ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் வரலாறு கண்டிராத மனித அழிவுகளை விட்டுச் சென்றுள இன்றைய சூழலில் இனி என்ன செய்யப்போகிறோம் என நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம். ஈழப் போரையும், தேசிய இனப் பிரச்சனையையும் மையப்படுத்தி ஆரோக்கியமான வாதப் பிரதிவாதங்கள் எம்மைச் சுற்றி நடைபெறுகின்றன.
நூறு கருத்துக்கள் மோதும் இந்த விவாதச் சூழல் தொடரவேண்டும். கருத்துக்களைக் கருத்துக்களாக எதிர் கொள்ளல் என்பதும் அவை குறித்த எதிர்வினையை முன்வைத்தலும் இன்றைய தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒடுக்குமுறைக்கு உள்ளான தேசிய இனத்தின் இன்னொரு பகுதியினர் என்ற வகையில், இந்த நூற்றாண்டின் உலக நெருக்கடிகளுள் நெருங்கிச் செத்துப்போன மக்கள் கூட்டத்தின் தென்னாசியக் கூறுகள் என்ற வகையில் புதிய சிந்தனையை நோக்கிய தேடல் இன்று அவசியமாகிறது. ஆக, சுந்ததிரமான உரையாடல் வெளியொன்றும் உருவாக்கப்படல் வேண்டும்.
இதற்குத் தடையாக இரண்டு பிரதான காரணிகளை நாம் இனம் காணலாம். கருத்துக்களை எதிர்கொள்ள முடியாதவர்களும், அவற்றினால் தாக்கத்திற்கு உள்ளாகும் பகுதியினரும் இந்தத் தடைகளை உருவாக்குகிறார்கள்.
1. படைப்பாளிகள் மீதான திட்டமிட்ட அவதூறுகள்.
2. படைப்பாளிகளுக்கு ஒரு குறித்த குறியீட்டை உருவாக்குதால்.
இந்த இரண்டிலும் குறியீட்டை உருவாக்கி அவர்களை அன்னியமாக்கும் கருத்துப்போக்கு இன்று நம் மத்தியில் புற்றுநோய் போலப் பரவி வருவதைக் காணலாம். அவதூறுகள் என்பது இன்று பலரால் இனம்காணப்பட்ட நிலை காணப்பட்டாலும், குறியீடு வழங்குதல் என்பதற்கு இன்னமும் குறித்த அங்கீகாரம் காணப்படுவதாகவே கருதலாம்.
ஒரு சமூகப் பிரச்சனையை, ஒரு நபரை, ஒரு குழுவை, ஒருவரினது சிந்தனைமுறையை, ஒரு உணர்ச்சியை தெரிவிக்க ஏன் குறியீட்டு பெயரிடுகின்றோம்? ஒரு விடயத்திற்கு பெயரிடுகின்றோம் என்றால், அவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவா, அல்லது அவற்றிற்கு பெயர் கொடுப்பதின் மூலம் அவற்றை புரிந்து கொண்டதாக நினைக்கின்றோமா? ஏன் பெயரிடுகின்றோம்??
அது ஒரு துரோகக் கும்பல், பாசிசசக்தி, புலியாதரவு, கடைந்து எடுத்த பொறிக்கித்தனம், பாசிசபாம்பு, திடீர் அரசியல்வாதிகள், புலியாதரவு தேசியக்கூட்டம், புலத்து மாபியா, குருந்தேசியவக்கிரம், திடீர் மார்க்சிஸ்டுகள், புலி மார்க்சிஸ்டுகள்,அண்டி நக்கிய பிழைப்புவாதிகள் – இப்படி பல பல… குறியிட்டு சொற்கள் இணையத்தளத்தில் வரும் எழுத்தாக்கங்களில் குறிப்பிடப்படுகின்றன .
