சரத் பொன்சேகா இன்று வேட்புமனுத்தாக்கல் செய்வதைக் குழப்புவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையகத்திற்கு பௌத்த மதகுருமாரை அழைத்து வந்து சரத் பொன்சேகா உரிய நேரத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதைக் குழப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரி வித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் மீது பற்று இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து சரத் பொன்சேகா விலகவேண்டும் என பெளத்த மத பிக்கு ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மங்கள சமரவீர எம்.பி. மேலும் கூறியதாவது:
தென் பகுதியைச் சேர்ந்த ஒமாரே கஸ்ஸப்ப தேரரைப் பயன்படுத்தி பௌத்த மதகுருமாரைப் பிழையான வழியில் திசைதிருப்பி, பஸ்கள் மூலம் கொழும்புக்கு இன்று வியாழக்கிழமை கொண்டுவருவதற்கு அரசாங்கம் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
பிக்குமாரைப் பயன்படுத்தி தேர்தல் திணைக்களத்தை முற்றுகையிடச் செய்து ஜெனரல் சரத் பொன்சேகாவை காலை 11.00 மணிக்குத் தடுத்துவைத்து, வேட்புமனுவைத் தாக்கல் செய்வதை தடுத்து அவரது வேட்புமனுவை நிராகரிக்கச் செய்வதற்காகவே அரசாங்கம் திட்டம் தீட்டுகிறது.
அத்தோடு, இம் மதகுருமார் மத்தியில் அமைச்சரொருவரைச் சார்ந்த பாதாள உலகக் கோஷ்டியினரையும் வேடமணியச் செய்து, தேர்தல்கள் திணைக்கள பிரதேசத்தில் குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வெற்றி நிச்சயம் என்றால் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? இதன்மூலம், அரசாங்கத்தின் தோல்வியும் வங்குரோத்து நிலையும் வெளிப்படுகின்றன. எந்தவொரு சதித்திட்டம் எந்த ரூபத்தில் உருவெடுத்தாலும் எமது வெற்றியை, தடுத்துவிட முடியாது. அனைத்தையும் தகர்த்தெறிவோம்.
சர்வதேச யுத்த நீதிமன்றம் எமது படையினரை சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது. இது தொடர்பான உடன்படிக்கையில் 29 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. ஆனால், நாம் கைச்சாத்திடவில்லை.
ரணிலின் ஆட்சிக்காலத்திலும், நான் வெளிநாட்டு அமைச்சராகப் பதவிவகித்தபோதும் லக்ஷ்மன் கதிர்காமர் பதவிவகித்த போதும் சர்வதேச யுத்த நீதிமன்றம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடக் கோரிய போதும் நாம் கைச்சாத்திடவில்லை.
நல்லவேளை, பாதுகாப்புச் செயலாளர் பிரஜாவுரிமை பெற்றுள்ள அமெரிக்காவும் இவ்உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. எனவே, யுத்த நீதிமன்றத்திற்கு எமது படையினரை அனுப்பமாட்டேன், நான் போவேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மார்தட்டிக் கொள்வதில் எந்தவிதமான உண்மையும் இல்லை.
இது படையினன் மனவலிமையைக் குறைத்து மக்களை ஏமாற்றும் பிரசாரமாகும்.எமது படையினர் ஒழுக்கமுள்ளவர்கள் எந்தவிதமான யுத்தக் குற்றம் இடம்பெறவில்லை. தோல்விகள், வெற்றிகள் அனைத்திற்கும் பொறுப்பேற்பதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா தெவித்துள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாகவும், எனவே அவர் தேசத்துரோகியென்றும் தயாசிறி கோமின், விமல் வீரவன்ச உட்பட அரசாங்கத்தின் அடிவருடிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜெனரல் சரத் பொன்சேகா, படையினர் அனைவரது பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறானதோர் நிலையில், இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாக கூறுவதால் என்ன நடக்கும்? உண்மையிலே இரகசியங்கள் இருக்கின்றன என்ற தோற்றப்பாடு உருவாகும். இது எமது படையினரைக் காட்டிக்கொடுக்கும் செயலல்லவா.
எனவே 41 வருடங்கள் இராணுவத்தில் சேவையாற்றி பயங்கரவாதத்தை ஒழித்து அனைத்திற்கும் தானே பொறுப்பெனக் கூறிய ஜெனரல் சரத் பொன்சேகா, நாட்டைக் காட்டிக் கொடுத்தவரா? தேசத்துரோகியா? அல்லது, இராணுவ இரகசியங்கள் இருப்பதாகக் கூறி படையினரைக் காட்டிக்கொடுப்பவர்கள் தேசத்துரோகிகளா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
அலரிமாளிகையில் என்ன நடக்கின்றது பேசப்படுகின்றதென்பது அனைத்தும் பேச்சுக்கள் நடைபெற்று அரை மணித்தியாலயத்திற்குள் எனக்கு கிடைத்துவிடும்