சனல் 4 கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியை வெளியிட இம்முறை எட்வார்ட் ஸ்னோடெனைத் தெரிவு செய்திருந்தது. வரலாறுகாணாத அளவிற்கு உலக அரச பயங்கரவாதச் செயற்பாடுகளை உலக மக்களுக்கு வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடென். ஆளும் அரசுகள் குறித்தான குறைந்தபட்ச விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினார். முன்னைய கம்யூனிச நாடுகள் தமது மக்களைக் கண்காணிக்கும் இரும்புத் திரை என்ற பிரச்சாரத்தை ஐரோப்பிய அமரிக்க முதலாளித்துவ அரசுகள் கட்டவிழ்த்துவிட்டன.
இதற்காக அனைத்து சமூக அரசியல் தளங்களிலும் பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கிவிட்டன. இன்று பொதுவாக எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட விலங்குப் பண்ணை என்ற ஜோர்ஜ் ஓவல் எழுதிய நாவல் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. மக்களைப் பற்றிய தகவல்களை கம்யூனிச அரசுகள் சேகரித்து கண்ணாணித்து வருகின்றன என்ற போலிப் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதுவே சமூகத்தின் பெரும்பகுதியின் நம்பிக்கையாக மாற்றமடைந்தது. ஜோர்ஜ் ஓவலின் நாவலுடன் ஒப்பிடக்கூடிய முடியாத அளவிற்கு பாரிய அளவில் மக்களை இன்றைய அரசுகள் கண்காணிக்கின்றன என்கிறார் ஸ்னோடென்.
எதிர்காலத்தில் மக்களுக்குத் தனிப்பட்ட வாழ்க்கை என்பதே கேள்விக்குறியாகியுள்ளது என்று தனது செய்தியில் மேலும் தெரிவிக்கிறார். சனல் 4 இன் இந்த முயற்சி ஜனநாயக முற்போக்கு சக்திகளின் பாராட்டைப் பெற்றது.