மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராய் சட்டக்கல்லூரி மாணவர்கள் அணி அணியாக பிரிந்து ஒவ்வொரு நடுவன் அரசு அலுவலகங்களாக சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று கோவையில் அனைத்து கட்சிகளின் சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததற்கு இணங்க, அனைத்துக்கட்சியினரும் தொடர்வண்டி நிலையம் அருகில் குவிந்திருக்க, அங்கு காவல் துறையும் பெரும்படையை குவித்திருந்தது.
இந்த நிலையை மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கோவை மாநகரில் அமைந்துள்ள நடுவன் அரசு அலுவலகங்களை நோக்கி அணி அணியாக படையெடுத்தனர்.
முதலில் ஒரு அணி அவினாசி சாலை மேம்பாலம் அருகில் அமைந்துள்ள கடவு சீட்டு அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. இன்னொரு அணியோ கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள மண்டல வருமான வரி ஆணையர் அலுவலகத்தினை முற்றுகையிட்டது.
மேற்படி நிகழ்ந்த போராட்டங்கள் குறித்து காவல்துறைக்கு தெரிந்திருக்கவில்லை. காவல்துறையின் கவனம் தொடர்வண்டி நிலையத்திலேயே இருந்தது. மாணவர்கள் தொடர்ந்து முக்கிய சாலை சந்திப்புகள் வழியாக நடுவன் அரசு அலுவலகங்களை நோக்கி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். இதனைக்கண்ட பாதசாரிகள், பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் பதட்டம் அடைந்தனர். என்ன நிகழ்கிறது என்று யாருக்கும் அங்கு தெரிந்திருக்கவில்லை. இதனால் கோவை மாநகரில் நாள் முழுதும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.