தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பொறுப்பாக கடமையாற்றிய குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யிடமிருந்த ஒரு தொகுதி தங்கம், ஜப்பானிய வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஊவதென்ன சுமன தேரர் நேற்று தெரிவித்துள்ளார்.
மாளிகாவாத்தை அபயாராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதன் வசமிருந்த தங்கத்தின் ஒரு தொகுதி ஜப்பானிய வர்த்தகருக்கு விற்பனை செய்யப்பட்டமைக்கான ஆவணங்கள் என்னிடம் உண்டு.
இவை விரைவில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மஹிந்தவின் பிரதம அதிகாரி காமினி செனரத் மற்றும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் இந்த சட்டவிரோத தங்கக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பொறுப்பு சொல்ல வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தொடர்பிலான பல தகவல்கள் எம்மிடம் உண்டு.
இரண்டு கொள்கலன் தங்கம் கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் காணப்பட்டது.
இந்த தங்கத் தொகுதி, 16 தடவைகள் பகுதி பகுதியாக கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தங்க வர்த்தகம் தொடர்பிலான சட்ட ரீதியான தன்மையை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என ஊவதென்ன சுமன தேரர் தெரிவித்துள்ளார்.
முழுமையான வர்த்தகமாக மாறிவிட்ட தமிழ்த் தேசியத்திற்கும் சிங்களப் பேரினவாதத்திற்கும் இப்போது இரண்டாவதுகட்ட முதலீடு நடைபெறுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப் பொறுக்குவதற்காக முதலிடப்படும் உணர்சிகளுக்கும் பணத்திற்கும் இரத்தமும் சதையும் உரமாக்கப்பட்டு இரட்டிப்பாக அறுவடை செய்யப்படும்.