இந்தியாவில் நீங்கள் கொடீஸ்வரராக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு கொரோனா நோயாளியாக இருந்தாலும் பணம் உங்கள் உயிரைக் காப்பாற்றாது. என்பதை கொரோனா மரணங்கள் அனுபப்படாமாகச் சொல்கின்றன. சிலிண்டருடன் கூடிய ஒரு படுக்கைக்காக கொரோனா நோயாளிகள் அலைபாய்கிறார்கள்.
இந்தியா முழுக்க கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.3,523 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
டெல்லி, மும்பை போன்ற நகரங்கள் செய்திகளில் அடிபட்டாலும் கொரோனா தொற்று இந்தியாவின் அத்தனை நகரங்களிலும் பரவி வருவதுதான் யதார்த்தமாக உள்ளது.
டெல்லியில் ஆக்சிஜன் கிடைக்காமல் மரணிப்போர் எண்ணிக்கை கட்டுப்பாடில்லாமல் அதிகரித்துச் சென்றாலும் தடுப்பூசி, போடுவது ஆக்சிஜன் சப்ளை செய்வது, மருந்துகளை சப்ளை செய்வது என அனைத்திலும் இந்திய சுகாதாரத்துறை தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தடுப்பூசி திருவிழா 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி என்று அரசு அறிவித்தாலும் அந்த திட்டத்தை துவங்குவதற்கான தடுப்பூசி அரசிடம் இல்லை. ஏற்கனவே போடப்பட்டு வந்த தடுப்பூசியும் பெரும்பலான மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு இல்லை. அதுவும் தடுப்பாடு நிலவுகிறது. ஆக்சிஜன் அடுத்த பிரச்சனை.
ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக டெல்லி உயர்நிதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மிகவும் கவனிக்கத் தக்கதாக உள்ளது.
ஆக்சிஜன் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் “தலைக்கு மேல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் தான் எல்லாவற்றையும் தயார் செய்ய வேண்டும். இதையெல்லாம் கேட்காமல் காதுகளை மூடிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் தான் டெல்லிக்கு அன்றாடம் 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்படும் என உறுதி அளித்தீர்கள். அதைக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு ஆகும்.
நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்டும் உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கொடுக்காதது ஏன் என மத்திய அரசிடம் கேட்டுள்ளனர்.
மேலும், மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் ஆக்சிஜனை கொண்டுவருவதற்கான டேங்கர்களையும் மத்திய அரசு தான் ஏற்பாடு செய்ய வேண்டும். இதை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயங்கமாட்டோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால் இதை எல்லாம் செய்ய வேண்டிய இடத்தில் அரசு இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அதிக அளவு மருந்துகளை, உபகரணங்களை வழங்கும் நிலையில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்காளுக்கு குறைவான நிதி மற்றும் உபகரணங்களையே வழங்குகிறது மத்தியில் ஆளும் அரசு.
இதற்கிடையில் கையில் பணம் இருந்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனை படுக்கை கிடைக்காத பல கோடீஸ்வரர்கள் தனி ஹெலிகாப்டர்களை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து விடுகிறார்கள். அப்பல்லோ, காவேரி, ரேலா இன்ஸ்டியூட், மியாட், என எண்ணற்ற தனியார் மருத்துவமனைகள் சென்னையில் உள்ளதால் இங்கு தரமான சிகிச்சையும் கிடைப்பதால் இவர்கள் சென்னைக்கு தனி விமானத்தில் வந்து விடுகிறார்கள்.
அப்பல்லோ உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மத்திய அரசுக்கு வேண்டியவர்களும் இதே போன்று வருகிறார்கள். மேலும் தனியார் மருத்துவமனையில் இடம் இல்லா விட்டாலும் அரசு மருத்துவமனையிலாவது இடம் வேண்டி அரசுக்கு அழுத்தம் கொடுத்த்து சிலர் அரசு மருத்துவமனைகளிலும் சேர்ந்திருக்கிறார்கள்.