கருத்துக்கள் குறித்த எந்த முன் வாசிப்பும் இன்றி இவ்வாறு அவசர அவசரமாக படைப்பாளிகள் மீது முத்திரை பதித்துவிடுகிறோம். இதனால் நாம் படைப்பாளிகளைப் புரிந்து கொண்டதாகவும் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். கருத்தைப் பாகுபடுத்தி அதன் முழு உள்ளடக்கத்தையும் அறிந்துகொண்டதாகவும் வேறு நினைக்கின்றோம் . இப்படி ஒரு விடயத்திக்கு பெயர் கொடுப்பதின் மூலம் அதை ஒரு வட்டத்துக்குள் வகைப்படுத்திவிடுகின்றோம். அத்துடன் அதை புரிந்து கொண்டதாக வேற நினைக்கிறோம். இதனால் நாம் இவற்றை வெகு அருகில் சென்று பார்ப்பதில்லை. அதற்கு பெயர் கொடுக்காவிட்டால் அதை எப்படியாவது உற்று நோக்கவேண்டிய கட்டாயத்திக்கு உள்ளாகின்றோம். அதாவது ஒரு நபரையோ, ஒரு குழுவையோ, ஒரு பிரச்சனையையோ புதிதாக அணுகின்றோம். அதற்கு முன்பு பார்த்திராதபடி அதை பார்ப்போம். இதுதான் சரியான நடைமுறையாகும்.
மனிதர்களையும், சமூகப்பிரச்சினைகளையும், இனப்பிரச்சனைகளையும் வலுவிழக்கச் செய்து ஒழித்துக்கட்டுவதற்கு வசதியான வழிதான் பெயரிடுவதாகும். துரோகி, ஒட்டுக்குழு, துணைப்படை, தேசியத்துக்கு எதிரானவர்கள், மாக்சிய விரோதப்போக்கு, பாசிசசக்தி இப்படி பல பல எதிரும் புதிருமாக அடையாளப்படுத்தி விட்டு அந்த அடையாளத்தை தகர்த்து விடுகின்றோம். மனிதர்களுக்கோ, அல்லது ஒரு பிரச்சனைக்கோ அடையாளத்தை கொடுக்காவிட்டால் அவர்களை கூர்ந்து நோக்குவது அவசிய தேவையாகிறது .
இப்படி கூர்ந்து நோக்கும் போது யாரையாவது கொலை செய்வது முடியாத செயல். ஏன் இணையத்தில் கூட அவதூறாக எழுதவும் முடியாது. இதுதான் கடந்த காலங்களில் பொதுவான அரசியலாக இருந்தது. பெயரை கொடுத்து கொலை செய்தோம். பலரை வெளியேயும் தள்ளி விட்டோம். இப்படி அடையாளப் படுத்தி இருக்காவிட்டால் அந்த தனிப்பட்ட மனிதரோ, மக்களோ, பொதுப் பிரச்சனையோ, உணர்ச்சியோ எதுவானாலும் சரி அதோடு எங்களுக்கு உள்ள உறவில், அதன் விளைவான செயலில் அக்கறை கொள்ளும் கட்டாயம் ஏற்படுகின்றது.
ஆகவே அடையாளமிடுவது, சொல்ப்படுத்துவது என்பன ஒன்றை புறம்தள்ளிவிட வசதியான வழியாகிவிடுகின்றது. அத்துடன் அதை மறுக்கவும், கண்டனம் செய்யவும், நியாயப்படுத்தவும் முடிகின்றது. இது தான் கடந்த போராட்ட காலத்தில் நடந்தது. ஏன் இன்றும் சிலர் அதே வேலை முறையை எம்மில் பலர் மேற்கொள்ளுகின்றனர். இது ஒருபுறம் இருக்க நாங்கள் எந்த அடிப்படையிலிருந்து குறியீட்டு பெயரிடுகின்றோம்?
எப்போதும் பெயர் இடுகின்ற, தேர்வு செய்கின்ற, அடையாளம் இடுகின்ற அந்த அடிப்படை தான் எது? அதாவது நாம் செயல் படுகின்ற, ஆராய்ந்து பார்க்கின்ற, பெயரிடுகின்ற செயல் தோன்றும் ஒரு உட்கூறு அல்லது ஒரு அடிப்படை இருப்பதாக உணர்கின்றோம். அதை சிலபேர் மாக்சியசாரம் என்றும், அதிகார சாரம் என்றும் இன்னும் பல பெயர்களில் நினைக்கக்கூடும். இந்த உட்கூறு அடிப்படை இருப்பதாக நினைக்கிறோம்.
