08 02.2015 டொரான்டோவில் தமிழர் வகைதுறை வளநிலைய (தேடகம்) ஏற்பாட்டில் நடந்த தோழர் குமரன் பொன்னுத்துரையின் ‘நான் நடந்து வந்த பாதை’ நூல் வெளியீடும், கலந்துரையாடலும் நடைபெற்றன. நிகழ்வில் பலரைக் காண முடிந்தது. குமரன், சேணா உட்படப்பல தேடக நண்பர்கள், பரதன் நவரத்தினம், ஜான் மாஸ்ட்டர், எஸ்.கே.விக்னேஸ்வரன், சுவிஸ் முரளி மற்றும் முகநூல் நண்பர்கள் எனப் பலரைக்காண முடிந்தது.
குமரன் பொன்னுத்துரை அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் ஆரம்ப காலகட்டத்திலிருந்து இயங்கி, ஒதுங்கியவர்களில் ஒருவர். கழகத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றில் இருந்ததுடன், கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களிலொருவராகவும் விளங்கியவர். தனது மறைவுக்கு முன்னர் அவர் எழுதி வைத்த அனுபவக்குறிப்புகளை அவரது குடும்பத்தினர் குறிப்புகளை அப்படியே (எந்தவித எழுத்துப்பிழைகள் / இலக்கணப்பிழைகளைத்திருத்தாமல்)வெளியிட்டிருக்கின்றார்கள். தன்னைச்சுற்றிய எந்தவித ‘நாயக’க்கட்டமைப்புமின்றி, உள்ளது உள்ளபடி, தன் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அதன் மூலம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஒரு காலகட்டத்து வரலாற்றினைத் தன் பார்வையில் பதிவு செய்துள்ளார்.
காந்தியப்பண்ணைகளில் தனது ஆரம்பகாலத்து நடவடிக்கைகள், அதன் பின்னரான கழகத்தில் அவரது செயற்பாடுகள், கழகத்தில் நிலவிய உள் முரண்பாடுகள், நடைபெற்ற படுகொலைகள், கழகத்தின் அரசியல் மற்றும் இராணுவப்பிரிவுகளுக்கிடையிலான முரண்பாடுகள், ஏனைய அமைப்புகளுடன் நிலவிய முரண்பாடுகள், கழகத்தில் ஏற்பட்ட பிரிவுகள் / வெளியேற்றங்கள் , சமூக விரோதிகளைக்களையெடுத்தது எனத்தொடங்கி இறுதியாக நாட்டை விட்டு வெளியேறிய நிகழ்வு எனப்பலவற்றையும் தனது குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.
நூலில் குமரன் பொன்னுத்துரை தனது நாவலர் பண்ணை அனுபவங்களை விபரித்திருந்தார். ‘நாவலர் பண்ணை’ பற்றிய குறிப்புகள் பழைய நினைவுகள் சிலவற்றை அசை போட வைத்தன. எழுபதுகளின் இறுதியில், எண்பதுகளின் ஆரம்பத்தில் மொறட்டுவைப் பல்கலைகழகத்தமிச்சங்கம் 77 கலவரம் காரணமாக வன்னிப்பகுதி மற்றும் கிழக்கு மாகாணத்தின் எல்லைப்பகுதிகளில் மலையகத்தமிழ் அகதிகளைக் குடியேற்றுவதற்கு உதவும் பொருட்டுச் சில தன்னார்வச்செயற்பாடுகளைக் காந்தியம் அமைப்புடன் இணைந்து முன்னெடுத்துக்கொண்டிருந்தது. அவற்றிலொன்று நாவலர் பண்ணையை அண்மித்துக்குடியேறியிருந்த மலையகத்தமிழர்களுக்கு உதவும் பொருட்டு காடழித்துப் பாதையொன்றினை அமைத்துக்கொடுப்பது. அக்காலகட்டத்தில் நெடுங்கேணியிலிருந்து மருதோடை மட்டுமே வாகனப்போக்குவரத்துக்குரிய பாதையிருந்தது. மருதோடையிலிருந்து
நாவலர் பண்ணை வரை மூன்று மைல்கள் வரை நடந்துதான் செல்ல வேண்டும். இதனால் நாவலர் பண்ணையை அண்மித்துக்குடியேறியிருந்த மக்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள். அவர்களுக்கு உதவும்பொருட்டு காஞ்சிரமொட்டைக்கும் (நாவலர் பண்ணைக்கு அண்மையிலிருந்த பகுதி) மருதோடைக்குமிடையிலிருந்த காட்டினூடு பாதையொன்றினை அமைப்பதற்காக ஒவ்வொரு வாரமும் , வார இறுதி நாள்களில் மாணவர்கள் அங்கு சென்று பாதை அமைப்பதற்கான தன்னார்வச் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.
