மலையக இலக்கியத்தின் தூண்களிரொருவரான சக்தீ பால-ஐயா தனது 88 வது வயதில் (02-08-2013) அன்று தாம் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தியை இன்று காலை 5.30 மணியளவில் அறிவித்த மல்லியப்புச் சந்தி திலகர் கவிஞரின் சொந் நாட்டினிலே தேசிய கீதங்கள் என்ற கவிதைத் தொகுப்பையும் கொடுத்து அவர் பற்றிய அறிமுகக் குறிப்பொன்றினை எழுதுமாறு தோழமையுடன் கேட்டுக் கொண்டார். எனக்கு அவருடனான நேரடி உறவை ஏற்படுத்தியவர் மல்லியப்பு சந்தி திலகர். ஒரு காலக்கட்ட ஆர்பரிப்பில் மலையக கவிதை இலக்கியத்தின் தூண்களில் ஒருவராயிருந்த இக்கவிஞர் சில காலம் அஞ்ஞாவாசம் செல்லவும் தவறவில்லை. அவரை மீண்டும் இலக்கிய அரங்கிற்கு கொண்டு வந்தவர்களில் திலகரும் ஒருவர்.
சக்தீ பால-ஐயா தமது ஜீவனோபாயத்திற்காக அவ்வப்போது சில தொழில்களை செய்து வந்திருப்பினும் அவர் முழுநேர சமூக சிந்தனையாளராகவே இருந்து வந்துள்ளதை அவருடன் நெருங்கி பழகியவர்கள் அறிவர். ஆவர் கவிஞர், ஓவியர், கட்டுரையாளர், கதையாசிரியர், பத்திரிகையாளர் என பல்துறைசார்ந்த ஆளுமைகளை கொண்டிருப்பினும் கவிதைத்துறையே அவரைக் கவணிப்புக்குரியவராக்கியது. ஆதற்காக ஏனைய துறைகள் யாவும் புறக்கணிக்கதல்ல.
காந்திய, திராவிட சிந்தனைகளால் கவரப்பட்ட அவர் மக்களின் வாழ்வியலிலிருந்து அந்நிய முறாமல் தம் படைப்புகளை வெளிக் கொணர்ந்தமை மலைய இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பாகும்.
ஸி. வி.யின் உணர்வுகளை தமதாக்கி கவிதைப் படைத்த சக்தீ பாலஐயா அவர்களின் பங்களிப்பு கனதியானது..
இலங்கையின் தேயிலைத்தோட்டத்திலே என்ற கவிதைத் தொகுப்பு ஒருவகையில் ஸி.வி.யின் கவிதைகளை வாசித்த உந்துதலினால் எழுதப்பட்ட கவிதைகளே( அவற்றை தழுவல்கள் என்றுக் கூட சொல்லாம்) என்பதை அவர் இருந்த பல மேடைகளிலும் தனிப்பட்ட உரையாடல்களின் போதும் கதைத்திருக்கின்றேன். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த போது, ஸி.வி. யின் படைப்பின் தாக்கத்தினால் தனது ஆக்கம் வெளிப்பட்டடேயன்றி மொழியெர்ப்பென தாம் குறிப்பிடவில்லை என்று சக்தீ பாலஐயா தனிப்பட்டவகையிலும் சில கூட்டங்களிலும் கூறியதை கேட்டிருக்கின்றேன். இக் கிதைகளில் ஸி.வி.யின் ஆளுமை வெளிப்பட்டதை விட சக்தீ பாலஐயாவின் ஆளுமை வெளிப்பட்டிருப்பதையே காணமுடிகின்றது.
இலங்கையில் பேரினவாதத்தை முதன் முதலாக அரசியல் அரங்கில் இனங்கண்டு அதனை முற்போக்கான திசையில் முன்னெடுத்து சென்றதில் கோ. நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளுக்கு முக்கிய இடமுண்டு. இந்த பாராம்பரியத்தின் செல்வாக்கை நாம் சக்தீ பால-ஐயாவிலும் காண முடிகின்றது. அவர் இனவாதத்திற்கு எதிராக வேள்வியை இவ்வாறு வளர்க்கின்றார்.
