கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்திய நகரங்களை பதம் பார்த்து வருகிறது. மும்பை, டெல்லி, லக்னோ, புனே போன்ற நகரங்களையும் தாண்டி கிராமப்புறங்களிலும் பெருந்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் இல்லாமல் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் மடிவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் ஏராளமான நோயாளிகள் இறந்த நிலையில் டெல்லி பாட்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 நோயாளிகள் இறந்து விட்டதாக உறுதியான செய்திகள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் திவீர ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என பல மருத்துவமனைகள் அரசுக்கு எச்சரிக்கையை தொடர்ந்து விடுத்து வருகின்றன. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “ டெல்லிக்கு 976 டன் ஆக்சிஜன் தேவை ஆனால் எங்களுக்கு 490 டன் ஆக்சிஜன்கள்தான் வழங்கப்படுகிறது.நேற்று 312 டன் ஆக்சிஜன் மட்டுமே கிடைத்தது. இதை நாங்கள் மத்திய அரசிடமும் நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளோம்” என்றார்.
ஆக்சிஜன் மரணத்தைத் தொடர்ந்து பட்ரா மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகள் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளன. இதனால் உதவி கோரும் பல நோயாளிகள் சலிப்படைந்து போய் நோயாளிகளை விதி விட்ட வழி என வீடுகளுக்கே அழைத்துச் சென்று விடுகிறார்கள். சிலர் மருத்துவமனைகளுக்கு வெளியிலேயே நோயாளிகளுடன் இருப்பதால் அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து விடுகிறார்கள்.
குஜராத் அவலம்
இநிந்லையில் மாநிலம் பரூச் என்ற இடத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. அங்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 18 கொரோனா நோயாளிகள் இறந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய நோயாளிகள் இறந்த பரிதாபத்தை கண்டுணரும் நிலை கூட அங்கு இல்லை.
அங்கிருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் அல் மஹ்மூத் மருத்துவமனை, சேவாஸ்ரம் மருத்துவமனை, பரூச் சிவில் மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு மடியும் நோயாளிகள் நிலை கவலையளிக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை மருத்துவனைகளில் ஏற்படும் விபத்து என பல விதமான மரணங்கள் இந்திய சுகாதாரத்துறையை அச்சுறுத்தி வருகிறது.