அறிஞர் லுhயிஸ் அல்துhசர் ஒரு அரசு மக்களை அடக்கி ஆள இரு வழி முறைகளை கையாள்கிறது என்பார்.ஒன்று சிறை போலீஸ் இராணுவம் போன்ற அடக்குமுறைகள் இரண்டாவது கருத்தியல் சார்ந்த அடக்குமுறைகள். இந்த இரு அடக்குமுறைகளையும் கொண்டு இரு வேறு அமைப்புகளுடன் செயல்படுகிறது என்பார்.இதில் நவீன அரசு முன்னர் கூறிய அடக்குமுறை எந்திரங்களை விட கருத்தியல் சார்ந்த பரப்புரையையே அதிகம் சார்ந்து இருப்பதாக குறிப்பிடுவார்.
சமூக ஏற்றத்தாழ்வுகளான வர்ககங்ளையும் வர்க்க ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்த உலகம் முழுவதும் ஆளும் வர்க்கங்கள் கருத்தியல் சார்ந்த அடக்குமுறையை யே சார்ந்துள்ளன.
கருத்தியல் சார்ந்த அடக்குமுறை என்பது மக்களையே மனமுவந்து ஆளும் வர்க்கங்களையும் அதற்கான பிரதிநிதிகளான அரசியல் கட்சிகளையும் ,ஒடுக்குவதற்கான அரசமைப்பையும் ,அதற்கான சட்டங்களையும் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான கருத்தியல் பரப்புரையாகும்.
குழந்தையாக இருக்கும்போதே இளம் உள்ளங்களில் கல்வி முறையில் அரசு என்பதற்கு கீழ்படிந்த குடிமக்களாக நடக்க வேண்டும். மறைமுகமாக அரசு என்பது இறைவனுக்கு சமமானதாக பதிக்கப்படுகிறதுஅதே போல சட்டங்களுக்கும் அதிகாரிகளுக்கும் கீழ்படிய வேண்டும் என்று கற்பிக்கப்பட்டு அது ஆழமாக உள்வாங்கப்படுகிறது.இதன் இணையாகவும் தொடர்ச்சியாகவும் கணவனுக்கு மனைவி கட்டுபட வேண்டும் தந்தைக்கு மகனும் மகளும் கீழ்படிய வேண்டும் என்று குடும்பத்தில் ஆதிக்க கருத்தியல் ஊட்டப்படுகிறது.உலகம் முழுவதும் உள்ள கருத்தியல் கல்வியினால் ஆட்சிகளும் அரசும் நீடிக்கின்றன.இதில் ,இந்தியாவில் குறிப்பிடத்தக்க அம்சமாக சாதி அமைப்பும் சாதிய உணர்வும் நுட்பமான முறையில் ஊட்டப்படுகிறது.
இதன் விளைவாக வர்க்க ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ளும் மக்கள் அரசமைப்புக்கு கீழ்படியும் நேர்மையான குடிமக்களாக இருக்கிறார்கள்.சுரண்டல் சமூக அமைப்பும் அதனைக் கட்டி காக்கும் அரசமைப்பும் குறித்தும் அவர்களுக்கு எந்த வித வெறுப்புணர்வும் ஏற்படுவதில்லை.அவர்களுக்கு இளம் வயதிலேயே சாதிய உணர்வும் இயல்பாக ஊட்டி வளர்க்கப்படுவதால் ஒவ்வொரு சாதியினரும் ஒருவர் மற்றொருவருடன் இணைய முடியாதபடி ,தனித்தனித் தீவுகளாகவும் ,அண்ணல் முனைவர் அம்பேத்கர் கூறியதுபோல் மேன்மை உணர்வுடன் உள்ளனர்,இந்த மேன்மை உணர்வு செயற்கையாக கட்டியமைக்கப்பட்டது என்பதைக்கூட உணர முடியாத படி சாதிய உணர்வில் ஊறிக்கிடக்கின்றனர்.சக மனிதனை மிருகத்தை விட கேவலமாக நடத்தி அவன்பால் தீண்டாமையை கடைப்பிடிப்பது குறித்து அவர்களுக்கு எந்தவித குற்றஉணர்வும் ஏற்படுவதில்லை.தீண்டாமையை கடைபிடிப்பவர்களே பொது வெளியில் அல்லது வெளிஉலகிற்கு அரசியல் சட்டத்திலுள்ள அடிப்படை உரிமையான தீண்டாமை ஒழிப்பைக் காட்டி சமாதானம் செய்கின்றனர்.எங்கே சாதி பார்க்கப்படுகிறது?என்று கேள்வி கேட்கின்றனர்.
