிய சனநாயக எதிர்ப்புக் கோட்பாட்டை முன்னிறுத்தி நவகாலணிய நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தை> ஒட்டுமொத்த உலக சோசலிசப் புரட்சித் திட்டத்தை நோக்கி திசைதிருப்புவது ஏன்?
    நவகொலனிய கட்ட தேசிய இனப்பிரச்சனை> புதிய சனநாயக புரட்சி பற்றிய கோட்பாடு> அரசியல் அமைப்பாக்கல்> பிரச்சனைகளை குறிப்பாகவும்> ஆழமாகவும் புரிந்து கொள்ளவும்> வளர்க்கவும்> கோட்பாட்டு ரீதியில் தன்னை திடப்படுத்தவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் இலங்கை தொழிலாள வர்க்க இயக்கமும் கட்சிகளும் கவனத்தை ஏன் குவிக்கவில்லை?

  21. xxxxxx says:
    15 years ago

    விமர்சனப் போக்கு மாற்றம் பெறுமா?
    இணையத்தில் விமர்சிப்பவர்கள் ஒன்று விடயம் பற்றிய ஏதோ ஒரு அளவீட்டில் விடயங்கள் தெரிந்தவர்கள்.
    தமது வன்மத்தை எவ்வகையிலாவது தெரியப்படுத்த வேண்டும் என்பவர்கள்
    குதர்க்கப்பேர்வழிகள்
    ஒரு கருத்தை நோக்கிய வகையில் விவாதத்தை கொண்டு செல்லமுயற்சிக்கும் சிந்தனை
    இன்னும் பலபோக்குக்கள் இருக்கலாம் இவைகள் எல்லாம் தனிமனிதனின் உளவியல் மற்றும் அரசியல் அறிவு சார்ந்த நிலையில் எழுகின்றது. இருந்த போதிலும் எல்லாவற்றிற்கும் வாழ்நிலையில் உள்ள பொருளாதார அமைப்பின் மேல் எழுந்த சிந்தனையோட்டமே தீர்மானம் செய்கின்றது.
    ஆக ஒரு கருத்தை நோக்கிய விவாதம் நடத்த வேண்டும் என்றால் நிச்சயம் மீள்வாசிப்பு முக்கியமானதாகும்.
    அல்லது மீள்வாசிப்பிற்கு யார் தயாராக இருக்கின்றார்கள்.
    இன்றைய உலகில் பலமுனை பாடநெறிகளுக்குள் கல்வித் தகமை கொண்டவர்கள் தத்தம் அறிவை பகர்கின்ற போது அவற்றை உள்வாங்குகின்றோமா?
    அதற்குத் தயாராக இருக்கின்றோமா? (முழுமையான இயங்கியல் பார்வை அற்றதாக இருப்பது எமக்கு முரணான கருத்துக் கொண்டிருப்பது இயல்பாகவே இருக்கும்.)
    உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோமானால் அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசம்!
    பற்றி இணையதளத்தில் எழுதியிருந்ததை வாசிக்க முடிந்தது. இந்த எழுத்தை ஒரு பெரியார்வாதி எழுதியிருந்தார். அதில் சந்தோசப்பட வேண்டிய விடயம் என்பது மார்க்சின் கொள்கையை இலகுவாக எழுதியதாகும்.
    இதனை புதியபாதையை நோக்கியதாக கருதிக் கொள்ளும் இணையங்கள் ஏற்றுக் கொள்கின்றவா? இல்லையே. இதற்கு உதாரணமாக “
     வீட்டின் முன்னால் வந்து நின்றதைக் கண்டவன் நான்.அவரை அப்பொழுது “இரத்தினம்”என்றே சொல்வார்கள்.
    சுநிடல
    2. ஒஒஒஒஒஒ
    Pழளவநன ழn 02/11/2010 யவ 4:19 யஅ
    அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசம்! மார்க்சைக் கற்பவர்களுக்கு இந்தப் பகுதி பயன்படும்
    சுநிடல
    3. வாயஅடைஅயசயn
    Pழளவநன ழn 02/11/2010 யவ 12:43 pஅ
    மார்க்ஸூம் மரித்ர்கு மார்க்ஸ்ஸீசமும் மரித்துப் போனபின் ஏட்டுச்சுரைக்காயை வைத்து கறீ செய்வது எப்படி
    இந்தப் பகுதிக்குள் அனார்கிஸ்ட் ஸிண்டிகலிசம் தமிழச்சி.கொம் இணைப்பை அழுத்தியிருந்தேன். கற்றல் பற்பித்தல் என்ற அணுமுறைதான் எங்கே?
    புரட்சி புண்ணாக்கு என்று நாம் எழுதல்லாம் பேசல்லாம் ஆனால் மக்கள் புரட்சிக்கான அவசியத்தை அழுத்தமாக விதைக்கும் எழுத்துக்களின் வடிவமுள்ள செய்பாடுகள் காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறான செயற்பாடுகள் மூலமே கருத்து மக்களை பற்றிக் கொள்ளும் அதுவேசக்தியாக உருவெடுக்கும்.

  22. thamilmaran says:
    15 years ago

    அன்பின் xxxx கோபத்திலும் நிதானம் என்ற எம் முன்னோரின் வழி ஒரு ஆரோக்கியமான் விவாதத்தை தொடர விதை போட்டு இருக்கிறீர்கள்.சரியாகக் பேசுவதற்கு முதலில் காது கொடுத்து கேட் க வேண்டும்.அரை குரையாக படித்துக் கொண்டு அவசரப்பட்டு விடக் கூடாது என்பது உண்மையே ஏனென்ரால் நாவினால் சுட்ட புண் ஆறாது என்பாள் நம் ஒளவக்கிழவி. உண்மையில் அனேக விடயங்கள் நாம் கற்றூக் கொள்பவையே.நன்றீ xxxx

  23. தமிழ்மடையன் says:
    15 years ago

    இங்கே ஏன் தமிழ்மாறன் அநியாத்ட்குக்கு பிளேடு & மொக்கை போட்டு கொண்டு இருக்கிறார் என்று புரியல

  24. thamilmaran says:
    15 years ago

    அய்யா குழந்தையிடம் தோற்றூபபோகிறபோது கோபம் வருவதில்லை, மனைவியிடம் தோற்கும் போதும் ஆணவம் உண்டாவதில்லை.கண்ணதாசன் ஒரு பாடலில் நண்பனிடம் தோற்றூவிட்டேன் பாசத்தாலே என்றூ பாடல் எழுதினார்.எப்போதும் நாம் சரியாகத்தான் இருப்போம் என்றூ நின்றால் நல்ல விசயங்கள் நம்மை விட்டுப் போய்விடும் ஆக நல்லதைக் கற்க தீய குணமான ஆணவம் விடுவோம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...