தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யின் நிதிப் பொறுப்பாளர் மற்றும் அவரது சகாவிற்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொன்னய்யா செல்வராஜா மற்றும் சுப்பிரமணியம் சிவகுமார் ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தரவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இருவரும் 2007ம் ஆண்டு முதல் சுமார் இரண்டரை ஆண்டுகள் இவ்வாறு நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புலம் பெயர் நாடுகளில் கே.பி ஆதரவாளர்களின் அரசியலை இலகுபடுத்தும் வகையில் இலங்கை அரசின் புதிய நாடகமாக இது அமைந்திருக்கலாம் என பரவலான கருத்து நிலவுகின்றது.