சாதி அமைப்பு இருக்கும் வரை தீண்டமையும் இருக்கும் .தீண்டாமையை ஒழிக்க வேண்டுமானால் சாதி அமைப்பையே ஒழிக்க வேண்டும் இந்த அடிப்படை அறிவியல் கூட மறைக்கப்பட்டு மோசடித்தனமாக தீண்டாமையை மட்டும் கடைபிடிப்பது குற்றமாக அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தில் சாதி அமைப்பையே குற்றமாக அறிவிக்காமல் தீண்டாமையை எந்த காலத்திலும் ஒழிக்க முடியாது.இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் பல காலமாகவே சாதி அமைப்பும் அதன் பிரிக்க முடியாத பகுதியான தீட்டு மற்றும் துhய்மை கருத்தியல்கள் இயற்கையானதாக இந்து மதச்சடங்குகள் மூலமாக அதாவது அன்றாடம் ஒவ்வொரு பண்டிகையின்போதும் ஒவ்வொரு மதச்சடங்கின்போதும் உயிர்ப்பிக்கப்பட்டு உறுதி படுத்தப்படுகிறது .இந்த சடங்கு சம்பிராதயங்களில் சிறிது சலனம் கூட ஏற்படுத்த முடியாதபடி அரசு கட்டிக்காத்து வருகிறது.நாடாளுமன்ற ஜனநாயகம் அரசின் கருத்தியல் அடக்குமுறை குறித்த இந்த புரிதலுடன் இப்போது சன்டிவி நிகழ்ச்சிகளை ஆராய்வோம்.
சன்டிவி நிகழ்ச்சிகள் முழுமையாகவே பொழுது போக்கு சார்ந்தவை என்பது சிறிய குழந்தைக்கு கூட தெரியும். பொழுது போக்கு நிகழ்ச்சிகளினால் என்ன வந்துவிடப்போகிறது? அதை போட்டு ஏன் இப்படி அலசுகிறீர்கள்?என்று பலரும் அலுத்துக்கொள்கிறார்கள்.பொதுவாக பொழுது போக்கு என்பது குறித்து பல மாயைகள் நிலவுகின்றன. பொழுது போக்கு நிகழ்ச்சிகள் சமூக உணர்வூட்டுவதாகவும் மனதுக்கும் உடலுக்கும் இதமாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.ஆனால் சன் டிவி நிகழ்ச்சிகள் இதற்கு நேர் மாறானவை .அவை என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன?ஏற்படுத்தியுள்ளன?
பன்னாட்டு கம்பெனிகள் ,தேசங்கடந்த தொழிற்கழகங்கள் மற்றும் பெரும் முதலாளிகள் வணிக நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்கள் அளிக்கும் விளம்பரங்களைத் சார்ந்துதான் சன் டிவி மற்றும் கலைஞர் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் இயங்குகின்றன என்பதை முன்னரே கண்டோம்.இந்த விளம்பரதாரர் நலன்களுக்கு எதிராக எந்த நிகழ்ச்சிகளும் டிவியில் இடம் பெறாது என்பது முக்கியமான விடயம்.உதாரணமாக நான் உயரமாக வளர்கிறேன் என்ற காம்பளான் குழந்தைகள் சத்துபான விளம்பரம் மோசடியானது .