இதுதான் பெயரிடுகின்றதா? நியாயத்தீர்ப்பு செய்கின்றதா? உண்மையில் இந்த உட்கூறு எங்கள் நினைவுதான். நிகழ்காலம் மூலம் உயிர் கொடுக்கப்பட்ட, கடந்த காலத்தினுடைய அடைத்து வைக்கப்பட்டுள்ள, புலனுணர்வுத்தொடர்தான் இந்த அடிப்படை. இந்த உட்கூறுதான் பெயரிடுதல், அடையாளமிடுதல், நினைவுபடுத்திக்கொள்ளுதல் மூலமாக நிகழ் காலத்தை தளமாக்கிக் கொள்கின்றது. இதை விரிவாக்கிப்பார்க்கும்போது, இந்த உட்கூறு, இந்த அடிப்படை இருக்கும்வரை புரிந்துகொள்வது முடியாத காரியம். இப்போது எம்மக்களுக்கு முன்னே உள்ள பிரச்சனையையும், அதன் தளத்தையும் புரிந்து கொள்வது இயலாத காரியம். இந்த உட்கூறு இல்லாமல் போனால்தான் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் அந்த அடிப்படைதான் நினைவு. பெயர் கொடுக்கப்பட்ட பல்வேறு அனுபவங்களின் நினைவு. இந்த அடிப்படை என்பது எங்களிடம் ஒரு சொல்லாக இருக்கின்றது.
அந்த அடிப்படைக்குப் பெயரிடாவிட்டால் அடிப்படை என்று ஒன்று இருக்காது. உதாரணமாக மாக்சிய அடிப்படையோ, முதலாளித்துவ அடிப்படையோ, இடதுசாரி அடிப்படையோ, வலதுசாரி அடிப்படையோ இருக்காது . அதாவது குறியிட்டு பெயர்களையொட்டி சிந்திக்காவிட்டால், வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டால் எங்களால் சிந்திக்கமுடியாதா? சிந்திப்பது சொல்லாக்குவத்தின் மூலமே வருகின்றது.
அல்லது சொல்லாக்குவது சிந்தைனைக்கு பதில் அளிப்பாகின்றது. இவைகள் நடப்பு உண்மைகளை பார்க்க ஒருக்காலும் உதவமாட்டாது. ஏன் நடப்பு உண்மைகளை கணத்துக்கு கணம், பார்க்க முடியாதபடியும் செய்கினறது . பொதுவாக எங்களை கவனித்தோமானால் சாரத்தைவிட வார்த்தைகள் மிக முக்கியம் பெற்றுவிட்டன என்பதை நாங்கள் கடந்து வந்த போராட்ட முறையிலும் சரி, இப்போதுள்ள புலத்திலும் சரி, வெறும் வார்த்தைகளில் தான் வாழ்கின்றோம். மாக்சியம், இடதுசாரி, தேசியவாதி, வலதுசாரி போன்ற சொற்கள் அல்லது அந்த சொற்கள் உணர்த்தக்கூடிய உணர்ச்சிகள் மிகவும் முக்கியமாகிவிட்டன.
இந்த சொற்களை கூறும் போது அந்த உணர்ச்சிக்காக நிற்கும் சொல்லாக இருப்பது நாம்தான். ஆனால் அந்த உணர்ச்சி என்னவென்று தெரியாது. ஏனென்றால் அந்த சொல் முக்கியமாகிவிட்டது. நான் ஒரு இடதுசாரி, தேசியவாதி, மாக்சியவாதி என்று சொல்லும்போது அந்த சொல் எதைக்குறிக்கின்றது? அந்த சொல்லுக்குப் பின்னே உள்ள பொருள் என்ன? இவற்றை நாங்கள் ஒரு போதும் ஆராந்து பார்ப்பதில்லை. எங்களுடைய உட்கூறு அடிப்படைதான் அந்த சொல். அல்லது அடையாளக்குறிப்பு முக்கியம் அல்ல, அதன் பின்னே இருப்பது தான் முக்கியம் என்றால் நாங்கள் ஆராய முற்படுவோம்.
