மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறது தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு தென்னிந்திய சினிமாவில் வலுவானதும் மிகப்பெரியதுமான இந்த அமைப்பினர் நேற்று செய்தியாளர்களிடையே பேசும் போது, ” வரும் ஜூன் 4,5,6 ஆகிய தேதிகளில் இலங்கையில் இந்திய ஐ.ஐ.எப்.ஏ. அமைப்பு சார்பி்ல் சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம் இந்த இந்திய திரை விழாவில் திரை நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் எந்த விழாவையும் கொழும்புவில் நடத்தக் கூடாது என்ற தீர்மானத்தை எடுத்திருக்கிறோம். இந்த திரைவிழாவில் தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கலந்து கொள்ளும் திரை நட்சத்திரங்களின் படங்களி தென்னிந்தியாவில் திரையிட அனுமதிக்க மட்டோம்.இந்த விழா இலங்கையைத் தவிர்த்த வேறு எந்த நாட்டில் நடந்தாலும் அதை வரவேற்போம். இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய திரைப்பட அகாதெமி ( iifa ) குழுவினரை மும்பை சென்று நேரில் வலியுறுத்த உள்ளோம்” என்று நடிகர் ராதாரவி தெரிவித்தார். இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணன், நடிகர் சங்கம் சார்பில் ராதாரவி, பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரைக் கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படப் பத்திரிகைத் தொடர்பாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து திரை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.