கூடங்குளத்தில் 3, 4-ஆவது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக இந்தியா-ரஷியா இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இத்திட்டம் ரூ.33,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாக, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன் 2 அணை உலைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய ஒப்பந்தத்தில் இந்திய அணுசக்திக் கழகமும், ரஷியாவின் அணுசக்தி அமைப்பும் கடந்த வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளதாக அணுசக்தித் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
உலகம் முழுவதும் அணு உலைகளை மக்களின் எதிர்ப்புக்காரணமாக அரசுகள் மூடிவரும் நிலையில் இந்திய அரசு மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் எந்தப் பாதுகாப்பு உத்தரவாதமும் இன்றி அணு உலைகளை அமைத்து வருகிறது. அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவின் தலைவர் உதயகுமார் அப்போராட்டத்தைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான மூலதனமாக்கிக்கொண்டார். இதனால் மக்களின் போராட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டது.உழைக்கும் மக்களின் அரசியல் தலைமையை நிராகரித்த கூடங்குளப் எதிர்ப்புப் போராட்டம் தன்னார்வ நிறுவனங்களுக்குத் தீனீ பொடுவதோடு தன்னை மட்டுப்படுத்திக்கொண்டது.
கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகள் ரஷிய நாட்டு உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 2-ஆவது அணு உலையில் மின் உற்பத்திப் பணி தொடங்கும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், 3, 4-ஆவது அணு உலைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியை கடந்த 2010-ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு தொடங்கியது.
இருப்பினும், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை யார் தருவது என்பது தொடர்பான, இந்திய அணு உலை விபத்து இழப்பீட்டு சட்டம் தொடர்பாக ரஷியா எதிர்ப்புத் தெரிவித்ததால் அதில் முட்டுக்கட்டை நிலவி வந்தது.
இச்சட்டப்படி, ரூ.1,500 கோடிக்கும் அதிகமாக இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். அணு உலைகளில் ஏதாவது விபத்து நேரிட்டால் அந்தத் தொகை இழப்பீடாக வழங்க பயன்படுத்தப்படும்.
விபத்து ஏற்படாது என மக்களுக்கு உறுதிப்படுத்தும் இந்திய அரசும் ரசிய அரசும் விபத்து ஏற்பட்டால் நட்டைஈடு வழங்க மட்டும் கேள்வி கேட்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் ரஷியா சென்றபோதும், அதே அணு உலை விபத்து இழப்பீடு சட்டம் தொடர்பான சிக்கல் காரணமாக அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
அதன்பிறகு இரு நாடுகளிடையே தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. கடந்த மாதம் இந்திய அணுசக்தித் துறைச் செயலர் ஆர்.கே.சிங் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் தில்லியில் ரஷிய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த விஷயத்தில் உடன்பாடு ஏற்பட்டது.