கொஸ்லந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற நிலச்சரிவில் பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால அனர்த்தங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான முன் ஆயத்த செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல், அப்புத்தளை சைவ இளைஞர் மன்றம் மற்றும் மக்கள் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 01.11.2014 அன்று ஹப்புத்தளையில் இடம்பெற்றது. பிரதேச அரசியல் தலைவர்கள், வர்த்தக சமூகத்தினர், சிவில் அமைப்புகள் மற்றும் பிரதேச மக்கள் பங்குகொண்ட இக் கலந்துரையாடலில் சிறப்புரை ஆற்றிய மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா மீரியாவத்தை மக்களின் உயிர் வாழும் உரிமை மீறப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு நிபுணத்துவ சட்டத்தரணிகள், பொது அமைப்புகள், மக்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். அவரின் உரையில் மேலும் குறிப்பிட்டதாவது;
அனர்த்தம் இடம்பெற்று பலநாட்கள் கடந்துள்ள நிலையில் காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை உறுதியாக அரசாங்கம் கூறவில்லை. மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பாகவும் ஒவ்வொரு எண்ணிக்கைகள் ஊடகங்களில் சொல்லப்படுகின்றன. சரியான புள்ளிவிபரங்களை வழங்கவில்லை. உரிய அதிகாரிகள் மலையக மக்களுடன் தொடர்பான புள்ளிவிபரங்களை முறையாக பராமரிப்பதில்லை என்பது இதனூடாக வெளிப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய சரியான புள்ளிவிபரங்கள் பெறப்படும் போதே நிவாரண நடவடிக்கைகளை முறைப்படுத்தி செய்ய முடியும். அத்தோடு அழிவுற்ற சொத்துக்களின் பெறுமதிகளையும் மதிப்பிட வேண்டியுள்ளது. அத்தோடு அரசாங்கம் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு தலா ஒரு இலட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது. எனினும் சடலங்கள் அனைத்தும் எடுக்கப்படுமா என்ற நிலை காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்கள் இழப்பீடுகள் பற்றி கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உண்டு.
அரசாங்கம் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பொறுப்பேற்பதாக குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளின் உளவியலை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களை அவர்களுடன் தொடர்பற்ற சூழலில் வைத்து வளர்க்கப்படுவது பொருத்தமற்றது. சிறுவர்களின் உறவினர்கள் அக்குழந்தைகளை பொறுப்பேற்க முன்வருவார்களாயின் அதற்கு வழிவிட வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் அச்சிறுவர்களை பொறுப்பேற்க விரும்பும் தொண்டுஃநற்பணி நிறுவனங்கள் முன்வரும் போது அதற்கு வழிவிட வேண்டும். அரசாங்கம் அதனை மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் உதவிகளையும் செய்யலாம். அதுவே சிறுவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்றதாகும்.
மீரியபெத்த தோட்ட மக்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டும் மக்கள் செல்லவில்லை என்று மக்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. மாற்று இடம் வழங்கப்பட்டும் அவ்விடத்தில் இருந்து செல்ல மக்கள் மறுத்திருப்பின் மக்களின் உயிர் வாழும் உரிமையை பாதுகாக்க அரசாங்கம் பலவந்தப்படுத்தியேனும் அங்கிருந்து அகற்ற வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது. ஏனெனில் அரசு மக்களின் உயிர் வாழும் உரிமையை பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. எனினும் அதிகாரிகள் அதனை செய்திருக்கவில்லை. எனவே இது தொடர்பாக பொறுப்புக் கொண்டுள்ள மஸ்கெலிய பெருந்தோட்டக் கம்பனி, தேசிய கட்டிடவியல் ஆய்வு நிலையம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், அனர்த்த முகாமைத்து அமைச்சு ஆகியவற்றின் உரிய அதிகாரிகள் தொடர்பாக விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறான விசாரணை எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுக்க வாய்ப்பளிக்கலாம்.
மீரியபெத்த அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களின் பேரால் அவர்களுக்கு உண்மையான கௌரவத்தை அஞ்சலியை செலுத்தும் வகையில் அனர்த்;தம் ஏற்படவாய்ப்புள்ள இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் வாழும் மலையக, சிங்கள, முஸ்லிம் மக்கள் என அனைத்து மக்களினதும் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். அனர்த்தம் ஏற்படக்கூடிய பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான மாற்று இடங்களில் தனி வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசியல், தொழிற்சங்க பேதங்கள் இன்றி அனைவருக்கும் உள்ளது. பொதுமக்கள் இவ்விடயத்தில் நிவாரணம் வழங்குவதுடன் நின்றுவிடாது எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கும் தார்மீக பொறுப்பை கையேற்று செயற்பட வேண்டும் என வழியுறுத்தினார்.
அப்புத்தளை சைவ இளைஞர் மன்றம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவ நிதியம் ஒன்று அன்றைய தினம் உருவாக்க தீர்மானித்துள்ளதாக மன்றத்தின் தலைவர் என். சின்னசாமி குறிப்பிட்டார். அத்தோடு மீரியபெத்த தோட்ட மக்களின் தகவல்களை திரட்ட தகவல் அமையம் ஒன்றை அமைப்பதற்கான பொறுப்பை சைவ இளைஞர் மன்றம் ஏற்றுக் கொண்டது.