ஐரோப்பா முழுவது மூன்றாவது உலக நாடுகளின் வாழ்க்கைத் தரத்தை நோக்கிச் செல்கின்றது என்பதன் ஆரம்பப்புள்ளி கிரேக்கம். வங்கிக் கொள்ளைக்காரர்களுக்கு முழு நாடும் அடகுவைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒரு நேர உணவிற்கே உறுதியற்ற நிலையில் வாழ்கின்றனர். தற்கொலைகள் அதிகரிக்கின்றன. இந்த நிலையில் நாட்டின் கடன் தொகையை வட்டிப்ப்பணத்திற்கு அடைப்பதற்கு முன்வந்திருக்கும் வங்கிகளும் அதன் பணமுதலீட்டாளர்களும் சில அழிவுகரமான முடிவுகளுக்கு வந்துள்ளனர்.
இதன் பிரதான பகுதிகளில் ஊதியத் தொகை கொள்ளையின் உச்ச நிலை. அடிப்படை ஊதியத் தொகையை 22 வீதத்தால் குறைப்பது என்றும் அதிலும் 25 வயதிற்கு உட்பட்ட இளம் தொழிலாளர்களின் ஊதியத் தொகையை மேலும் 10 வீதத்தால் குறைப்பது என்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
மக்களிடமிருந்து அவர்களின் ஊதியத்தைச் சுரண்டிக் கொழுத்த பண முதலைகள் மேலும் மக்களை ஒட்டச் சுரண்டும் இந்த நடவடிக்கை கிரேக்கத்தை மீளமைத்தல் என்ற அழகான வார்த்தைகளோடு அரங்கேறுகிறது.