அதேவேளை அடையாளக் குறியீடோடு ஒன்றிப்போய்விட்டால், அத்துடன் ஒட்டிக்கொண்டால், மேற்கொண்டு சிந்திக்க முடியாது. ஆனால் எங்களில் பலபேர் அடையாளக் குறியீடோடு ஒன்றிப்போய்தான் இருக்கின்றோம். மாக்சியம், இடதுசாரி, தத்துவம்… இப்படி பலவற்றோடு ஒன்றிப்போய்விடுகின்றோம். இப்படி பெயர்கள் கொடுப்பதால், அதற்கு மேலே செல்லமுடிவதில்லை. அதற்கு முன்னாலேயே அதைப்பற்றி தீர்மானிக்க தொடங்கிவிடுகின்றோம். இதனால்தான் சில பெயர்களை கொடுத்து அழித்து கட்டுகின்றோம்.
உதாரணமாக துரோகி, ஒட்டுக்குழு, துணைப்படை, இடதுசாரியப்புலி.. இப்படிப் பல பெயர்கள். அதே நேரத்தில் முன்கூட்டியே தீர்மானிக்கத் தொடங்குகின்றோமென்றால் இன்னும் இந்த பழைய அடிப்படைகளிலிருந்துகொண்டுதான் செயல்படுகின்றோம். இதனால்த்தான் யதார்த்தத்தை புரிந்துகொள்ளமுடியாமலுள்ளது. ஆனால் பெயரிடாதபோது வேறு விதமாக அணுகுமுறை உண்டாகும்.ஒவ்வொருவரையும் நாங்கள் நேரடியாக புரிந்துகொள்வோம். கூட்டமாக புறக்கணிக்கும் நிலையும் ஏற்படாது.
மேலும் மேலும் புரிந்து கொள்வோம். ஆகவே இந்த குறியீட்டு பெயர்களை கொடுத்து விடுவதாலோ அல்லது அந்த வார்த்தகளை புரியாமல் சொல்வதாலோ நாங்கள் சரியான நடைமுறையை புரிந்து கொண்டதாக இல்லை. இப்போதுள்ள தளத்திலிருந்து மக்களின் பிரச்சனைகளை சரியாகப் புரிந்துகொண்டால் எந்தவித வார்த்தைகளும், குறியிட்டு பெயர்களும் தேவைப்படாது. பிரச்சனையை மட்டும்தான் பார்ப்போம். இதுதான் எங்கள் எல்லோரையும் பொதுத் தளத்திற்கு கொண்டுபோகும்
நல்லதொரு ஆக்கம்,இந்த நேரத்தில் மிகவும் அவசியமான ஒன்று,நாம் குறியீடுகளை பயன்படுத்துவது முக்கியமாக நமது இயலாமையின் வெளிப்பாடென்றே எண்ணுகிறேன் இரண்டாவது வன்மத்தனம் இந்த குறியீடுகள் ஏறக்குறய சாதி முறைகளை ஒத்ததாகவே உணா்கிறேன் அத்தோடு இடதுசாரிகள் வலதுசாரிகள் என்று புலம்புபவா்களில் பலா் வாசித்த புத்தகங்களின் தாக்கத்தில் மட்டுமே வாழ்கிறார்கள் ஆனால் இயல்பாக அவா்கள் அதை உள்ழுணா்வதாக தெரியவில்லை.
நீண்டகாலமாய் தொடரும் இந்த அவலம், பார்வை மாற்றப்படவேண்டும்.
தங்களின் கருத்துக்கள் இன்றைய காலகட்டத்தில் காலம் பிந்தியாவது
சம்பந்தபட்டவர்கள் அனைவரும் கவனிக்கவேண்டும். பின்னடைவுக்கும் பிளவுக்கும்
தோல்விகளுக்கும் இதுவே பிரதான காரணமாகும்.
புதிய சிந்தனை, அணுகல்முறை அவசியமானது. இக்கருத்துகள்
வெறுமனை வாசித்துவிட்டு கடந்து சென்றால்,நமது பயணமும் பார்வையும்
பழைய குருடி கதவை திறவடி கதைதான்.
பவ்சர்
இந்தக் கட்டுரை,”நல்ல கட்டுரை-கெட்ட கட்டுரை”,நீண்டகால அவலத்தைப் போக்கும் நிவரணி எனப் பகரும் பின்னூட்டங்களைத் தள்ளி வைத்துப் பார்ப்போமானால் கட்டுரையாளரது மையப் பொருள் விளங்கத் தக்கது.
“இன்றைய உலகத்தில் எல்லாம் வெளிப்படையாக-நேர்மையாக இயங்கிறது.எல்லோரும் மக்களது நன்மைக்கே காரியஞ் செய்கின்றனர்.இதுள் அடிபாடு,முத்திரை குத்தல் எதற்கு?” இவ்வளவுதாம் அதன் மையப் பேசு பொருள்!
இந்தவுலகத்தில் வர்க்கச் சமுதாயங்களே நிலவுகின்றன.
வர்க்க பேதமற்ற சமூக உருவாக்கம் நிகழ்ந்து விட்டதாகச் சொல்லும் யுக்கோஸ்லோவிய மார்க்சிஸற்-தத்துவவாதி; சிலாவோஜ் சிசேக் (Living in the End Times By Slavoj Zizek) ஏதோவொரு வகையில் பிடுகியெறியப்படும் பரந்துபட்ட மக்களுக்கெதிரான திசையில் சென்றுபோவதை உணரும்போது,உடனே உலகத்தின் இறுதி முடிவில் மானுடம் வாழ்வதாகச் சொல்லிவிட்டுத் தப்புகிறார்.இங்கே,இக்கட்டுரையாளருக்குப் புலம் பெயர் அரசியல் கூட்டணிகள்,சேர்க்கைகள்-தனிநபர்களாக இருக்கும் உதிரி “எழுத்தாளர்கள்,விமர்சகர்கள்” என்போரான இன்ன பிறவெல்லாம் வர்க்க அரசியலைக் கடந்த பரந்துபட்ட மக்களுக்கிசைவான அரசியல்-செயற்பாடுகளோடிருப்போராக இருக்கும் சூழலெனச் சொல்லுகிறாரோ-சிலாவோஜ் சிசேக்கு ஏற்பட்ட பிரச்சனைபோல பேச முற்படுகிறாரா?
இதோ நிலவும் கட்சி அரசியலில் பாராளுமன்ற ஜனநாயகமென்பது நமக்கு நேர குத்தும் எத்தனைவிதமான அடையாளப்படுத்தல்-குறியீடுகள்,முத்திரை குத்தலெல்லாம் எங்கோ வேறொரு கிரகத்தில் நடப்பதுபோன்று, புலம்பெயர் சூழலில் நிலமை கொட்டுவிட்டுத் தறிகெட்டலைவதாகச் சொல்வதுபோன்று இவரது கட்டுரை பேசு பொருட்களை எடுத்திருக்கிறது.பார்க்கு இடமெல்லாம் பரந்து விரிந்து நம் சிரசின் பின்னே தலைமறைக்கும் ஆதிக்கச் சக்திகளையும்,அவர்களது தொண்டாரப் பொடிகளையும் அப்படி அழைக்காதீர்களெனச் சொல்கிறாரா?
ஒவ்வொரு நபருக்குப் பின்னாலும் ஒளிந்துவுலாவும் ஆதிக்கச் சக்திகளது உளவுத் தலைகள்,ஒற்றர்களெல்லாம் நமக்குள் அரசியல் பேசுகின்றன.அவைகளை இனம் காணுவது முத்திரை குத்தலோடுதாம்,குறியீட்டோடுதாம் நிகழ்கிறது.சாதரணமாக இன்றைய பாராளுமன்றப் பாசிசிஸ்டுக்களைக் கவனித்தோமானால் அவர்கள் சாதரணக் குடிமக்களையே பயங்கரவாதி-சமூக விரோதியெனக் கத்தியே தனது பாதுகாப்பை உறுதிப்படத்தும் வன்முறைக் கருவியை மக்களுக்குள் திணிக்கிறார்கள்.இங்கே, நமக்குள் எத்தனை விதமான அரச-ஆதிக்க வர்க்கங்களது வேட்டை நாய்கள் உலாவருவதென்பதை உரைத்துப் பார்க்காத கட்டுரை இது.
சமீபத்தில் ஜீவமுரளி தன் “அப்படியா” பதிவில் ( http://www.appadiyaa.com/2010/11/research-and-analysis-wing-raw.html ) எழுதும் உளவுப்படைகள்-கூலிகளது குறிப்பில் கவனமாகத் தவிர்க்கப்படும் வரதராஜப் பெருமாளது வருகை-அரசியல் நகர்வு ஆருக்கோ உவப்பாக இருக்கு.இப்படி எத்தனையோ சங்கதிகள் நமக்குள்.இந்தச் சூழலில் இக்கட்டுரை பேசும் கருத்து நிலைகள் சமூகத்தில் நிலவும் வர்க்க நலன்சார் அரசியல்-வியூக நகர்வுகளையும் அவர்களது லொபிகளையும் குறித்துப் பொத்தாம்பொதுவாக விளங்கிக்கொண்டு”குறியீடு-முத்திரை”எனச் சொல்லிக் “கருவாடு கரைந்து ஆணத்துக்கை” எனும் கதை சொல்ல,அதை நல்லது-வல்லதென”சொல்லவும் காலம் கழிகிறது.
சார் சிங்களத்தில் அடிக்கடி கூறும் ஒரு வாசகம் உள்ளது பூல் ஒரா கரெங் தெனேவீ என்று பூசணிக்காய் திருடனை அவனது உடம்பில் பட்டிருக்கும் சாம்பலில் கண்டுபிடிக்களாம் என்று குற்றம் செய்பவனை தற்காலங்களில் பினனூட்டங்களில் அடையாளம் காணலாம் செய்வது தங்களுக்கு சரியென்றாலும் சமூகத்திற்கு தீங்கு ஏனெனில் த.அரங்கம் அதன்பாட்டில் எதை எதையோ கூறும் போது வாய்மூடிகளாக இருப்பதற்கு அணைவருமே பால் குடிக்கும் போது கண்ணை மூடிக்கிடக்கும் பூனைகள் அல்லவே
மிக நல்ல ஆக்கம் இரண்டாம் வகுப்பில் நாம் கல்வி கற்கும் போது பென்சில் கள்ளன் என்று அழைத்ததுவும் ஆண்டு 8 இல் உயர் வகுப்பு காரர்களை பெண்சில் கள்ளன் என்று அழைத்ததுவும் ஞாபகத்திற்கு வருகின்றது வெட்கமாகவும் இருக்கின்றது இது போன்ற சிறுப்பிள்ளை விளையாட்டுக்களை காணாமல் வெற்றியின் பாதையில் பயணிப்போம்
இக்கட்டுரையின் பேசுபொருள் முத்திரை குத்தி சமுகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் பண்பாட்டை விலக்கி வைத்து பொதுக்கருத்தியலில் இணைவதை பேசுகின்றது. இருப்பினும் இன ஒடுக்கல் மற்றும் மேலாதிக்க வாதிகளின் சிந்தனைகளை வலிய எம்மீது திணிக்கும் ஏஜெண்டுகளாக செயல்படும் எம்மவர் குறித்து, அவர்களை எவ்வாறு கையாளுதல் என்பது குறித்து இங்கு தீர்வு சொல்லப் படவில்லை. இருப்பினும் முத்திரை குத்தி ஒதுக்கிவைக்கும் பண்பாடு எமது சமூகத்திலும் கடந்த கால எமது அரசியல் ஆயுத போராட்டத்திலும் பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தியத்தை நாமறிவோம். இவ்வாறான நிலைமைகளில் இவர்களை (முத்திரை குத்துவோரையும் குத்தப் படுவோரையும்) ஆற்றுகைப் படுத்த எம்மில் பலர் முன்வராததும் எம்மினத்தில் உள்ள மிக அவலமான நிலைமையாகும்.
