கடந்த டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து உயர் ரக ராணுவ ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் நோக்கி இந்திய தலைமை ராணுவ தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட ராணுவ உயரதிகாரிகள் 14 பேர் பயணித்தனர். இவர்கள் சென்ற விமானம் குன்னூர் அருகில் விபத்தில் சிக்கி 14 பேருமே இறந்தனர்.
இந்த விபத்தும் அதில் ராணுவ தலைமை தளபதியே இறந்தமையும் இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து தொடர்பாக பாஜக பிரமுகர்கள் உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இந்த விமான விபத்து தொடர்பாக விமானப்படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான விசாரணைக் குழு தீவிர விசாரணை நடத்தி வந்தது.
இப்போது அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் குன்னூர் விமான விபத்திற்கு வானிலையே முக்கிய காரணம் ஹெலிகாப்டரில் எவ்விதமான தொழில்நுட்பக் கோளாறுகளும் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஆனால் இந்த அறிக்கையில் மோசமான வானிலையை முன்கூட்டியே கணித்து அதற்கு ஏற்றது போல செயல்படாமல் போனதும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்பது தொடர்பாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.