உலக இயற்கை நிதியத்தின் சார்பி்ல ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை(28.03.2009) நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த பூமி நேரம் (Earth Hour) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது உலக இயற்கை நிதியம்.
இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும்.புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது.
2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர்.
உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓரா ஹவுஸ், ரோம் நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.
இந்த ஆண்டு பூமி நேரம், வருகிற சனிக்கிழமை (28ம் தேதி) இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை 1000 நகரங்களைச் சேர்ந்த 100 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.