சமூக வலைத் தளம் என்று அழைக்கப்படும் பேஸ் புக் போன்றவை சமூகத்தில் பல எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன என்பது உண்மையே. பேஸ் புக் போன்றவை ஏற்படுத்தும் பாதிப்புக்களை மக்கள் சார்ந்த புதிய கலாச்சாரத்தைக் கட்டமைக்கும் போதே நாம் எதிர்கொள்ள முடியும். அவ்வாறான கலாச்சாரத்தை சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலிருந்தும் உருவாக்கும் வலு ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனங்களுக்கு உண்டு. பேஸ் புக்கை எதிர்கொள்வதாகக் கூறும் அழுகிய நிலப்பிரபுத்துவக் கலாசாரம் ஊட்டிய சிந்தனைகளிலிருந்து விடுபடாத கலாசாரக் காவலர்கள் என்று கூறிக்கொள்வோர் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். பேஸ்புக்கில் கணக்கைத் திறந்ததற்காகவும் வேறு ஒருவர் இணைத்த படத்திற்காகவும் பாடசலை அதிபரால் பொது மேடையில் கீழ்த்தரமாகத் திட்டித்தீர்க்கப்பட்ட குழந்தை ஒருவர் நஞ்சருந்தித் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
குழந்தயின் மரணத்திற்குப் பொறுபான பாடசாலைத் தலைமை ஆசிரியர் இன்னும் தண்டிக்கப்படாமலிருக்க இலங்கை பாசிஸ் மகிந்த அதிபருக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.
‘எம் நாட்டு பிள்ளைகளில் பெருமளவிலானோர் தற்போது பேஸ்புக்கில் மிகுந்த நம்பிக்கை வைத்துச் செயற்படுகின்றனர். தமது பெற்றோர்களைவிட பேஸ்புக் மூலமான நண்பர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். அவர்கள்தான் இவர்களின் மீட்பர்கள் என எண்ணிக் கொண்டுள்ளனர். இதனால் மோசமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவங்களை அண்மைக் காலங்களில் எம்மால் காண முடிந்தது. ஆசிரியை ஒருவரின் எச்சரிக்கை காரணமாக சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையும் இதில் குறிப்பிட முடியும். ‘ என கொழும்பில் பாடசாலை நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
‘நான் இன்னும் உயிருடன் இருந்து, இந்தப் பாடசாலையில் ‘வேசி’ எனப் பேச்சுக் கேட்டுக் கேட்டு O/L பரீட்சையைக் கூட என்னால் ஒழுங்காக எழுத முடியாது’ என்று மரணித்த மாணவி தனது மரண வாக்குமூலத்தில் தெரிவிக்க, மகிந்த ராஜபசவோ அதிபர் எச்சரித்ததாகக் கூறுகிறார். இன்று அதிபரைத் தண்டிக்குமாறு இலங்கையில் போராட்டம் நடத்துவதற்குக் கூட வலுவற்று சிங்கள மக்கள் மகிந்த அரசின் பாசிசப் பிடியில் வாழ்கிறார்கள்.