30.09.2008.
விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவது மாத்திரம் இனப்பிரச்சினைத் தீர்வுக்குப் போதுமானதாக அமையாது என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ரே கூறியுள்ளார்.
வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஆழமான அர்ப்பணிப்பு இல்லாமை மற்றும் ஜனநாயகப் பகிர்வு தொடர்பாக ஒரு அர்ப்பணிப்பு இல்லாமை போன்ற காரணங்களே 2001ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இல்லாமல் போவதற்குக் காரணமாக அமைந்தன. இதுவே இரண்டு தரப்பிற்கும் பிரச்சினையை உருவாக்கியது” என அவர் குறிப்பிட்டார்.
இரு தரப்புக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்ததுடன், பலர் கொல்லப்பட்டதாகவும், இந்த நிலையில் சுதந்திரமான கண்காணிப்பாளர்களை மீண்டும் வரவழைத்து இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவது கடினமானது எனவும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
சம அந்தஸ்து, புதிய முறையிலான சுதந்திரம், அதிகாரப் பகிர்வுகொண்ட ஆட்சிமுறை போன்றவற்றை உள்ளடக்கிய தீர்வுமுறைபற்றியே இலங்கை அரசாங்கம் தற்பொழுது கவனம் செலுத்தவேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படுகொலைகள், ஊழல்மோசடிகள், பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றுக்கு மாற்றீடு தேடவேண்டிய சூழல் இலங்கைக்கு உருவாகியிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
“இந்த விடயத்தில் கனடா அக்கறை செலுத்தாமல் இருக்கமுடியாது, எனெனில், சமஷ்டி, முரண்பாட்டுத் தவிர்ப்பு மற்றும் பல்லினத்தன்மை தொடர்பான விடயங்களில் கனடாவுக்கு சொந்த அனுபவங்கள் இருக்கிறது. எனவே, இந்த விடயத்தில் கனடா கூடுதலான அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்” என அவர் கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் தற்பொழுது அதிகரித்திருக்கும் மோதல்களால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர், இரு தரப்புக்கும் இடையிலான மோதல்களில் இதுவரை 75,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.