இலங்கை அரச சட்டங்களுக்கே முரணான வகையில் சட்டவிரோதமாகச் சிறைப்பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியினை இழந்துள்ளனர். சிறைகளில் அடைத்துவைத்து நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்க்கையை அழித்த இலங்கைப் பேரினவாத அரசியலும் அதன் தலைமைகளும் அவர்களை விடுதலை செய்வதற்குக் கூட கால எல்லையை நிர்ணையிக்கின்றன. இலங்கை அரசின் தொங்கு தசை போன்று செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலை செய்வதற்கான கால எல்லையை குறைத்துவிட்டதாக மார்தட்டிக்கொள்கிறது.
புலம்பெயர் நாடுகளிலிருந்து உயர்மட்ட அரசியல் பிரமுகர்களோடு பேசியே ஈழம் பெற்றுத் தருவதாகவும், ராஜபக்சவைத் தூகில் போடப்போவதாகவும் நாடகமாடிய தமிழ்க் குழுக்கள் அரசியல் கைதிகள் தொடர்பாகக் கூட எதையும் சாதிக்க முடியாமல் தமது கையாலாகாத் தனத்தை நிறுவியுள்ளன. புலம்பெயர் தமிழ்த் தேசியத்தின் உள்ளூர் முகவர்களான விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் கைதிகள் பிரச்சனையில் ஆங்காங்கே தலைகாட்டி ‘இருக்கிறோம்’ எனக் காட்டிக்கொண்டதோடு முடிந்து போனது.
இந்த நிலையில் சிங்கள மக்களப் பெரும்பான்மையாகக் கொண்ட டீசன்ட் லங்கா என்ற அமைப்பு கைதிகளை விடுதலை செய்து இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பினரால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் அரசியல் கைதிகளில் பெரும்பாலானவர்கள் மிக நீண்டகாலமாக எதுவித குற்றச்சாட்டுகளும் அற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக அவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடும்பத்தினரும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்படும் நபர்களைத்தவிர ஏனையோரை இவ்வாறு தடுத்து வைத்திருப்பதற்கு அரசாங்கத்திற்கு எதுவித அருகதையும் கிடையாது.
எனவே குற்றச்சாட்டுகள் உள்ள கைதிகளை இரண்டு வார காலத்திற்குள் ஜனாதிபதி உறுதியளித்தபடி நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றச்சாட்டுகள் இல்லாத கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு விடுதலை செய்யப்படுவோருக்கு அவர்கள் சிறைகளில் கழித்த காலத்தைக் கணக்கிட்டு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
மேலும் அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழக் கூடிய ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் டீசண்ட் லங்கா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.