மிழகத்தைப் பிரித்து கொங்குநாடு என்று தனிமாநிலம் உருவாக்கப்படும் என்பது போன்ற ஒரு கருத்தியல் தோற்றத்தை பாஜகவினர் சமீபத்தில் உருவாக்கினார்கள்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் ஆனார். அவரது படிவத்தில் மாவட்டம் என்ற பகுதியில் கொங்குநாடு என்று குறிப்பிட்டிருந்தார். அது முதல் இந்த சர்ச்சை உருவானது. பாஜகவினர் கொங்குநாடு என்ற ஒன்றை உருவாக்குவோம் என்பது போல பேசி வந்தார்கள்.
அதிமுக கொங்கு மண்டலத்தில் மட்டும் அதிக தொகுதிகள் வென்றிருக்கும் நிலையில் கொங்கு மண்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சக்திகளுக்கு இருக்கும் செல்வாக்கு, கோவை தெற்கு தொகுதியில் பாஜக வென்றிருப்பது என பரவலாக கொங்கு மண்டல் அமைந்தால் பாஜக அதில் ஆட்சியை பிடிக்கும் என்பது அவர்களின் கணக்கு.
ஆனால், திமுகவோ கொங்கு மண்டலம் அமைந்தாலும் தஞ்சை மண்டலம் அமைந்தாலும், தென் மண்டலம் அமைந்தாலும் நாங்கள்தான் ஆட்சியைப் பிடிப்போம். தமிழ்நாட்டை சிதைக்க விட மாட்டோம் என்று பேசி வந்தனர். இந்நிலையில் இன்று மக்களவையில் தமிழக எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் டி.ஆர். பாரிவேந்தர், மயிலாடுதுறை உறுப்பினர் எஸ். ராமலிங்கம் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்துள்ளார்.
அதில் “அவ்வப்போது பல்வேறு தனி நபர்கள், அமைப்புகளால், புதிய மாநிலங்களை உருவாக்கும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. புதிய மாநிலம் உருவாக்குவது என்பது விரிவான அம்சங்களையும் நம் நாட்டின் கூட்டாட்சி முறை மீது நேரடி தாக்கத்தையும் கொண்டது. அந்த வகையில் புதிய மாநிலத்தை உருவாக்கும்போது எல்லா வகையான அம்சங்களையும் அரசு கவனத்தில் கொள்ளும். அத்தகைய யோசனைகள் ஏதும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை,” என்று கூறியுள்ளார்.
மொத்தத்தில் ஒரு தமிழ்நாட்டையே சமாளிக்க முடியவில்லை. கொங்கு மண்டலம் என்ற பெயரில் வேறு புதிய மாநிலங்களை உருவாக்கினால் அது தேவையற்ற தலைவலியையே உருவாக்கும் என்பதை புரிந்து கொண்ட மத்திய அரசு இப்போதைக்கு பின் வாங்கியிருக்கிறது.