காம்ப்ளான் குடித்தால் எந்த குழந்தைகளும் உயரமாக வளர்ந்ததற்கு எந்த அறிவியல் ஆய்வும் இல்லை என்று கூறி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஆனால் சன் டிவியில் இதைப் பற்றி கவலைப்படாமல் விளம்பரம் வந்து கொண்டே இருக்கும் .இந்த வழக்கு பற்றி அவர்கள் செய்தி சேனலில் எந்த செய்திகளும் வராது. ஏனெனில் விளம்பரம் கொடுப்பவர்கள் ஆயிற்றே.
இதே போன்று பெப்சி கோலா குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு பன்னாட்டு கம்பெனிகளினாலும் தமிழக நிலத்தடி நீர் களவாடப்பட்டிருக்கிறது.இதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடந்த போது அதைப்பற்றி கிஞ்சித்து கவலை கொள்ளாமல் அந்தநிறுவனங்கள் அளித்த நிகழ்ச்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன.ராதிகா துவங்கி விஜய் மாதவன் சூர்யா என இக்குளிர்பானங்களுக்காக விளம்பரம் அளித்ததும் தொடர்ந்தன.சன் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பதையே பொழுது போக்குக்குத்தான் வேறு எதற்கும் அல்ல என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படியாக நிறுவியுள்ளது.
விளம்பரதாரர் நலன்களிலிருந்து மட்டுமே எந்த நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்படுகின்றன.இதனால் எதையும் அறிவுபூர்வமாக அலசும் முறை தவிர்க்கப்படுகிறது.
விளம்பரதாரரின் வியாபார நோக்கம் பாதிக்கும் என்பதால் ஆழமான விசயங்கள் எது குறித்தும் விமர்சனக் கண்ணோட்டமும் தவிர்க்கப்படுகிறது. ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லாத மேலோட்டமானதும் முட்டாள்தனமான மட்டமானதுமான ரசனையைத்துhண்டும் நிகழ்ச்சிகளே ஆக்ரமித்துக்கொள்கின்றன. இவை.
நடுத்தர வர்க்கத்தின் சொல்லாடலின்படி அனைத்தும் லைட்டான விசயங்களே.சன் டிவி ஏற்படுத்திய இப்பபண்பாட்டினால் கனமான விசயங்களை படிப்பது மிகவும் குறைந்து விட்டது.பெருகி விட்ட தொலைக்காட்சி ஊடகங்களினால் பொதுவாக நுhல்கள் மற்றும் பத்திரிக்கைகள் வாசிக்கும் வழக்கம் மிகவும் குறைந்துள்ளதாக பல ஆய்வு அறிக்கைகள் குறிப்பிட்டு கூறியுள்ளன.மூளைக்கு வேலை கொடுக்கும் ஆக்கப்பூர்வமான சிந்தனையை துhண்டும் நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுவதால் வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே நீண்டகாலமாக பார்க்கும் பார்வையாளர்களை மூளை உழைப்பு சோம்பேறிகளாகவும் மாற்றப்படும் அபாயம் ஏற்படுகிறது.
இவ்விசயத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குழந்தைகள்.டிவி பார்ப்பதை பொருத்தவரை வயது வந்தோரும் குழந்தைகளும் ஒரு விசயத்தில் வேறுபடுகின்றன.டிவியில் வரும் தொடர்கள் திரைப்படங்களை பார்க்கும்போது வயது வந்தவர்கள் இது வெறும் நடிப்பு என்பதைபுரிந்து கொண்டு பார்க்கின்றனர் .ஆனால் டிவி நிகழ்ச்சிகளை குழந்தைகள் உளப்பூர்வமாக நம்புவதோடு பலவீனமான நிலையில் இருந்தால் அதை ஏற்றுக் கொண்டு செயல்படவும் தொடங்குகின்றனர். தொடர்ந்து டிவி பார்க்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதாக ஏராளமான அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
விளம்பாரதாரர்கள் மக்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சிகளுக்கே விளம்பரங்களை அளிக்கின்றனர்.அந்த நிகழ்ச்சிகளில் முதலிடம் வகிப்பது வன்முறை மற்றும் பாலியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குத்தான்.இரண்டாவது இடம் வகிப்பது மெகா தொடர்களுக்குத்தான் .அதில் கள்ள உறவு இல்லாமல் கதையே இருக்காது . ஒரு நகைச்சுவை காட்சியில் நடிகர் விவேக் குறிப்பிடும் வருவது போன்று கள்ள உறவு இல்லைன்னா மெகா சீரியலில் கிக் ஏது?
நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் இடம் பிடிப்பவை சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள்,மெகா தொடர்கள் மற்றும் செய்திகள் ஆகும்.அன்றாடம் அதிக பட்சமாக நேரம் ஒதுக்கப்படுவது சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் மெகா தொடர்களுக்கும்தான்.
செய்தி சேனல்கள் குறித்து தனியே பின்வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.முதலில் மெகா தொடர்ககளைப் காண்போம். தமிழ் திரைப்படத்துறையை பல ஆண்டுகாலமாக புற்று நோயாக அரித்து வருவது கதாநாயகனின் மிகப்பெரிய சம்பளத்கொகை ஆகும். அதனால் தவிர்க்க முடியாமல் உயரும் திரைப்படத்தயாரிப்புச் செலவு ,செக்குமாடு போல கதை அம்சமும் இல்லாமல் வரும்மசாலா வணிக படங்கள் ஆகிய காரணங்ளினால் திiப்படத்துறை நலிவடைந்து வருகிறது.
இந்த காரணங்களுடன் திரை அரங்கத்தில் மிகவும் உயர்த்த பட்ட டிக்கெட்டின் விலை ஆகியவை திரை அரங்குகளுக்கு மக்கள் வருவதை பெரும்பாலும் குறைத்து விட்டன இந்தச் சூழலில் .உலகமயமாக்கலின் ஏற்பட்டதகவல் தொழில் நுட்ப வளர்ச்சி வீட்டிலிருந்தபடியே குறுந்தகடு மற்றும் இணைய தளத்தில் திரைப்படங்களை பார்க்கும் வசதிகளும் உருவாகின.அதிகமான சமூகத்தொடர்பின்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலையையும் டிவி ஊடகங்கள் ஏற்படுத்தின. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு மெகா தொடர்கள் எடுக்கபட்டன.
அவை வீட்டில் அதிக நேரம் இருக்கும் மக்கள்பிரிவினரை குறிப்பாக ,பெண்களை குறிவைத்து முதலில் சில தொடர்கள் எடுக்கப்பட்டு அவை வெற்றிக்கண்டவுடன் புற்றீசல் போல தொடர்கள் எடுத்து தள்ளப்பட்டன.மக்களிடம் பிரபலமான சித்தி கோலங்கள் முதல் இன்றைய செல்வி வரை குடும்பங்களை சுற்றி பின்னப்படும் கதைகள்தான்.
ஒரு தொடரின்கதையை மட்டும் கூறி அதை பரிசிலித்தால் அது நுhறு இதழ்களுக்கு தொடரும் என்பதால் தொடர்களின் கதைகள் இங்கே தவிர்க்கப்படுகிறது.இந்த தொடர்களில் பெண்கள் சித்தரிக்கப்படும் நிலை மிகவும் கண்டனத்திற்குரியது.பெண்ணடிமைத்தனத்தின் அத்தனை அம்சங்களையும் விழுமியங்களையும் ஒரு சேரத் தொகுத்து வழங்குவதாகவே தொடர்கள் உள்ளன.பெண்களே அதிகம் பார்வையாளர்களாக இருப்பதால் எளிமையான முறையில் அவர்களை அடிமைத்தளையில் வைத்திருக்கும்படி கதைகளும் நிகழ்ச்சிகளும் பின்னப்படுகின்றன.
