இணையத்தில் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வந்த கிஷோர் கே சாமி என்பவர் மீது தமிழக காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகித்துள்ளது.
இணைய தளத்தில் கடந்த பல ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரையும் மிக மோசமான வார்த்தைகளால் விமர்சனம் என்ற பெயரில் பேசி வந்தவர் கிஷோர் கே சாமி. பெரியார்,அண்ணா, கலைஞர், தமிழக முதல்வர் அவர்களின் குடும்பத்தினரையும், மிக மோசமாக பேசி வந்ததோடு தன்னை முடிந்தால் கைது செய்யுமாறும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பேசி வந்தார்.
திமுக ஐடி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெண் பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசியதாகவும், ஒரு ஆங்கில ஊடக பெண்ணை இழிவாகப் பேசியதாகவும் மேலும் இரண்டு வழக்குகள் அவர் மீது போடப்பட்ட நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.
இதுவரை கிஷோர் கே சாமி மீது மூன்று வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில் இப்போது குண்டாஸ் வழக்கும் பாய்ந்துள்ளது இணைய வெளிகளில் அவதூறாகப் பேசுவோருக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை.