10.04.2009.
கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகளென அரசுடன் சேர்ந்தியங்கும் அமைப்புகளினால் சட்டம் ஒழுங்குகள் மீறப்படுவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் இவ்வாறு சட்டம் ஒழுங்குகளை மீறுவோரை கட்டுப்படுத்தவோ அவர்களை நீதியின் முன் நிறுத்தவோ அரசு தயாரில்லையென்றும் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டமும் அதனை நடைமுறைப்படுத்தலும் இன்று எமது நாட்டில் அர்த்தமற்றதொன்றாகி விட்டது. இவ் விவாதத்தினை சம்பிரதாயமான நிகழ்வொன்றாகவே கருத வேண்டியுள்ளது. இந்தச் சட்ட மூலத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமோ, சுதந்திரமோ இல்லையென்பது தான் யதார்த்தம்.
கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள், பாலியல் வல்லுறவுகள், இலஞ்ச ஊழல்கள் நாளாந்தம் கூடிக்கொண்டே போகின்றன. இவகைளில் இருந்து மீள முடியாமல் மக்கள் துன்பப்படுகிறார்கள். ஊடகச் சுதந்திரமும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ளது. அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் அமைப்புகளினால் சட்டம் ஒழுங்குகள் மீறப்படுகின்றன. இவைகளினால் ஏற்படும் அச்சுறுத்தல்களை வெளியே கூறமுடியாது. மக்கள் பயந்து வாழ்கின்றார்கள். அரசாங்கமும் இவைகளைக் கட்டுப்படுத்தி சட்டம்,ஒழுங்குகளை மீறுவோரை நீதியின் முன் நிறுத்துவதற்கு தயாராக இல்லை. எந்த ஆட்சிக்காலத்திலும் சந்திக்காத திட்டமிட்ட இனப்படுகொலைகளையும் அடக்கு முறைகளையும் பொருளாதார கல்வி இயல்பு வாழ்க்கைச் சீரழிவுகளையும் இந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசிய இனம் சந்தித்து வருகின்றது.
திருகோணமலை சென். மேரிஸ் கல்லூரியில் தரம் 1 இல் கல்வி கற்ற மாணவி யூட் ரெஜி வர்சா என்ற ஒன்றுமறியாத சிறுமியின் பயங்கரமான கொலை திருகோணமலை வாழ் மக்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சியைத் தந்தது. பொலிஸாரின் விசாரணைகளினால் பல உண்மைகள் வெளியாகி,இக் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதியான விசாரணையின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் இந்த நாட்டில் இது போன்றதொரு பயங்கரமான சம்பவம் இனிஇ டம்பெறக் கூடாது என்பதும் அமைதி விரும்பும் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் தெஹிவத்தைப் பகுதியில் வயல் காவலில் இருந்த நான்கு சிங்கள விவசாயிகளின் கொலைகளின் பின்பு கடந்த ஒரு வாரத்தில் மூதூர் சேருவிலப் பிரதேசத்தைச் சேர்ந்த பின்வரும் விபரமுடைய 4 பொதுமக்கள் அவர்களின் வதிவிடங்களில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சேருநுவர தங்கநகரைச் சேர்ந்த செல்லத்துரை நல்லதம்பி(வயது59) மூதூர் கிளிவெட்டி பாரதிபுரத்தைச் சேர்ந்த கந்தையா யோகேந்திரம் (வயது 41) ஈச்சிலம்பற்று பூநகரைச் சேர்ந்த செல்லையா பிரபாகரன் (வயது 22) மூதூர் கங்குவேலியைச் சேர்ந்த வைரமுத்து அமிர்தன் (வயது 52) ஆகியோராவர். தொடர்ச்சியாக நடைபெறும் இக்கொலைச் சம்பவங்களினால் இப்பிரதேச மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
பகல் கொள்ளைகளும் சர்வ சாதாரணமாக பாதுகாப்பு பிரதேசங்களில் நடைபெறுகின்றன. மூதூர் கிளிவெட்டி மகா வித்தியாலய அதிபரின் மோட்டார் சைக்கிள் பட்டப்பகலில் அவர் கடமை புரியும் கிளிவெட்டி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் வைத்துப் பறிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்திற்கு அண்மையில் முஸ்லிம் பொது மகன் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் இதே பாணியில் பறிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மூதூர் இடைத்தங்கல் முகாம்களில் ஒரு வருடத்திற்கு மேலாக வசித்து வரும் குடும்பஸ்தர்களை விசாரணை என்ற போர்வையில் பொலிஸ் நிலையங்களுக்கு அடிக்கடி அழைத்துச் சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அம் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சில குடும்பத் தலைவர்களை விசாரணைக்காகத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதனால், அக் குடும்பங்கள் வாழ முடியாத நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மூதூர் பிரதேசத்தில் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாரிய இராணுவ நடவடிக்கையின் போது மூதூர் கிழக்கு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தமது வீடுவாசல்கள், உடைமைகள், தமது உறவினர்களையும் பறிகொடுத்து பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து இறுதியாக அகதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தஞ்சம் அடைந்தனர். இரண்டு வருடங்களின் பிற்பாடு மீள்குடியேற்றம் நடைபெற்ற போதும் சம்பூர், கூனித்தீவு, கடற்கரைச்சேனை, நவரெட்ணபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 1500 குடும்பங்களைச் சேர்ந்த 6000 மக்கள் இற்றைவரை தமது சொந்தக் கிராமங்களுக்கு மீள் குடியேற முடியாத நிலை தொடர்கின்றது. அவர்கள் மட்டக்களப்பிலுள்ள அகதி முகாம்களிலும், கிளிவெட்டி பட்டித்திடல், மணற்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம்களிலும் சொல்லாண்ணா துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை சொந்த இடத்தில் குடியேற்றுவதற்குரிய எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. 2000 வருடங்களுக்கு மேலாக பூர்வீகமாக வாழ்ந்து தமது வளமான சொந்த நிலத்தை விட்டு வேறு இடங்களில் குடியமர்வதற்கு விருப்பமற்றவர்களாக விரக்தியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந் நிலையில் கடந்த 1 ஆம் திகதி மட்டக்களப்புக் கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அரசாங்கம் தீர்மானித்த இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் குடியமர மறுத்தால் அவர்களை இடம்பெயர்ந்தோராக கருத வேண்டாமென கிழக்கு மாகாண ஆளுநர் கடுமையான உத்தரவிட்டுள்ளார் என செய்தி வெளியாகியிருந்தது. இந்த நடவடிக்கையினால் இப்பிரதேச மக்கள் மேலும் பல துன்பங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படவிருக்கின்றனர். இது ஒரு அப்பட்டமான மனித உரிமையினை மீறும் செயலாகும்.
