17.08.20008.
கச்சத்தீவு தொடர்பாக 1974-இல் இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சிறிலங்க அரசிற்குத் தாரை வார்க்கப்பட்டுள்ள கச்சத்தீவை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் உத்தரவிட வேண்டும் என்றும் ஜெயலலிதா தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம் வருமாறு:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திற்கு அருகில் பாக் நீரிணைப்புப் பகுதியில் உள்ள 285 ஏக்கர் பரப்பளவுள்ள, ஆள் நடமாட்டமில்லாத சிறிய நிலப்பரப்புதான் கச்சத்தீவு.
ஓய்வெடுக்கவும், தங்களது வலைகளைக் காயவைக்கவும் இந்திய மீனவர்கள் பயன்படுத்தி வந்த இந்தத் தீவு, 1974 இந்திய- சிறிலங்கா ஒப்பந்தம் மூலம் சிறிலங்காவிடம் தாரை வார்க்கப்பட்டு விட்டது.
முன்னாள் அயலுறவு அமைச்சரான மறைந்த ஸ்வரண் சிங், ஜூலை 23, 1974 இல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், கச்சத்தீவு சிறிலங்காவிற்குச் சொந்தமானது என்பதை இந்தியா அங்கீகரிக்கிறது என்று தெரிவித்தார். இதன்மூலம் கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன.
எனவே, கச்சத்தீவு தொர்பாக ஜூலை 26, 1974 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ள இந்திய- சிறிலங்க ஒப்பந்தம் சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்க வேண்டும்.
வரலாற்று அடிப்படையிலும், புவியியல் அடிப்படையிலும் இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள கச்சத்தீவை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது மனுவில் கூறியுள்ளார்