அத்திட்டத்தில் இணைந்து செயற்படுவதற்காக நானும் அக்காலகட்டத்தில் சென்றிருக்கின்றேன். கொழும்பிலிருந்து இரவு தபாற் புகையிரதத்திலேறி நள்ளிரவில் வவுனியாவில் ‘டாக்டர்’ இராஜசுந்தரத்தின் வீடு சென்று தங்கி, மறுநாள் காலையில் நாவலர் பண்ணைக்குச் செல்வது வழக்கம். பெரும்பாலும் டாக்டர் ராஜசுந்தரமே தான் பாவிக்கும் ஜீப்பில் எங்களை ஏற்றிக்கொண்டு செல்வதுண்டு.
அக்காலகட்டத்தில் இறம்பைக்குளம் அநாதை இல்லத்தில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கொன்றிலும் நானும் , நண்பர் எஸ்.கே.விக்னேஸ்வரவும் கலந்துகொண்டிருக்கின்றோம். ‘தமிழீழமும், சமயமும்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கு அது. வட, கிழக்கிலிருந்து பல அமைப்புகள் (பெண்கள் அமைப்புகள், விவசாயிகள் அமைப்புகள் போன்ற) அக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தார்கள். போதகர்களான சேவியர் (அவர் தனது சிங்கள மனைவியுடன் கலந்து கொண்டிருந்தார்), கனகரத்தினம் ஆகியோருடன் ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ட்டர்) , வாசுதேவா, சிறுமியாக ஜூலி பெர்ணாண்டோ உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தார்கள். அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட பலரின் பெயர்களை இப்பொழுது மறந்து விட்டேன். அக்காலகட்டத்தில் கனவுகளுடன், துடிப்புடன், ஆர்வத்துடன் அங்கு பங்கு பற்றிய பலரும் காணப்பட்டார்கள். யோகன் கண்ணமுத்துவும் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்ததாக அண்மையில் எஸ்.கே.விக்னேஸ்வரன் ஞாபகப்படுத்தியிருந்தார்.
முதன் முதலாக ஜான் மாஸ்ட்டரை விடுதலைக்கனவு மிக்க ஓரிளைஞனாக அப்பொழுதுதான் நான் சந்தித்தேன். தனக்குக் கிடைத்த மருத்துவ பீடத்திற்கான அனுமதியினையும் துறந்து விட்டு அவர் விடுதலைபோராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார் என்பதை அறிந்து அக்காலகட்டத்தில் வியப்பும், அவர் மேல் மதிப்பும் ஏற்பட்டன. அவரைச் சந்தித்தபோது அவர் மட்டக்களப்பில் தாம் நடாத்திய மேதினக்காட்சிகளை உள்ளடக்கிய ஆல்பமொன்றினைத்தந்து அந்நிகழ்வு பற்றி விபரித்திருந்தது இன்னும் ஞாபகத்திலுள்ளது.
அன்று சந்தித்த ‘ஜான் மாஸ்ட்டர்’, எஸ்.கே.விக்னேஸ்வரன் ஆகியோரை மீண்டும் இந்த நிகழ்வில் சந்தித்ததும், குமரன் பொன்னுத்துரையின் நூலில் ‘நாவலர் பண்ணை’ பற்றி விபரிக்கப்பட்டிருந்ததும் அக்காலகட்டத்து நினைவுகளைச்சிறிது அசைபோட வைத்து விட்டன.
