சமீபத்தில் போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் இந்தியா வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி தமிழகமெங்கிலும் போராட்டங்கள் நடந்தன.சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்தியா வந்துள்ளவரைக் கைது செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. டில்லி போலீசாருக்கு டக்ளஸை ஒப்படைக்கக் கோரி தகவல் தெரிவித்திருப்பதாகவும் டில்லி போலீசாரின் தகவலுக்காக காத்திருப்பதாகவும் சென்னை போலீஸ் கமிஷனரும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னை தேடப்படும் குற்றவாளிப் பட்டியலில் இருந்து விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நான்கு நாட்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
என்ன குற்றங்கள்?
1986ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார். வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் பொலிஸில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். 1989 ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பிவிட்டார்.
இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை. ஆக தமிழக அரசால் கடந்த 16 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளியான டக்ளஸை இந்தியா வரும் போது கைது செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை.இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படும் வேளையில் போராடிய தமிழக வழக்கறிஞர்களும் இந்த விடயத்தில் மிக உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனர்.
டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும்.
தேடப்படும் குற்றப்பட்டியலில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும். வழக்கை தான் சென்னையில் இருந்தே எதிர்கொள்ளத் தயார் என்றும் நீதிமன்றத்தில் டக்ளஸ் தெரிவித்திருக்கிறார். போலீஸ் பிடிவாரண்டு நிலுவையில் இருக்கும் போது குற்றவாளி அவர் எவர் ஒருவராக இருந்தாலும் தப்பிச் சென்றால் தேடப்படும் குற்றவாளியே. அது டக்ளஸ் தேவானந்தாவாக இருந்தாலும் வேறு எவராக இருந்தாலும் அப்படித்தான்.
ஆனால் டக்ளஸ் இன்று இலங்கை அரசின் அமைச்சர் என்பதோடு இந்திய ஆட்சியாளர்களில் நல்லாசியும் கிடைக்கப்பெற்றவர் என்பதால் மத்திய அரசின் ஆசியுடனேயே இப்படியான மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் டக்ளஸ்.
ஆனால் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சட்ட ரீதியாகவே டக்ளஸ் தேவானந்தாவை தேடப்பட்டும் குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்க முடியாது.
கொலை, கடத்தல் போன்ற குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா சென்னைக்கு வந்து கைதாகி முறையாக ஜாமீன் பெற்று வேண்டுமானால் தன் மீதான வழக்குகளை நேர் கொள்ளட்டும் என்று சொல்கிறார்கள். தமிழக வழக்கறிஞர்கள்