கொழும்பில் மீண்டும் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. வத்தளை, புறக்கோட்டை, மொறட்டுவை ஆகிய பகுதிகளில் வசித்து வந்த மூவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மொரட்டுவை டி.மெல் ஒழுங்கையில் வசித்து வந்த யோகராஜா நிரோஜன் (27) என்பவரை சிலர் இம்மாதம் முதலாந்திகதி அழைத்துச் சென்றதாகவும் இது குறித்து மொரட்டுவை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, புறக்கோட்டை சென்றல் வீதி உப்பிலான் விடுதியில் வெளிநாடு செல்வதற்காக தங்கியிருந்த அச்சுவேலி, தம்பாலையைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை ரவிந்திரன் (33) என்பவர் கடந்த ஒகஸ்ட் 22 ஆம் திகதி மாலை 6.15 மணிக்கு பலவந்தமாக வெள்ளை வேனில் ஏற்றிச் செல்லப்பட்டதாக குறித்த நபரின் மனைவி ஆர். மகாலட்சுமி முறைப்பாடு செய்துள்ளார்.
வத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட யாழ்நகரைச் சேர்ந்த கிருஸ்ணன் கபில்தேவ் (26) என்பவர் தெமட்டகொடையிலுள்ள சலூன் ஒன்றில் தொழில்புரிந்து வந்த நிலையில் கடந்த ஒகஸ்ட் 18 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி காணாமல் போயுள்ள மூன்று நபர்கள் தொடர்பாக காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்னவுக்கு அறிவித்துள்ளதாக பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணன் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்ட மதிமுகராஜா விஜயவர்மன் (28) என்பவர் நேற்று முன்தினம் அதிகாலை வெள்ளவத்தை விகாரை ஒழுங்கையில் பலத்த காயங்களுடன் கண்கள் கட்டப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது