14.12.2008.
அமெரிக்க பிரஜைகளான இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் அமெரிக்க நீதித் திணைக்களத்தில் தமிழர் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்டமா அதிபர் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 18 யூஎஸ்சி 1091 ஆம் சட்டத்தின் படி இந்த குற்றச்சாட்டுக்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக பெய்ன் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜை, சரத் பொன்சேகா அமெரிக்க நிரந்தர வதிவிட பிரஜை என்ற அடிப்படையிலேயே இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இந்த குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் புதிய இராஜாங்க செயலாளர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக புரூஸ் பெய்ன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.