வன்னிக் களமுனைகளில் வெற்றிகரமாக முன்னேறிச் செல்கின்ற இராணுவத்தின் களநிலை தளபதிகளையும் இராணுவத்தினரையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ அவர்கள் வியாழனன்று மன்னார், வவுனியா மாவட்டங்களுக்குச் சென்று நேரில் பாராட்டி ஊக்குவித்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, விமானப்படைத் தளபதி மார்ஷல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இராணுவ உயரதிகரிர்களுடன் போர் முனை மாவட்டங்களாகிய மன்னார், வவுனியா பிரதேசங்களுக்கு விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஷ வன்னிப்பிரதேசத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான கள நிலைமைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு, அந்தப் பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாகவும் மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள இராணுவ உயரதிகாரிகளுடனும், களநிலை இராணுவ அதிகாரிகளுடனும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான உயர் மட்ட இராணுவ குழுவினர் கலந்தாலோசித்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் இருந்து வெளியேறி வருகின்ற பொதுமக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும், அந்த மக்களோடு மக்களாக அங்கிருந்து வெளியேறக்கூடிய விடுதலைப் புலிகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது பற்றியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஷ தனது விஜயத்தின் போது அக்கறை காட்டியதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது