03.08.2008
இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு அனுமதிகோரி பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தபோதும், அனைத்துக்கும் எதிர்மறையான பதிலே வழங்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடவேண்டி உள்ள நிலையில், சந்திப்புக்கான அனுமதி நிராகரிக்கப்பட்டமையானது கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார். அனுமதி நிராகரிக்கப்பட்டமைக்கான எந்தக் காரணமும் கூறப்படவில்லையென பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
எனினும், கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சார்பில் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் முதலமைச்சரை ஏன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கவில்லை என்பது குறித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் பேச்சாளர் டின்கார் அஸ்தான் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் சிறுவர் போராளியாகவிருந்தவர் தற்பொழுது கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதாக 15வது சார்க் மாநாட்டின் ஆரம்ப உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.