இந்த தொடர்களில் வரும் பெண் பாத்திரங்கள் வெளி உலகை அறியாதவர்கள் தன்னைச்சுற்றி என்ன நடக்கும் என்பதை அறியாத கிணற்றுத்தவளைகiளாகவும் கணவனுக்காகவும் ஆண்களுக்காகவும் வாழும் பாத்திரங்களாக இருப்பர்.மிகவும் படித் த பெண்ணாக இருந்தாலும் சரி,அவள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவோ மாநில அளவில் தலைமை போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி கணவனுக்கு வீட்டில் கணவனுக்கு பணிவிடை செய்வதிலேயே மகிழ்ந்திருப்பாள் உதாரணமாக ராதிகாவின் ராடன் நிறுவனம்தயாரிக்கும் சீரியல்கள்.இவற்றில் கணவனுக்கு அவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் அவனுக்கு கீழ்டிந்து நடக்கும் அவனின் தேவைகளை (அவன் ஒதுக்கித்தள்ளினாலும்) மனமுவந்து பூர்த்தி செய்பவளாக இருப்பாள்.
அனைத்துத் தொடர்களிலும் கதாநாயகன் இரண்டு பொண்டாட்டிகாராக இருப்பார்.அது தவறு என்று ஒரு காட்சியிலும் சித்தரிக்கப்படாமல் அதை நியாயப்படுத்தும் விதமாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அதைவிட கொடுமையாக இரண்டு மனைவி உடைய கதாநாயகன் மிகவும் சிரமங்களுக்கு ஆளாவதைக் காட்டி அவர் மீது அனுதாபம் பிறக்கும்படி காட்சிகள் இருந்து வருகின்றன.
மெகாத் தொடர்களில் ஆணாதிக்கம் என்பது இயற்கையானது அதை மீறாமல் நடப்பதே குடும்ப பெண்களுக்கு நல்லது என்பதை தொடர்ந்து மூளைச்சலவவை செய்யப்படுகிறது.இதன் மூலம் அடிமைத்தனத்தை பெண்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும்படி அவர்களின் மனநிலையை தயார் செய்கின்றனர்.(தொடரும்)
பகுதி – 2
இந்த மெகாத்தொடர்கள் ஏன் வெற்றி பெறுகின்றன? என்பது குறித்து நடத்தப்பட்ட உளவியல் ஆய்களில் வெளியிடப்பட்ட சில காரண்ங்கள் பெரும்பாலான பெண்கள் எந்தவித அங்கீகாரமும் இல்லாத வீட்டு வேலைகளின் சுமைகளில் மூழ்கி முடங்கி போகின்றனர்.இவர்களுக்கான உணர்வுகளுக்கான வடிகாலாகவே தொடர்கள் விளங்குகின்றன.எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் புத்திசாலியாக இருந்தாலும் சமூகத்திலும் குடும்பத்திலும் அவள் அறிவிற்காக என்றுமே அங்கீகரித்து நடத்தப்படுவதில்லை.
அவள் இரத்தமும் சதையும் கொண்ட மனுஷியாக நடத்தப்படுவதில்லை.இந்த சூழ்நிலையில் தொடர்களில் வரும் கதாநாயகிகள் அறிவாளிகளாகவும் தலைமைப்பண்பு உடையவர்களாகவும் மிக மிக நேர்மையாளர்களாகவும் ,அதே சமயத்தில் குடும்ப அமைப்பிற்குள் நல்ல குடும்ப பெண்ணாகவும் காட்டப்படுவதால் பெண் பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரத்துடன் அய்க்கியப்படுத்திக் கொள்கின்றன.
கதாபாத்திரங்களாக உள்ள ராதிகாவின் அல்லது தேவயானியின் வெற்றியில் மகிழ்ச்சி கொள்கிறார்கள். அவள் தோல்வி கண்டால் அவளது துன்பத்தில் இவர்கள் துன்பமுற்று கண்ணீர் வடிக்கிறார்கள்.குடும்பம் என்ற அமைப்பிற்கு சிறிது கூட சலனம் ஏற்படாமல் கணவனுக்கு சேவை செய்வதற்காகவே வாழ்கின்ற பதிவிரதைகளாக புகுந்த வீட்டாரின் மகிழ்ச்சியில் தனது மகிழ்ச்சியை காண்பவர்களாக வாழ்ந்து காட்டுவது அதே போல சமூகத்திலுள் பெண் பார்வையாளர்களை வசீகரப்படுத்தி விடுகிறது.
