1984-இல் நடந்த சீக்கியப் படுகொலை தொடர்பான வழக்கொன்றில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்த காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமார், அவ்வழக்கு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் – கொலைக்குற்றம் மற்றும் கலவரம் – விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 29 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடி வரும், நீதிக்காகக் காத்திருக்கும் சீக்கியர்களிடம் இந்த அநீதியான தீர்ப்பு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எந்தவொரு வார்த்தையாலும் விவரித்துவிட முடியாது.
1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று காலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய மதத்தைச் சேர்ந்த இரண்டு மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்துத் தொடங்கிய சீக்கியப் படுகொலை நவம்பர் 3-ஆம் தேதி வரை தொடர்ந்து நடந்தது. இப்படுகொலையின் குவிமையமாக தலைநகர் டெல்லி இருந்தது. அங்கு மட்டும் ஏறத்தாழ 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
டெல்லியில் நடந்த சீக்கியப் படுகொலையை அப்பொழுது செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த ஹெச்.கே.எல்.பகத், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜகதீஷ் டைட்லர், டெல்லி மாநகர கவுன்சிலராக இருந்த சஜ்ஜன் குமார் ஆகியோர்தான் தலைமையேற்று நடத்தினர். டெல்லி போலீசு இப்படுகொலையை நடத்திய காங்கிரசு கும்பலின் பங்காளியாக நடந்து கொண்டது. இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட ராஜீவ் காந்தி, “ஒரு ஆலமரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்” எனக் கூறி, காங்கிரசு கும்பல் நடத்திய படுகொலையைப் பச்சையாக நியாயப்படுத்தினார்.
டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை, பாலியல் வல்லுறவுகள், கலவரம், தீவைப்பு தொடர்பாக 740 வழக்குகள் தொடரப்பட்டதில், 324 வழக்குகள் விசாரணை எதுவுமின்று ஊத்தி மூடப்பட்டு விட்டன. நீதிமன்ற விசாரணை வரை சென்ற 403 வழக்குகளுள் 335 வழக்குகளில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செயப்பட்டு விட்டனர். 13 வழக்குகள் என்ன நிலைமையில் உள்ளன என்ற விவரம் யாருக்குமே தெரியவில்லை. மீதி வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின்பொழுது இப்படுகொலையை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நானாவதி கமிசன், ஹெச்.கே.எல்.பகத், சஜ்ஜ்ன் குமார், ஜகதீஷ் டைட்லர் ஆகியோரைக் குற்றவாளிகளாக அறிவித்தது. மைய அரசு நியமித்த கமிசனால் அம்மூவரும் குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்ட பிறகும், காங்கிரசுக் கட்சி கொஞ்சம்கூடக் குற்ற உணர்வின்றி, ஜகதீஷ் டைட்லருக்கும் சஜ்ஜன் குமாருக்கும் 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட சீட்டுக் கொடுத்தது. காங்கிரசின் இந்த மமதைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட சீக்கியர்களின் போராட்டம் வலுப்பெற்றதையடுத்து, சஜ்ஜன் குமாருக்கு வழங்கப்பட்ட சீட்டுத் திரும்பப் பெறப்பட்டு, அத்தொகுதியில் அவரது தம்பி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஜகதீஷ் டைட்லரோ, அத்தேர்தலில் வென்று, அமைச்சராகி, அதன் பின்னர் வேறு வழியின்றிப் பதவியிலிருந்து விலகினார்.
சீக்கியப் படுகொலை நடந்து முடிந்து 20 ஆண்டுகள் கழிந்த பிறகு – 2005-இல்தான் இவர்கள் இருவரின் மீதும் வழக்குப் பதிவு செயப்பட்டது. அதற்கு முன்புவரை, அவர்களது பெயர் எந்தவொரு குற்றப் பத்திரிக்கையிலும், வழக்கிலும் சேர்க்கப்படாமல் பார்த்துக் கொண்டது டெல்லி போலீசு. ஹெச்.கே.எல்.பகத் நோய்வாய்ப்பட்டிருந்ததைக் காரணமாகக் காட்டி, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மறுத்தது, காங்கிரசு கூட்டணி அரசு. வழக்கு, விசாரணை போன்ற எதையும் சந்திக்காமலேயே செத்துத் தொலைந்தான், பகத்.
