15.01.2009.
இன்றைய சூழ்நிலையில் சயனைட்டை உட்கொள்வோமா? வேண்டாமா என்ற மனோ நிலையிலேயே பிரபாகரன் இருக்கின்றார். அவரை எமது படையினர் இன்னும் சில தினங்களுக்குள் கைதுசெய்து நாட்டை வெற்றிக்கொள்வார்கள். என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். |
தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக இலத்திரனியல் ஊடகங்களில் நேற்று இரவு இடம்பெற்ற நேர்காணலின் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்நேர்காணலில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
வடக்கில் முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத புலிகள் தொடர்ந்து பின்வாங்கிச் செல்கின்றனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பகுதியை தற்போது நெருங்கிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சில தினங்களுக்குள் படையினர் அவரைக் கைதுசெய்து, தாய் நாட்டை வெற்றி கொள்வார்கள் புலிகளின் தலைவரை உயிருடன் கைது செய்யும் பட்சத்தில் அவரை இந்தியாவுக்குக் கையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமது அரசாங்கத்திற்கு இல்லை. எனவே, அவருக்கான தண்டனை தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே எடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்த நாம் இந்த இடத்திற்கு சென்றமை குறித்த காரணங்களை வரிசைப்படுத்த முடியாது. எனினும், யுத்த களத்தில் உயிரைத் தியாகம் செய்து சமாதானம் மலரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் போராடுகின்ற இராணுவ வீரர்களை மறந்துவிட முடியாது. அதுவே இந்த வெற்றியின் அடிப்படை காரணமாகும். ஆயுதம் முக்கியமல்ல வெற்றிக்கு ஆயுதம் முக்கியமல்ல. அந்த ஆயுதத்திற்குப் பின் நிற்கின்ற மனிதனே முக்கியமானவனாவான். அந்த மனிதனுக்கு தைரிய மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். அதனை நாம் திறம்பட செய்துகொண்டிருக்கின்றோம். அதனால்தான் இவ்வாறான தொடர் வெற்றிகளை பெற முடிந்தது. அத்துடன், தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவது மிகவும் இன்றியமையாதது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக ஜனாதிபதியின் தலைமை இன்றியமையாதது மட்டுமல்ல, முக்கியமானதும் கூட. பல்வேறு சந்தர்ப்பங்களில் சீனா, பாகிஸ்தான் ஜனாதிபதிகளுடன் பலமுறை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு உரையாடியுள்ளார். அதன் மூலம் கிடைத்த உதவி, ஒத்துழைப்புகளினால் தான் இந்த வெற்றியை அடைய முடிந்தது. ஜனாதிபதி மட்டுமல்லாது, இராணுவத்தின் தலைமைத்துவமும் முக்கியமானதாகும். இராணுவத் தளபதியின் பொறுப்பு, தேர்ச்சி, அனுபவங்கள் இத்தருணத்தில் இன்றியமையாதவை. பிரபாகரன் சிறந்ததொரு யுத்தத்தை முன்னெடுக்கக் கூடியவர்; அவரை யுத்தத்தின் மூலம் வெல்லமுடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண சமாதான பேச்சுவார்த்தையில் செல்லவேண்டுமென பல தரப்புகளிடமிருந்து தொடர்ச்சியாக எமக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முடியும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். இராணுவ உத்தி, உபாயம், படையினரின் மனதை தைரியப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட படை நடவடிக்கைகளுக்கு ஏற்ற பிரிவுகளை தயார்படுத்தியமை காரணமாகவே இவ்வாறான வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. முப்படைகளிலும் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான், பயங்கரவாதிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்திற்கு செயல்பாடுகளுக்கும் சவால் விடுத்தனர். விசேடமாக, கடற்படையினர் ஆழமான கடற்பரப்புகள், புலிகளின் தற்கொலை படகுகளை கையாள்வது உள்ளிட்ட விடயங்களில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். படையினரின் வெற்றி அரசியல் மயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், எந்தவொரு விடயத்தை முன்னெடுக்க வேண்டுமாயினும் அதற்கு அரசியல் தலைமைத்துவம் முக்கியமானதாகும். ஜனாதிபதி மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாட்டின் தலைவர். அவரது தேவையைப் பொறுத்தே ஒவ்வொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது. சிறந்த தலைமைத்துவம் கொடுக்கப்படாவிடின் நிர்வாகத்தை கொண்டு நடத்த முடியாது. பிரபாகரன் வசிக்கின்ற பிரதேசத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் அவர் தப்பித்துச் சென்றிருக்காவிட்டால் மிகவும் குறுகிய காலத்தில் அவரைப் பிடிப்பதற்கான சந்தர்ப்பம் எங்களுக்கு கிட்டும். வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையின் போது வல்வெட்டித்துறையில் பிரபாகரன் சிக்கிக் கொண்டார். அவ்வேளையில், அவர் சயனைட் உட்கொள்வதற்கு முற்பட்டாலும் சிறிய இடைவெளியில் முல்லைத்தீவுக்கு தப்பியோடிவிட்டார். அந்த குறுகிய காலத்திற்குள் அவரது மனநிலை மாறிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் சயனைட்டை உட்கொள்வோமா? வேண்டாமா என்ற மனோ நிலையிலேயே பிரபாகரன் இருக்கின்றார். அவரை எமது படையினர் இன்னும் சில தினங்களுக்குள் கைதுசெய்து நாட்டை வெற்றிக்கொள்வார்கள். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற படை நடவடிக்கைகள் மூலம் அதற்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் பின்வாங்கிச் செல்வதையே காணமுடிகின்றது. எமது தூரநோக்கத்துடனான இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்காவிடின் பிரபாகரன் அந்த சமாதான நடவடிக்கையை மீண்டும் குழப்பி விடுவார். படையினர் நிலங்களை மீட்பதன் மூலம் எவ்வாறான வெற்றியையும் அடைய முடியாதென சிலர் தெரிவித்தனர். எனினும், பிரபாகரன் தனது அதிகாரத்தின் கீழ் கிளிநொச்சியில் வங்கி, பொலிஸ், நீதிமன்றம் போன்றவற்றை நிர்வகித்து வந்தார். அந்த நிர்வாகத்தைச் சீர்குலைக்க முடியாதெனவும், கிளிநொச்சியைக் கைப்பற்ற முடியாதெனவும் எமது தலைவர்கள் நினைத்திருந்தனர். தொடர்ச்சியாக பின்வாங்கினார்கள். 2005ஆம் ஆண்டு மக்கள் ஆணையின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படாமல், வேறோருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால், இந்த நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும். கிழக்கில் படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது புலிகள் தற்காலிகமாக பின்வாங்கினர் என்று அன்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறானதொரு பின்வாங்கல்கள் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்று நாம் நினைத்தோம். இந்த சந்தர்ப்பத்திலேயே புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் ஏதோ ஒப்பந்தம் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. படை நடவடிக்கையின் வெற்றியைத் திசை திருப்புவதற்காகவே இவ்வாறான மனப்பாங்குடன் செயற்படுகின்றனர். என்றார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய. |