அதே சமயத்தில் பார்வையாளர்களை மேலும் ஈர்ப்பதற்கு குடும்ப ஆணாதிக்க வரம்பிற்குள் கதாநாயகிகள் சிறிது எதிர்ப்பைக் காட்டுவார்கள். பின்னர் சமரசப்படுத்திக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர்.அக்குடும்பத்தில் அனைத்து பெண்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அதிசய பிறவிகளாக ஆபத்து வரும்போதேல்லாம் எம் ஜி ஆர் போல அங்கு தோன்றி அவர்களை காப்பாற்றுகின்றனர்.ஒரு பெண் எம்.ஜி.ஆராக வலம் வருவதால் இந்த கதாபாத்திரங்கள் நேசிக்கப்படவும் தொடங்குகின்றனர்.இதே காரணத்தால்தான் ராதிகாவை வைத்து கொலைகார கோலா கம்பெனி விளம்பரம் செய்து மீண்டும் அனைத்து மக்களையும் இந்த குளிர்ப்hனங்களை குடிக்க வைத்தது.
சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரைக் காட்டும்போது குறிப்பாக தலித் மக்கள் மீனவர்கள் சிறுபான்மையினராகிய கிருத்துவர்கள் மற்றும இஸ்லாமிய சமூகத்தினர் ஆகியோரைக் சித்தரிக்கும்போது யதார்த்தில் இல்லாதபடி, விநோதமானவர்களாக சித்தரிப்பர்.தலித் மக்களாக இருந்தால் அவர்கள் கருப்பான நிறம் கொண்டவர்களாக இருப்பர். கிழிந்த உடையுடன், சேரியிலுள்ளவர்களாகவும் உதிரித்தனமான வேலைகளை செய்பவர்களாகவும் காட்டப்படுவர்.இது ஆதிக்க சாதியினரின் நிறவெறி மனப்பான்மையாகும். பெரும்பாலும் தலித்மக்கள் உழைப்பாளிக்குரிய அழகுடன் சாதி இந்துக்களைவிட நல்ல உடை அணிவது தான் வழக்கமாக உள்ளது .ஆனால் ஆதிக்க மனப்பான்மையுட்ன் அவர்கள் எப்போதும் பரிதாபமான தோற்றத்துடனே சித்தரிக்கப்படுகிறார்கள்.சின்னத்திரையினரின் இந்த பார்முலா பெரிய திரையினரிடமிருந்து பெறப்பட்டதே.
கிருத்துவர்களாக இருந்தால் சிலுவையை அது வெளியில் தெரியும் படி மாட்டிக்கொண்டு வலம் வருவதாக காண்பிப்பதும் முஸ்லீமாக இருந்தால் தலையில் குல்லா அணிந்து இருப்பதாக காட்டுவதும் இந்துத்துவ மனப்பான்மையே .(நடைமுறையில் இறைவழிப்பாட்டில் இருக்கும்போது மட்டுமே அவர்கள் மத அடையாளங்களுடன் இருக்கின்றனர்)
இன்னொரு முக்கிய விசயம். கடந்த பத்தாண்டுகளாக தொடர்களை தொடர்ந்து பார்த்து வருகிறவர்கள் ஒரு மாற்றத்தை கவனிக்க முடியும்.அந்த மாற்றம் அபாயகரமான மாற்றமாகும் .அது பெண் வில்லிகள் ஆண் வில்லன்களுக்கு நிகரான கொடூரமானவர்களாகவும் உருவாக்கப்பட்டு வருவதுதான்.
அடக்க ஒடுக்கத்துடன் உள்ள பெண்கள் அதிகம் எண்ணிக்கையில் வலம் வரும் தொடரில் இவர்கள் மிகவும் வேறுபட்டு படைக்கபடுகின்றனர்,எப்படி?
ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் உறவுகளுக்கு இடையே அன்றாடம் நடைபெறும் பரிமாற்றங்கள்,உறவில் ஏற்படும் மனக்கசப்புகள் மற்றும் விரிசல்கள் ,கள்ள உறவுடன் கணவனோ மனைவியோ இழைக்கும் துரோகங்கள் இதனால் ஏறபடும் பாதிப்புகள் ஆகியவற்றுடன் தொடர்கள் சுவராஸ்யமாக துவங்கும். பின்னர் இதில் மாமியார் அல்லது மருமகள் அல்லது இரண்டாவது மனைவி அல்லது ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்ட பெண் வில்லியாக உருவாகுவர். படிப்படியாக அவள் கொடிய தீய சக்தியாக உருவெடுப்பதாக கதை அமைக்கிறார்கள்.
நடுத்தர வர்க்கத்தினரே அனைத்து மக்களுக்காகவும் பேசுகிறார்கள்.நடுத்தர வர்க்க குடும்பங்களே நாட்டில் அனைத்து மக்களின் பிரதிநிதிகளாகவும் அவர்களின் பிரச்சினைகளை நாட்டிலுள்ள அனைத்து மக்களின் பிரச்சினைகளாகவும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள் .நடுத்தர வர்க்கத்தின் பண்பாடே அனைத்து மக்களின் பண்பாடாகவும் முன் வைக்கப்படுகிறது.இத்தொடர்களில் பெண்™ணுக்கு பெண்னே எதிரியாக இருப்பதாக நம்ப வைக்கிறார்கள்.ஒரு பெண் வில்லி பாத்திரம் என நிறுவிட அவள் எப்போதும் சதிகளில் ஈடுபடுவதாகவும் திருமணத்திற்கு முன்னரும் திருமணமாகியும் கள்ள உறவு கொள்வதாகவும் அப்பாத்திரத்தை உருவாக்கிறார்கள்.கதாநாயகனை அடைய எல்லாவித வழிகளையும் கையாள்வதாகவும் காண்பிக்கப் படுகிறது .இந்த வில்லிகள் கண்ணை உருட்டி மிரட்டி (குளோசப் ஷாட்டில் தொடர்நது அதிக நேரம் வேறு காட்டி தொலைக்கிறார்கள்) அடியாள்களுக்கு தனது விலையுயர்ந்த செல் போனில் பேசுவதாகவும் அடிக்கடி காட்டுகிறார்கள் .
பிரம்மாண்டமான பார்ட்டிகளில் கலந்து கொள்பவர்களாகவும் அதிகமான நகை அணிபவர்களாகவும் ஆடம்பர கார்களில் வந்து இறங்குபவாகளாகவும் வேறு காட்டுவதன் மூலம் ஒரு குறிப்பிட்டமனநிலையை பார்வையாளர்களுக்கு உருவாக்குகிறார்கள். மெகா தொடர்களில் பெண்கள் எப்படி கொடியவர்களாக குரூரமாக காட்டப்படுகின்றனர் என்பதற்கு சமீபத்தில் இந்து நாளேட்டில் (அக்டோபர் 31)மாலதி மோகன் என்ற எழுத்தாளர் எழுதியுள்ளதே சிறந்த சான்றாகும். அண்மையில் தெலுங்கு மெகாத்தொடரில் ஒரு சிறுமிக்கு எண்ணெய் குளியல் அளிக்கப்படுகிறது .அப்போது அவளுக்கு அளிக்கப்படும் தலைக்கு தேய்க்கப்படும் சீயக்காய்த்துhளில் கண்களை குருடாக்கும் இராசாயனத்தை வில்லி கலந்து விடுகிறாள் .அதன்பின்னர் அதைத் தெரியாக அந்த சிறுமி குளிப்பதை காட்டுகிறார்கள் .அந்த சீயக்காய் கண்களில் பட்டு 15 நிமிடம் வரை அந்த சிறுமி எரிச்சல் தாங்க மாட்டாமல் அலறித் துடிக்கிறாள்.அதை பார்த்து வில்லி பயங்கரமாக சிரித்து ரசிக்கிறாள்.அதற்கு பின்னணி இசை பயங்கரமாக உச்சத்தில் ஒலிக்கிறது .