ஜகதீஷ் டைட்லருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரேயொரு வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ., அவருக்கு எதிரான சாட்சியங்கள் நம்பத்தக்கதாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, அந்த வழக்கை 2007-இல் நீதிமன்ற அனுமதியோடு கைகழுவியது. பின்னர் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அதே காரணத்தைக் கூறி, 2009-இல் நீதிமன்ற அனுமதியோடு அந்த வழக்கு மறுமுறையும் சி.பி.ஐ.யால் கைவிடப்பட்டது. சி.பி.ஐ.-இன் இந்த முடிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்து வந்த டெல்லி குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கடந்த ஏப்ரல் மாத மத்தியில் உத்தரவிட்டுள்ளது. சஜ்ஜன் குமாருக்கு எதிராக நடந்துவரும் மூன்று வழக்குகளில் ஒன்றில், அவருக்கு எதிரான சாட்சியங்கள் நம்பத்தக்கதாக இல்லை என நீதிமன்றமே கூறி, அவரை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் விடுதலை செய்துவிட்டது.
இவ்வழக்குகள் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை, நீதிமன்றத் தீர்ப்புகள் இவையிரண்டுமே முரண்பாடுகளின் மூட்டையாகவும், அரசியல் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளைத் தப்பவைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு நடத்தப்பட்டிருப்பதும் பச்சையாகத் தெரிகின்றன. புல் பங்கஷ் என்ற குருத்வாராவில் மூன்று சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில், அக்கொலைகளைத் தூண்டிவிட்டு நடத்தியதாக ஜகதீஷ் டைட்லர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. “இப்படுகொலை நடந்த சமயத்தில் ஜகதீஷ் டைட்லர் அந்த குருத்வாரா இருக்கும் பகுதியிலேயே இல்லை; அப்பொழுது அவர் தீன்மூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் உடலருகே ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார். இதற்கு தூர்தர்ஷனின் ஒளிப்பதிவுகள் ஆதாரமாக உள்ளன” என்று கூறி, டைட்லரை உத்தமனாகக் காட்டி வருகிறது, சி.பி.ஐ.
படுகொலை நடந்த குருத்வாராவிற்கும் தீன்மூர்த்தி பவனுக்கும் இடையே உள்ள தூரத்தை வெறும் 15 நிமிடத்தில் கடக்கலாம் என்ற சாட்சியங்களின் தரப்பு வாதத்தை, சி.பி.ஐ. ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், இப்படுகொலை தொடர்பாக சாட்சியம் அளிக்க முன்வந்த நான்கு சாட்சியங்களின் வாக்குமூலங்களைப் பதிவு செயாமலேயே, அவை நம்பத்தகுந்த சாட்சியங்கள் இல்லை என இட்டுக்கட்டிக் கூறி, இந்த வழக்கை நீதிமன்ற அனுமதியோடு மூடியது, சி.பி.ஐ. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மாஜிஸ்டிரேட் கோர்ட் அளித்த உத்தரவை ரத்து செய்து, அந்த நான்கு சாட்சியங்களை விசாரித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம், இவ்விசாரணையை மீண்டும் சி.பி.ஐ.யிடமே ஒப்படைத்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவு அடிப்படையிலேயே நாணயமற்றது; குற்றவாளி டைட்லரைத் தப்பவைக்கும் உள்நோக்கத்தோடு வழங்கப்பட்டிருக்கும் இன்னொரு வாய்ப்பாகும்.
ராஜ் நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் உள்ளிட்டு ஆறு பேர் மீது கொலை, கலவரம், தீவைப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. தனது கணவர், மகன், மூன்று கொழுந்தன்களைப் பறிகொடுத்த ஜெகதிஷ் கவுர் இப்படுகொலைகளை நேரில் பார்த்த சாட்சி மட்டுமல்ல, இப்படுகொலை நடந்த சமயத்தில் சஜ்ஜன் குமார் அப்பகுதியில் இருந்தார் என்றும், சீக்கியர்களைக் கொல்லுமாறு தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார் என்றும் சாட்சியம் அளித்தார். படுகொலை நடந்து 29 ஆண்டுகள் கழிந்த பிறகும், அவர் அளித்துள்ள சாட்சியத்தில் எவ்விதமான தடுமாற்றமும் காணப்படவில்லை. சஜ்ஜன் குமார் தவிர்த்த மற்ற ஐந்து பேரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்பதற்கு ஜெகதிஷ் கவுர் அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம், அவர் சஜ்ஜன் குமாருக்கு எதிராக அளித்த சாட்சியத்தை மட்டும் நம்பத்தக்கதாக இல்லை என ஒதுக்கித் தள்ளிவிட்டு, சஜ்ஜன் குமாரை விடுதலை செய்துவிட்டது.
