கொழும்பு நகரில் சிங்களவர்களை விட தமிழர்கள் அதிகமாக வாழ்வதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும். கொழும்பு நகரில் 204,520 சிங்களவர்களும், 176,198 தமிழர்களும் வாழ்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் புள்ளிவிபர திணைக்களம் 2011ம் வருடம் நடத்திய ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி இதுதான் அதிகாரப்பூர்வ உண்மை. இதைவிட ஜாதிக ஹெல உறுமய வேறு ஒரு புள்ளிவிபர திணைக்களைத்தை நடத்துகின்றதா என கேட்க விரும்புகின்றேன்.
சிங்கள மக்கள் மத்தியில் தேவையற்ற இனத்துவேச சிந்தனையை விதைப்பதற்காக இத்தகைய உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிப்பதை அமைச்சர் சம்பிக்க ரணவக்க உடன் நிறுத்தவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
கொழும்பு மாநகரத்தில் வாழும் தமிழர், சிங்களவர் ஜனத்தொகை விபரங்கள் சம்பந்தமாக மனோ கணேசன் கூறியதாவது,
கொழும்பு மாவட்டத்தில் 1,771,319 சிங்களவர்களும், 258,654 தமிழர்களும், 242,728 முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். ஏனைய சிறுபான்மை இன பிரிவினரையும் சேர்த்து கொழும்பு மாவட்டத்தின் மொத்த ஜனத்தொகை 2,309,809 ஆகும்.
இதுபோலவே கொழும்பு மாநகரில் கொழும்பு மேற்கு, கிழக்கு, பொரளை ஆகிய மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவில் 125, 052 சிங்களவர்களும், 69,873 தமிழர்களும், 34,368 முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். வட கொழும்பு, மத்திய கொழும்பு ஆகிய இரண்டு தொகுதிகளை உள்ளடக்கிய கொழும்பு பிரதேச செயலக பிரிவில் 126, 345 முஸ்லிம்களும், 106, 325 தமிழர்களும், 79,468 சிங்களவர்களும் வாழ்கிறார்கள். எனவே கொழும்பு மாநகரில் 204,520 சிங்களவர்களும், 176,198 தமிழர்களும், 160,713 முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். ஏனைய சிறுபான்மை இன பிரிவினரையும் சேர்த்து கொழும்பு மாநகரின் மொத்த ஜனத்தொகை 555,031 ஆகும்.
இதில் எங்கே தமிழர்கள், சிங்களவர்களை விட அதிகமாக வாழ்கிறார்கள் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுசெயலாளர் சம்பிக்க ரணவக்கவிடம் கேட்க விரும்புகிறேன். இவர் முழு நாட்டுக்கும் பொறுப்பான ஒரு அமைச்சர். இன்று இவர் தனது அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவியையும் கட்சி பதவி போல் உண்மையை மறைத்து பொய் கூறுவதற்கு பயன்படுத்துவது இதன்மூலம் அம்பலமாகியுள்ளது.
இலங்கை வந்த இந்திய பாராளுமன்ற குழுவினர் இந்த பொய்களை கேட்டுக்கொண்டுதான் நாடு திரும்புகிறார்களோ என எனக்கு தெரியவில்லை. இனவாத கண்ணோட்டத்தில் கருத்து கூறப்போன சம்பிக்கவின் நம்பகத்தன்மை இன்று, இந்த பொய் தகவல்கள் மூலம் சந்தி சிரிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள தூதரக வட்டாரங்களில், சம்பிக்க ரணவக்கவின் இந்த உண்மைக்கு மாறான தகவல்கள் தேவையற்ற புள்ளிவிபர குழப்பங்களை ஏற்படுத்தியமை எனக்கு தெரியும்.
இப்படி அப்பட்டமாக உண்மைக்கு மாறான நம்பகத்தன்மையற்ற புள்ளிவிபர தகவல்களை தெரிவிப்பது இவர்களின் வழமையான செயற்பாடு. இதுபோலவே இனப்பிரச்சினை தொடர்பாகவும் உண்மைக்கு புறம்பான, தேசிய நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் இனவாத கருத்துகளை ஹெல உறுமய தொடர்ந்து தெரிவிக்கின்றது. இதை இந்நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களும், வெளிநாட்டு செய்தி நிறுவனங்களும் அறிந்துகொள்ள வேண்டும்.