இது தொடர்பாக நாம் தமிழர் செய்தித் தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவரும் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளருமாகிய அசோக் குமார் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பேருந்தில் நடைபெற்ற ஒரு வாய்ச்சண்டை காரணமாக விசாரிப்பதற்காக என்று கூறி திருக்கழுக்குன்றம் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள காவல்துறையினரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.இந்த சித்திரவதையில் உதவி ஆய்வாளர் சரவணன்,மற்றும் சத்தினசாமி, நட்ராஜ், முனுசாமி, குப்புசாமி, பார்த்திபன், சௌந்தர்ராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.காவல்நிலையத்தில் நடந்த இந்த கொலை வெறித்தாக்குதலை நாம் தமிழர் வன்மையாகக் கண்டிக்கின்றது.திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் நாடு முழுவதும் நடைபெறும் கொலை,கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் நிம்மதியிழந்து தவிக்கையில்,தற்பொழுது காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகின்றது.அதுவும் நாளை இந்தியாவின் அரசியல் அமைப்பைப் பாதுகாக்கும் சட்ட மாணவருக்கே இந்த நிலை என்றால் இது ஜனநாயக நாடு தானா?என்னும் சந்தேகம் நிலவுகின்றது.தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்ளிருப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்திய பின்பு கண்துடைப்புக்காக சாதாரண பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மு.கருணாநிதி ஜெயலலிதாவின் ஆட்சியின் பொழுது கைது செய்யப்பட்ட பொழுது, காவல்துறையின் ஈரல் கெட்டுப்பொய் விட்டது என்று கூறினார்.ஆனால் தற்பொழுதைய சம்பவம் குறித்து எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கின்றார்.சட்டக்கல்லூரி மாணவர் மீதான தாக்குதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.காவல்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிணையில் வெளிவராத பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.விசாரணை முடியும் வரை அவர்களைத் தற்காலிகப்பணி நீக்கம் செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவருக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.