உண்மையில் டேவிட் ஐயாவின் முயற்சியால ஆரம்பிக்கப்பட்ட காந்தியப்பண்ணைகள் எழுபதுகளின் இறுதியில் மிகவும் காத்திரமான பங்களிப்பினை ஆற்றிக்கொண்டிருந்தன. அதற்காகத்தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் ‘டாக்டர்’ இராஜசுந்தரம் அவர்கள். பின்னர் ஏற்பட்ட அரசியற் சூழல்கள் காரணமாக அப்பண்ணைகள் செயலிழந்ததும், அங்கு குடியேறியிருந்த மலையகத்தமிழ் அகதிகள் பாதிக்கப்பட்டதும் துர்ப்பாக்கியமான நிகழ்வுகள்.
உண்மையில் காந்தியப்பண்ணைத்திட்ட நோக்கம் மிகவும் பயன் மிக்கதாகவே அமைந்திருந்தது. பண்ணைகள் மாதிரிப்பண்ணைகளாக விளங்கின. அப்பண்ணைகளைச் சுற்றிக் குடியேறியிருந்த அகதிகளுக்கு விவசாயம் பற்றிய அறிவினை, அனுபவத்தினை அளிப்பதற்காகவே அவை அமைந்திருந்தன. அம்மாதிரிப்பண்ணை ஒவ்வொன்றிலும் நியாய விலைக்கடை ,
குழந்தைகளைப் பராமரிக்கும் நிலையம் போன்றவை அமைந்திருந்தன. குழந்தைகளுக்கு திரிபோஷா மா போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன. இருந்தாலும் பண்ணைகளுக்குப் பொறுப்பாக விடப்பட்டவர்கள் அப்பண்ணைகளை இலாபமீட்டும் பண்ணைகளாக மாற்ற முயன்றதாகவே எனக்குத்தோன்றியது. அங்குள்ள குடியேற்ற வாசிகளைப் பண்ணைகளில் பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு விவசாயத்தைப் போதிப்பதும் அப்பண்ணைகளின் முக்கியமான நோக்கங்களிலொன்று. அதற்குப்பதிலாக அப்பண்ணைக்குப்பொறுப்பாக இருந்தவர்கள் நன்கு வேலை செய்யக்கூடிய குடியேற்றவாசிகளை சிலரையே பண்ணைகளில் பணிக்கு அமர்த்திப் பணியாற்ற அனுமதித்து அப்பண்ணைகளை இலாபமீட்டும் பண்ணைகளாக ஆக்குவதற்கு முற்பட்டார்கள். மேலும் அப்பண்ணைகளைச் சுற்றிக்குடியேறியிருந்த மலையகத்தமிழ் அகதிகள் ,
அவர்களுக்குக்கொடுக்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும். மாதிரிப்பண்ணைகளில் பணியாற்றி, விவசாய அறிவினைப்பெற்று அவ்வறிவின் மூலம் தம் நிலத்தில் விவசாயம் செய்து தம்மை அவ்வகதிகள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதுதான் அப்பண்ணைகளின் பிரதான நோக்கமாகவிருந்தது. ஆனால் அவ்வகதிகளில் பெரும்பாலானவர்களுக்குப் பண்ணைகளில் பணியாற்றி விவசாய அறிவினைப்பெற முடியாமலிருந்ததால் தமக்கு வழங்கப்பட்ட நிலங்களில் விவசாயத்தைச் செய்வதற்கு முடியாமலிருந்தது. எனவே வாழ்வுக்காக அவர்கள் எங்காவது வேலை செய்ய வேண்டியிருந்தது. அப்பண்ணைகளை அண்மித்து வாழ்ந்த வன்னியின் பூர்வீகக்குடிகளின் வயல்களில் கூலி வேலை செய்து தம் இருப்பைத்தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு அவ்வகதிகள் தள்ளப்பட்டது துர்ப்பாக்கியமே.