கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகிறவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படும் நிலையில் இந்தியாவில் முதன் முறையாக கேரள அரசு கொரோனாவில் இறந்தவர்கள் உடலை இரண்டு மணி நேரம் வீட்டில் வைக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிக அளவில் உயிரிழப்புகள் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இப்படி உயிரிழக்கும் உடல்களை அரசே எரித்தோ, புதைத்தோ விடுவது வழக்கமாக உள்ளது. இது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களோடு இறக்கும் குடும்பத்தினருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் கொரோனா தொற்றுக்கு பலியாகிறவர்கள் உடல்களை அவர்களது வீட்டில் இரண்டு மணி நேரம் வரை வைத்திருக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன்”கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட நாள் முதல் மக்கள் மனங்களை நெருடும் சம்பவமாக ஒன்று உள்ளது . அது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்காதது. அதனைத் தற்போது அரசு தளர்த்துகிறது.
கொரோனாவால் உயிரிழந்தோர் உடலை உறவினர்கள் அவர்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உடலை வீட்டில் வைத்திருப்பதற்கு ஒரு மணி நேரம் வழங்கப்படும். அந்த நேரத்துக்குள் அவரவர் மதத்தின்படி இறுதிச் சடங்கை நடத்திக் கொள்ளலாம்.
கேரளாவில் தொடர்ந்து பாசிடிவிட்டி ரேட் 10 சதவீதமாக உள்ளது. (அதாவது 100 பேரை சோதித்தால் எத்தனை பேருக்கு கொரோனா இருக்கிறது என்பதை உறுதி செய்வதே பாசிடிவிட்டி ரேட் எனப்படுகிறது). கொரோனா இரண்டாவது அலை நம் மாநிலத்தை முதல் அலையைவிட படுவேகமாகப் பாதித்தாலும் கூட நாம் அதைக் கட்டுப்படுத்தி வருகிறோம். மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு, நோய்த்தாக்கம் எவ்வளவு வந்தாலும் அதனைத் தாங்கும் அளவுக்கு வலுவாக இருப்பதையே இது காட்டுகிறது.
கேரளாவில் இரண்டாம் அலையின் தாக்கம் குறைய இன்னும் சில காலம் ஆகலாம். ஆகையால், ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அதுவரை எதிர்பார்க்க முடியாது. மாநில எல்லைகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார்.