இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.32 லட்சம். சுமார் 2,200 பேருக்கு மேல் உயிரிழந்து இருக்கிறார்கள். இது உலக அளவில் ஒரு நாள் தொற்றில் எந்த நாடும் சந்தித்திராத பேரவலம்.
இன்னொரு பக்கம் ஆக்சிஜன் இல்லாமல் கடந்த 24 மணி நேரத்தில் 50 க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பது இந்திய மருத்துவத்துறை கொரோனா பெருந்தொற்றில் ஆடிப் போயிருப்பதையே காட்டுகிறது.
தலைநகர் டெல்லியில் இருக்கும் ரோஹினி பகுதியில் இருக்கும் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 20 நோயாளிகள் நேற்று இரவு மட்டும் உயிரிழந்துள்ளார்கள். இந்த மருத்துவமனையை சுட்டிக்காட்டி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் ஆகியோரை தொடர்பு கொண்டும் ட்விட்டரில் டேக் செய்து இந்த தகவலை தெரிவித்தும் டெல்லிக்கு ஆக்சிஜன் வரவில்லை. கடைசியில் 20 பேர் பரிதாபமாக மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
டெல்லியின் முக்கிய மருத்துவமனைகளான மேக்ஸ் குழும மருத்துவமனைகள் மற்றும் சர் கங்கா ராம் மருத்துவமனையில், சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் பதட்டமடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் குழும அங்கும் சிலர் உயிரிழந்துள்ளார்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆக்சிஜன் இல்லாதம் 10 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள். இதே போன்று உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் நிலையில் மத்திய அரசோ செயலற்று இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.