மனோ,
நீங்கள் கூறுவதில் சில நியாயங்கள் உள்ளன. ஆயினும் ஒருவர் இலங்கை அரசிற்கோ சார்பாக உருவாகக் கூடிய கருத்து ஒன்றை முன்வைத்தால் அதனைச் சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? இவ்வாறே இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். ஆக, குறியிடுதல் என்பதைப் பொதுவான போக்காக ஏற்க முடியாவிடினும் இது சில சமயங்களில் தவிர்க்க முடியாது.
சுட்டிக் காட்டுதல் வேறு, குறியிடுதல் வேறு.
முதலாவதில் ஒருவரது சொல்லோ செயலோ தவறென்று கூறப்பட்டு அதன் நோக்கங்கள் கடந்தகால நடைமுறை அடிப்படையில் விமர்சிக்கப் படுகிறது.
மற்றதில், ஒருவருக்கு அடையாள்மிடப் பட்டு, அந்த அடையாளத்தின் அடிப்படையில் அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் மதிப்பிடப் படுகிறது. இது தான் கடந்த காலத்தில் இயக்கங்கள் செய்து வந்தது.
கருத்துக்களையும் செயல்களையும் அவற்றின் பின்னணியில் நோக்குவது சரி. அது முத்திரை குத்தல் அல்ல.
இங்கு பலவிடத்தும் நடப்பது அதல்ல. மனிதரை அடையாளப் படுத்தி, அதை முதன்மைப்படுத்திக் குற்றஞ்சாட்டும் போக்குப் பற்றியதே இக் கட்டுரை என நினைக்கிறேன்.
//நூறு கருத்துக்கள் மோதும் இந்த விவாதச் சூழல் தொடரவேண்டும். கருத்துக்களைக் கருத்துக்களாக எதிர் கொள்ளல் என்பதும் அவை குறித்த எதிர்வினையை முன்வைத்தலும் இன்றைய தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. //என்பதைக் கட்டுரையாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.ஆனாலும் குறிசுட்டலைந்து தானேயழிந்து தலைசாய்கின்ற மனிதகுலத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றார். கட்டுரையாளனின்அந்தவருத்தமும்,கேள்வியும் நேர்மையானது.இந்தக்கட்டுரையை நல்லகட்டுரை என்று சொன்னவர்க்கே ஒரு போடு போட்டு குறிசுட்டுவைக்கமுயல்கிற சம்பவத்தால் ஒருபயனும் பிறக்கப் போவதில்லை என்பதுதான் கட்டுரையாளைனின் எண்ணக்கரு.மானிட சிந்தனைகள் விசாலித்தவைகள். விரிந்தவை அவற்றை குறிசுட்டுவைத்துக் குறுக்கிவிடுவது அபத்தமானது.ஒன்றுபடு, ஒன்றுபடு என்று தான் எல்லா அடிப்படைவாதிகளும்,அரசியல்வாதிகளும் கூக்குரலிடுகின்றார்கள். இப்படிக்குறிசுட்டுவைத்துவிட்டு… அப்படியெனில் எப்படி ஒன்று படுதல் நிகழும்????இந்தவுலகத்தில் வர்க்கச் சமுதாயங்களே நிலவுகின்றன என்று நாம் குறிசுட்டுவைத்திருக்கின்றோம். வர்க்க பேதமற்ற சமூக உருவாக்கம் நிகழ்ந்தாலும் கூட நாங்கள் இட்ட குறியின் முறுக்கு அதனை நம்ப இடம் தராது. அப்படி நம்மை நாம் வளர்த்தெடுத்திருக்கின்றோம். மனிதநேயத்தினை பழிவாங்குதல் மூலமும் ,குறிசுட்டுப் பரிகசிப்பதன் மூலமும் நாம்வளர்க்க முடியாது.ஆக கருத்துக்களை மோதவிட்டாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிற போதே அதற்கான நியாயத் தீர்வு கிடைக்கும்.