கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து பேசி வரும் மத்திய அமைச்சருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு உயர்நீதிமன்றங்களை மதிப்பதில்லை என்று நீதிபதிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.
மத்திய அணுசக்தி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறாமல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு தடை விதிக்க கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறியாளர் சுந்தர்ராஜன் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி ஆகியோர் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த மனுதாரர் மேலும் 2 மனுக்களை நேற்று தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் ஜோதிமணி, தேவதாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.
இது தவிர மத்திய அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமலேயே அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்புவதற்கு அந்த ஆணையம் அனுமதித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், மத்திய அரசு வக்கீல் என்ன விளக்கம் கூறவுள்ளார் என்று கேள்வி கேட்டனர். அந்த சமயத்தில் மத்திய அரசு தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து நீதிபதி ஜோதிமணி, கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நடந்து கொள்ளும் விதத்திற்கும், மாநில அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
பாம்பும் சாகக்கூடாது அதேநேரம் தடியும் உடையக்கூடாது.