கொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளிவாசல் சந்தியில் இன்று அதிகாலையில், இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் படுகாயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன்போது அருகில் நின்றவரும் துப்பாக்கிச் சூட்டில் காயடமைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதை அடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்றிருந்தபோது, அங்கு கூடியிருந்த மக்கள் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீயிட்டு சேதப்படுத்தி எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அங்குள்ள மக்கள் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதன்போது பொலிஸ் நிலையத்தின் மீத பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் அரச ஆதரவுடனேயே பாதாளக் குழுக்கள் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.