“சீக்கியப் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய ரங்கநாத் மிஸ்ரா கமிசனிடம் ஜெக்திஷ் கவுர் சாட்சியம் அளித்தபொழுது, அவர் சஜ்ஜன் குமார் பெயரைக் குறிப்பிடவில்லை. அதற்கு முரணாக அவர் இந்த விசாரணையின் பொழுது சஜ்ஜன் குமார் பெயரைக் குறிப்பிடுவது சந்தேகத்திற்குரியது” என இரக்கமற்ற முறையில் தீர்ப்பளித்திருக்கிறது, நீதிமன்றம். சஜ்ஜன் குமார் ஏவிவிட்ட அடியாட்களால் ஜெகதிஷ் கவுர் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தார்; தனது உயிரைக் காத்துக் கொள்ளும்பொருட்டே மிஸ்ரா கமிசனிடம் அவர் சஜ்ஜன் குமார் பெயரைக் குறிப்பிடவில்லை என்ற உண்மையை நீதிமன்றம் நாணயமற்ற முறையில் புறக்கணித்திருக்கிறது.
சீக்கியப் படுகொலை நடந்து முடிந்த இந்த 29 ஆண்டுகளில், பெரும்பாலான ஆண்டுகள் டெல்லியையும் மைய அரசையும் காங்கிரசு கும்பல்தான் ஆண்டு வந்திருப்பதால், சஜ்ஜன் குமார், டைட்லர் போன்ற குற்றவாளிகள் ஜெகதிஷ் கவுர் போன்ற சாட்சியங்களை மிரட்டிப் பணிய வைப்பதையும், விலைக்கு வாங்கிக் கலைப்பதையும் எளிதாகச் செய்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய டெல்லி குருத்வாரா தலைமை பீடமோ, காங்கிரசோடு கைகோர்த்துக் கொண்டு சாட்சிகளைக் கலைக்கும் துரோகத்தனத்தைக் கூச்சநாச்சமின்றி செய்துவந்தது. சீக்கியர்களின் பாதுகாவலன் என மார்தட்டிக் கொள்ளும் அகாலி தளக் கட்சியோ, இப்படுகொலையில் பாதிக்கப்பட்டது தமது ஓட்டு வங்கிக்குப் பயன்படாத டெல்லியைச் சேர்ந்த சீக்கியர்கள் என்பதால், பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு ஆதரவாக அறிக்கை விட்டதைத் தாண்டி உருப்படியாக எதையும் செய்ய முன்வரவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் அரசியல் செல்வாக்கு மிகுந்த குற்றவாளிகளை எதிர்த்துத் தனியாக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். டைட்லருக்கு எதிராகச் சாட்சியம் அளித்த ஜஸ்பீர் சிங், சுரிந்தர் சிங் போன்றோர் தமது உயிரைக் காத்துக் கொள்ள இந்தியாவிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். சி.பி.ஐ.-யும், நீதிமன்றங்களும் சாட்சியங்களின் இந்தக் கையறு நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் செல்வாக்கு மிகுந்த குற்றவாளிகளைத் தப்பவைக்கும் அயோக்கியத்தனத்தைச் சட்டப்படியே செய்துவருகின்றனர்.
குஜராத் முசுலீம் படுகொலையை நடத்திய நரேந்திர மோடிக்கும், சீக்கியப் படுகொலையை நடத்திய நேரு-காந்தி குடும்பத்திற்கும் இடையே எள்ளளவும் வேறுபாடு கிடையாது. சஜ்ஜன் குமார் விடுதலை செயப்பட்ட நாளன்று, “இந்த நாடு கொலைகாரர்களால் ஆளப்படுகிறது; அவர்களிடம் நாங்கள் நீதிக்காகக் காத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என சீக்கியர் ஒருவர் தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தார். இந்திய ஜனநாயகத்தின், மதச்சார்பின்மையின், நீதி பரிபாலணத்தின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டும் சத்தியமான வார்த்தைகள் அல்லவா அவை!
– குப்பன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________
ISIA – Inter Services Intelligence Agency came into being in Pakistan after the 1971 war in East Pakistan. So, there are local, national, regional and global problems for all countries and all communities in any part of the world.
இதையேதான் எத்தின வாட்டி திரும்ப திரும்ப சொல்லிண்டு இருப்பேள் ?