04.01.2008.
கிளிநொச்சி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளபோதும், அதுவே, பிரிவினைவாத பிரச்சினைக்கு முடிவாக அமையாது என PLOT தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
“இது மோதல்களின் இறுதியாக அமையாது என்பது நிச்சயம். எனினும், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு இதுவே ஆரம்பமாக அமைந்துள்ளது. கிளிநொச்சியைப் போன்று கடுமையான இராணுவ நடவடிக்கையொன்றை படைகள் முன்னெடுத்தால் அவர்கள் முல்லைத்தீவையும் கைப்பற்றிவிடுவார்கள்” என சித்தார்த்தன் கூறியுள்ளார்.
இழந்த பகுதிகளை விடுதலைப் புலிகள் மீண்டும் வெற்றிபெறுவது மிகவும் கடினமானது என ஏ.எவ்.பி.க்குச் சுட்டிக்காட்டியிருக்கும் சித்தார்த்தன், விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுதாரிகள் என்ற தமது அடையாளத்தைத் தொடர்ந்தும் தம்மகத்தே வைத்துள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கும் வெற்றி கொண்டாடப்படுகின்றபோதும், இந்த மோதல் இத்துடன் முடிவடையாது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“மோதல்கள் முடிவடையும் நிலையிலிருந்து வெகு தூரத்தில் உள்ளன. உக்கிரமான மோதல்கள் தொடர்ந்தும் நடைபெறும். விடுதலைப் புலிகள் தமது வழமையான கெரில்லா முறையிலான பதில் தாக்குதல்களை நடத்த ஆரம்பிப்பார்கள்” என லங்கா தீப பத்திரிகையின் இராணுவ ஆய்வாளரான சுசந்த செனவிரட்ன கூறியிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையான ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் தமது இறுதி நிலப்பரப்பான முல்லைத்தீவுக் காட்டுப் பகுதியிலிருந்து பதில் தாக்கதல்களை நடத்துவதற்கு ஏற்கனவே பயிற்சிகளைப் பெற்றிருப்பார்கள் என செனவிரட்ன அந்தச் செய்திச் சேவையிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அடர்ந்த பச்சைநிற குடைபோன்ற மர அமைப்புக்கள் விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாக அமைந்திருப்பதுடன், அந்தப் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிகள் அவர்களுக்கே நன்கு தெரியும்” என அவர் கூறியுள்ளார்.
ஆயினும், விரைவில் முல்லைத்தீவையும் கைப்பற்றிவிடுவோம் என கிளிநொச்சி வெற்றியை அறிவிக்கும் நிகழ்வில் கூறியிருந்த இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சோகா, விடுதலைப் புலிகள் தரப்பில் இன்னமும் 1,900 பேரே எஞ்சியிருப்பதாகக் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
முக்கூட்டணி தலைவர்கள் வெறும் புலியெதிர்பாளர்களாக இருந்துகொண்டு தமிழ் மக்களின் உ ரிமை பற்றி எதுவும் பேசாமல் அரசுக்கு துதிபாடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும்போது தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்ற ஒருசிலர் தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசுவது நம்பிக்கை தருகிறது. புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை புரிந்து கொண்டு தமிழ் மக்களின் உரிமை பற்றி குரல் கொடுப்பதற்கு தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்று ஏனைய தமிழ் தலைவர்களும் துணிவோடு முன்வரவேண்டும்.
புலிகளின்வீழ்ச்சியிலிருந்து தமிழ்த்தேசியம் பாடங்களைப் படிக்கவேண்டும்! தமிழ்மக்களின் எதிர்கால விடுதலைப்பயணம் 3வது பாதையை நோக்கி நகரவேண்டும்!
இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் தலைவர்கள் நாட்டில் நடைபெறும் போரை வைத்து அரசியல் இலாபம் தேட முயல்கிறார்கள் .இதுதான் உண்மை.