05.03.2009.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மாணவியொருவரின் மரணம் தொடர்பாக அப் பல்கலைக்கழக மாணவியர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளதால் அம்மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டமீட்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவிகள் இருவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். ஒருவர் 24 ஆம் திகதியும் இன்னுமொருவர் 25 ஆம் திகதியும் தற்கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இம்மாணவிகளில் ஒருவரின் தற்கொலை தொடர்பாக அப்பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்துள்ளனர். மாணவி உண்மையில் தற்கொலை செய்திருந்தால் மாணவர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும்.
சுருக்கில் தொங்கிய அந்த மாணவியின் கால்கள் நிலத்தில் முட்டிய படி இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே இது தொடர்பில் சந்தேகங்கள் எழுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவசரகால சட்டத்தின் பேரில் கடத்தல்கள், கப்பம் பெறுதல், சுற்றிவளைப்புகள், கைதுகள் தான் இடம்பெறுகின்றது. மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக அதிகரித்துள்ளன. அவசரகாலச் சட்டத்தின் தாக்கத்தை மூவின மக்களும் அனுபவிக்கின்றனர்.
கிழக்கு மீட்கப்பட்டு விட்டதாகக் அரசு கூறுகின்றது. ஆனால், அங்கு மக்களின் சுதந்திரம் இழக்கப்பட்டு விட்டது. தற்போது கிழக்கில் அபிவிருத்தி என்ற நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. வடக்கின் நிலையோ இன்னும் படுமோசம். அங்கு மக்கள் கும்பல் கும்பலாக தினமும் கொல்லப்படுகின்றனர்.
தென்பகுதியில் கூட காணமல் போவோர் கடத்தப்படு?வாரின் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனை அரசினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளே உறுதிப்படுத்துகின்றன.