விடுதலைப் புலிகளிடமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்தில் புதிய படைத் தலைமையகங்களை அமைப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களைத் தமது சொந்த இடங்களுக்கு அனுமதிப்பதற்கு முன்னர் அந்தப் பகுதிகளில் இரண்டு புதிய பாதுகாப்புத் தலைமையகங்கள், இரண்டு விமானப்படைத் தளங்கள் மற்றும் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கவிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய இராணுவக் கட்டளைத் தலைமையகங்கள் அமைக்கப்படவிருப்பதுடன், இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தை விமானப்படையினர் தமது ஓடுதளமாக மாற்றவுள்ளனர்.
வவுனியாவிலுள்ள வன்னி இராணுவக் கட்டளைத் தலைமையகத்;துக்கு மேலதிகமாகப் புதிய தலைமையகங்கள் அமைக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார ஆங்கில வார இதழொன்றுக்குத் தெரிவித்தார்.
அதேநேரம், இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளம் அமைந்திருந்த பகுதி விரிவாக்கப்பட்டு விமானப்படையினரின் ஓடுதளம் அமைக்கப்படும் என விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயகார கூறியுள்ளார்.
தாக்குதல் விமானங்கள் இறங்கக்கூடியளவு விமானத்தளம் அமைக்கப்படும் எனவும், இரண்டாவது தளம் விமான ஒடுதளத்துடன் முல்லைத்தீவில் அமைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு மற்றும் வடதெற்குக் கரையோரங்களை மையமாகக்கொண்டு கடற்படையினரும் புதிய தளங்களை அமைக்கவுள்ளனர்.
புதிய பொலிஸ் நிலையங்கள் மற்றும் சோதனை நிலையங்கள் அமைப்பதற்கு 50 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சியில் பொலிஸ் தலைமையகம் அமைக்கப்படுமெனவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.