சிங்களம் மட்டும் சட்டம்- இங்கு
சிங்களச் சாதிக்கென்போம்- தமிழ்
எங்களுயிர்க் கிணையாம்- அதுவே
எமக்கினிது என்போம்- எந்தப்
பங்கமம் வராமல் – தமிழ்ப்
பண்பும் வழுவாமல்- இனி
எங்குத் தமிழரசை- மகாசக்தீ
ஏற்றித் துணைப்புரிவாய்
1960களில் இலங்கையின் வடக்கில் சாதிய போராட்டம் எந்தளவு முனைப்படைந்தியிருந்ததோ அதேயளவு பேரிவாதத்திற்கு எதிரான தமிழ் தேசியமும் முனைப்படைந்துயிருந்தது. கம்ய+னிட்டுகளும் ஏனைய நேச சக்திகளும் சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். அவ்வாறே தமிழின ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை தமிழரசுக் கட்சியினர் முன்னெடுத்தனர். இங்கு சாதியத்திற்கு எதிரான பேராட்டமும் பேரிவாத ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமும் பிளவுப்பட்ட தேசியமாக பரிணமித்தமை வரலாற்றரங்கில் நாம் விட்ட இடைவெளியாகும். இவ்விடத்தில் இன்னொரு விடயத்தினையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதாவது தமிழினவொடுக்கு முறைக்கு எதிராக முற்போக்கான பார்வையைக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சியினர் நசிவு தரும் அரசியல் சூழலின் பின்னணியில் பிற்போக்குவாதிகளின் கூடாரமாகியது என்பது இன்னொரு துரதிஸ்டவசமானதொன்றாகும். இந்நிலையில் மானுடனாக நின்றுக் கொண்டு தமிழினவொடுக்கு முறைக்கு எதிராக சக்தீ பால-ஐயா கவிதைத் தீ உமிழ்வது அவரது பரந்துப்பட்ட அரசியலை மாத்திமல்ல இதயத்தையும் எமக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
அவரது இறுதிக் கடிதம் பற்றித் திலகர் என்னுடன் கதைத்தார். தனது மரணசடங்கை மிக மிக எளிமையாகவும் மத சடங்குகளுக்கு அப்பாட்பட்டதாகவும் யாருக்கும் தொல்லை தராமலும் இருக்க வேண்டும் என்பது அவரது இறுதி ஆசை. மரணத்தருவாயிலும் சக மனிதர்கள் பற்றிய அவரது காதல் எவ்வாறு உள்ளது என்பதற்கு இக்கடிதம் சாட்சியமாய் அமைகின்றது.
88வது வயதில் ஒருவர் இறப்பது என்பது சாதாரண விடயம் தான். ஆனால் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கான தம்மை அர்பணித்துக் கொண்ட மனிதனின் இறப்பு- நெஞ்சின் ஒரு மூலையில் நெருடல் எம்மை வாட்டவே செய்கின்றன.
Some one said that day that they poisoned leader Chandrasekaran. Is that true?
சக்தீ பால ஐயா 26.07.1925 ஆம் ஆண்டு பிறந்தார்.
தலவாக்கலை – லிந்துலை தோட்டத்தை பிறப்பிடமாகவும், வத்தளை மாபொலையினை வசிப்பிடமாகவும் கொண்ட மலையகத்தின் மூத்த கவிஞர், மூதறிஞர், தனிவழிகவிராயர், கலாபூஷணம் சக்தீ பால ஐயா தனது என்பத்தோன்பதாவது வயதில் 02.08.2013 வெள்ளிக்கிழமை றாகமை வைத்தியசாலையில் காலமானர்.
கவிஞர், எழுத்தாளர், ஓவியர், ஊடகவியலாளர், விரிவுரையாளர் ஆய்வாளர் என பல பரிணாமங்களை பெற்ற இவர், புகழ்பெற்ற கவிஞரான ஸி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon’s Tea Garden என்ற கவிதை நூலினை தமிழாக்கம் செய்து ஸி.வியின் உணர்வுகளை தமிழர்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பெருமைக்குரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ஆரம்ப கல்வியினை தலவாக்கலை அரச இருமொழி பாடசாலையிலும், இடைநிலை கல்வியினை தலவாக்கலை சென் பெற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியினை இலங்கை தொழிநுட்ப கல்லூரியிலும் பயின்றவர். தனது பெயரில் பாலை (நிலம்) என்ற சொல் இருப்பதை விரும்பாத இவர் தனது பெயரை சக்தீ பால ஐயா என மாற்றிகொண்டவர்.
இவர் கவிஞர், எழுத்தாளர், ஓவியர், ஊடகவியலாளர், விரிவுரையாளர் ஆய்வாளர் என பல் பரிணாமங்களில் பிரகாசித்தவர். கொழும்பில் அமைந்துள்ள இலங்கை தொழிட்நுட்ப கல்லூரியிலும் Heywood Collage of Fine Arts கல்லூரியிலும் விரிவுரையாளராகவும் தொழில்புரிந்தார்.
நான்காம் வகுப்பு மாணவனாக இருந்தபோதே மாணவர் மலர் என்ற இதழினையும், அதற்கு பின்னரான காலத்தில் யுத்த முனை என்ற அந்நியராட்சிக்கு எதிராக பத்திரிகையினையும் 1956 இல் வளர்ச்சி என்ற கலை இலக்கிய சமூக இதழினையும், 1960 ஆம் ஆண்டு தமிழ் ஒளி என்ற இதழினையும் வெளியிட்டவர்.
1956 களில் வீரகேசரியில் உதவி ஆசிரியராகவும் 1970 களில் தொழிற்சங்க துறவி வி.கே.வெள்ளையன் ஸ்தாபித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் இதழான மாவலி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
1952 ஆம் ஆண்டு மனோதத்துவமும் கலையும் போதனா முறையும் என்ற நூலையும், சொந்த நாட்டிலே எனும் பாடல் நூலையும், 1997 ஆம் ஆண்டு சக்தீ பால ஐயா கவிதைகள் என்ற கவிதை தொகுப்பினையும், 2011 ஆம் ஆண்டு Analysis of Ages of Lives on Earth and Dravidian culture என்கின்ற ஆங்கில நூலையும் எழுதியுள்ளார்.
இந்திய வம்சாவளியினர் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட இனமாக பிரஜாவுரிமை அந்தஸ்த்தோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக 1961 ஆம் ஆண்டு இலங்கை இந்திய வம்சாவளி பேரவை எனும் அமைப்பினை உருவாக்கி அதனை வழிப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி – அத தெரன