கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணி தொடங்கப் போவதை அடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலை 1 இல் எரிபொருள் நிரப்ப, இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, அங்கு எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கவிருக்கிறது. மக்கள் மத்தியிலிருந்தான எதிர்ப்புக்களை எதிர்கொள்வதற்காக அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
12 கம்பெனிகளின் பாதுகாப்புப் படையினரும் அங்கு குவிக்கப் பட்டுள்ளனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை, வான்வழியாக ஏதும் அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க விமானப் படையினர் என்று ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளனர்.
அணுமின் நிலைய வளாகத்தினுள், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. அந்தந்த துறையை சேர்ந்த சர்வதேச அணுசக்தி அதிகாரிகள் அணுமின் நிலைய வளாகத்தில் ஆலோசனை நடத்திய வண்ணம் உள்ளனர் என்றும், ஓரிரு நாட்களில் யுரேனியம் நிரப்பும் பணிகள் துவங்கிவிடும் என்றும் தெரியவருகிறது.
அமைதிப்பூங்காவுக்கும்,அருகிலிருக்கும் மாங்காய்க்கும் இனி நிரந்தர அமைதிதான்…