இக் கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்களின் வீடுவாசல்கள், உடைமைகள், விளைநிலங்கள் வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகளை அழித்து, அவர்களின் கல்வி, பொருளாதாரம், இயல்பு வாழ்க்கையைச் சீரழித்தது மட்டுமல்லாமல் அவர்களை வளமற்ற தொழில் செய்ய முடியாத பிற இடங்களில் 20 பேர்ச் காணிகளை வழங்கி அதற்குள் முடக்குவதற்கு அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றது. இம் மக்களைப் பொறுத்த வரையில் கிராமிய பொருளாதாரத்தையும், மீன்பிடியையும், நம்பி வாழ்ந்தவர்கள். 23 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கையுடன் கால்நடைகளை வளர்த்து கிராமிய பொருளாதாரத்தில் சீவித்து வந்தவர்கள். இம் மக்களின் ஏக்கர் கணக்கில் வளமான நிலங்களை அபகரித்துவிட்டு, எதற்கும் பிரயோசனமற்ற வளமற்ற இடங்களில் 20 பேர்ச் காணியை கொடுத்து குடியேற்ற எத்தணிப்பதால், இப்பிரதேச தமிழ் மக்களில் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறை நன்கு விளங்குகின்றது.
இம் மாவட்டத்தில் குடியேற்றங்கள் நடைபெற்ற பொழுது வீடு வாசல், அடிப்படை வசதிகளுடன் மேட்டு நிலக் காணி ஓர் ஏக்கரும், வயல் நிலங்கள் 23 ஏக்கருமாக அரச காணிகளைப் பகிர்ந்தளிக்கும் அரசாங்கம், மூதூர் கிழக்கு மக்களை இவ்வாறு பழிவாங்க எண்ணுவது எந்த வகையில் நியாயமானது?
இன்று இலங்கையின் அனைத்து பிரதேசங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன என்று கூறும் அரசாங்கம், சம்பூர் பிரதேசத்தில் மக்களைக் குடியமர்த்த தடை செய்வது ஏன்? அனல் மின் நிலையம் அமைக்க வேண்டியதாக இருந்தால் போதியளவு தரிசு நிலங்கள் அப்பகுதியில் உள்ளது. அவ்விடத்தில் அனல் மின் நிலையங்களை அமைத்து அங்கு வாழ்ந்த மக்களையும் குடியமர்த்தலாம். உயர் பாதுகாப்பு வலயங்களாக கருதப்படும் கட்டுநாயக்கா, கொலன்னாவ, களனிதிஸ்ஸ ஏன் திருகோணமலை கடற்படை, விமானப்படை தளங்களைச் சூழவும் மக்கள் நெருக்கமாக வாழும் பொழுது சம்பூர் பிரதேசத்தை மாத்திரம் பாதுகாப்பு, உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அம் மக்களை மீளக் குடியேறாமல் தடுப்பதை எவ்விதம் நியாயப்படுத்த முடியும்?
தற்பொழுது சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைக்கத் தெரிவு செய்யப்பட்ட இடம் மகாவலி கங்கை கொட்டியாரக்குடா கடலில் சங்கமாகும் வளமான பிரதேசமாகும். இதன் சுற்றாடலில் அமைந்திருக்கும் மூதூர், கிண்ணியா, சீனன்குடா, திருகோணமலை, சேனையூர், கட்டைபறிச்சான் ஆகிய இடங்களில் செறிவாக வாழும் மக்கள் கடற்றொழில் ரீதியாகவும், சூழல் சுற்றாடல் மாசடைவதன் மூலமாகவும் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே, அரசாங்கம் இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கும் இப்பிரதேச இயற்கை வளத்திற்கும் பாதிப்புகள் ஏற்படாது அனல் மின் நிலைய அமைவிடத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.