இதை அந்த எழுத்தாளரின் வீட்டிலுள்ளவர்கள் நிலை குத்தியவாறு பார்த்து கொண்டிருப்பதை கண்டு அவர்களுடன் இதை எப்படி பார்த்து உங்களால் ரசிக்க முடிகிறது என்று கேள்வி கேட்டு வாக்கு வாதம் செய்ததாக கூறியுள்ளார்.தமிழக வில்லிகள் அடியாளை வைத்து பிறரை அடிப்பதை ரசிப்பதை அன்றாடத் தொடர்களில் காணலாம்.
ஏன் இந்த போக்கை அபாயகரமானது என்று குறிப்பிடுகிறோம் ? சினிமாவில் வில்லிகளை பார்த்துள்ளளோம். அவர்கள் சினிமா முடிந்து வெளியில் வந்தவிடன் அந்த பாதிப்பிலிருந்து விடுபட்டு விடுவோம் .ஆனால் இந்த வில்லிகள் நமது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அமர்ந்திருக்கும் உணவருந்தும் அறையிலும் படுக்கை அறையிலும் அன்றாடம் ஊடுருவி பாதிப்பது தான் .அந்த பாதிப்பு நீடிப்பதும்தான் பிரச்சினை.குறிப்பாக இளம் தலைமுறையினரையும் ஆண்களையும் உளவியல் ரீதியாக மாற்றுகின்றன. உண்மையில எந்த பெண்களும் அப்படி இல்லை.ஆனால் இப்படி காட்டுவது மூலம் பெண்களுக்கு சுதந்திரமான முடிவெடுக்கும் நிலையில் பெண்கள் இருந்தால் இப்படித்தான் மாறி விடுவார்கள் என்றபடி ஆணாதிக்க மனநிலையிலுள்ள ஆண்களின் அடிமனத்தில் திட்டமிட்டு அச்சத்தை உருவாக்குகிறார்கள்.குடும்பத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் சிறிய அளவு சுதந்திரதிற்குகூட உலை வைக்கின்றனர்.
ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது பெண்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சிகள் பெண்களின் பிரச்சினைகளை மறந்தும்கூட பேசுவதில்லை.ஆனால் அதே சமயத்தில் பெண்களுக்கு எதிரான அவர்களை அடிமைப்படுத்தும் விசயங்களை அவர்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும்படி அளிக்கின்றன என்பது தான் உண்மை. ஏற்கனவே பெண்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக அணிதிரள்வதும் ஒன்று சேர்வதும் கடினமான ஒன்றாக உள்ளது. .ஆண் தலைமையிலுள்ளதும் ஆணாதிக்க அமைப்பாகவும் உள்ள சமூக அமைப்பும் குடும்ப அமைப்பும் தடையாக உள்ளது.இந்த நிலையில் அவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலையை வலிமைப்படுத்துகிறது இந்த தொலைக்காட்சிகள்.ஒரு வகையில் மிகப்பெரிய போதைப் பொருள் தொழிற்சாலையாக இவை இயங்கி வருகின்றன.
(தொடரும்)
இப்ப்பதிவு முன்னைய பதிவின் இரண்டாம் பகுதி,
எனக்கும் ஈஸ்ட் எண்டர்ஸ் மாதிரி ஒரு தொடர் எடுக்க வேண்டும் என நீண்ட காலக் கனவு உண்டு.இவருக்குப் பதிலாக அவர் என இல்லாமல் நடிகர் பாத்திரப் படைப்பாய் தொடருவார் இதில் கமல்,கார்த்திக்,சந்திரசேகர்,,வடிவேலு என சென்னை நகரைச் சுற்றீ நட க்கும் அதன் பிரதிபலிப்பாய்.செளகார் பேட்டை,அங்கப்பநாயக்கன் தெரு,வடசென்னை,மயிலாப்பூர் என வட்டத்தைச் சுற்றீ நமது நாளாந்த வாழ்வின் கதை.ஆனால் இன்னும் லொட்ரி விழாததினால் அது தள்ளீப் போய்க் கொண்டே இருக்கிறது.கூவத்தை சுத்தம் செய்து அங்கு படகு விடுவது போல.