புதுடெல்லி, ஜூன் 24: அணு ஒப்பந்தப் பிரச்னையில் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஐ.மு. கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, சரத்பவார், லாலு பிரசாத், பஸ்வான், டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று சந்தித்தனர்.
ஒப்பந்தத்தை எதிர்க்கும் இடதுசாரிகளுடன் அனுசரித்துப் போக வேண்டும் என்று சோனியாவிடம் இவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வதை கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. தங்கள் எதிர்ப்பை மீறி உடன்பாடு செய்துகொண்டால் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக அக்கட்சிகள் எச்சரித்துள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை வாபஸ் பெற்றால், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதரவுடன் அரசைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நிலைமை இருந்ததால், அணு ஒப்பந்தம் செய்துகொள்வதில் மன்மோகன் அரசு தீவிரம் காட்டியது.
இந்த நிலையில், அரசுக்கு அளிக்கும் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சி திடீரென வாபஸ் பெற்றது. இதனால், அரசைக் காப்பாற்றிக்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயம் ஐ.மு. கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அணு ஒப்பந்தப் பிரச்னையில் அரசு கவிழ்ந்து, தேர்தல் வருவதை காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் விரும்பவில்லை. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத அளவாக, பணவீக்கம் 11 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. இந்த சூழ்நிலையில், தேர்தலை சந்தித்தால், அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஐ.மு. கூட்டணிக் கட்சிகள் கருதுகின்றன.
இப்போது தேர்தல் நடந்தால், அது தனக்கு சாதகமாக இருக்காது என்று காங்கிரஸ் கட்சியும் கருதுகிறது. சோனியாவும் இதே கருத்தைதான் கொண்டுள்ளார். Ôஅணு ஒப்பந்தம் பற்றி வாக்காளர்களுக்கு கவலையில்லை. அவர்களது முதல் கவலை, உயர்ந்து வரும் விலைவாசிதான். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்று மத்திய அரசுக்கு சோனியா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், திமுகவின் டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று சோனியாவை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
Ôவிலைவாசி அதிகரித்துள்ள இந்தநேரத்தில் தேர்தலை விரும்பவில்லை. எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளை அனுசரித்து செல்லலாம்Õ என்று அப்போது இந்த தலைவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
“அணு ஒப்பந்தம் வேண்டும்தான்… அதற்காக, முன்கூட்டியே தேர்தல் வருவதை விரும்பவில்லைÓ என்று, சோனியாவை சந்தித்த பின்னர் லாலு பிரசாத் கூறினார்.
இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்தையும் பவார் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில், நாளை டெல்லியில் நடக்கும் ஐ.மு. கூட்டணி&கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.