காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீரில் இத்தகைய வன்முறைகளும் துப்பாக்கிச்சூடும் நடப்பது கடந்த 13 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு அருகில் உள்ள கிஸ்த்வார் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட்ட சிறிது நேரத்தில், காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகை குண்டுகளுக்கும் தடியடிக்கும் கலவரம் கட்டுப்படவில்லை. காவலர்களின் மீது கையெறி குண்டுகள் வீசப்படும் அளவிற்கு நிலைமை எல்லை மீறியதால், வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் 3 பேர் பலியானதுடன், 20 பேர் காயமடைந்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கந்தெர்பால் பகுதியில் உள்ள நகபால் என்ற இடத்திலும், ஸ்ரீநகர் அருகில் உள்ள ஜூன்மார், பகேமதாப், ரைனாவாரி ஆகிய இடங்களிலும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியான லஸ்ஜான், பந்திபோரா மாவட்டத்தில் உள்ள அரிபால் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லஸ்ஜான் பகுதியில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாவித் முஸ்தஃபா மிர் உடைய பாதுகாவலர் கையில் இருந்த துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததில், ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ் குமார் என்பவர் உள்பட ஏழு காவலர்கள் காயமடைந்துள்ளனர். இது விபத்து என்று தெரியாமல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடில் ஒருவர் பலியாகியுள்ளார்.
தங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடையை எதிர்த்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள முசாஃபராபாத் நகரத்திற்குச் செல்ல முயன்றவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடில் ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் அப்துல் அஜிஸ் உள்பட 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடந்த போராட்டங்களில்தான் மேற்கண்ட வன்முறைகளும் துப்பாக்கிச்சூடும் நடந்துள்ளன என்று அரசு வடடாரங்கள் தெரிவித்தன.
கடந்த 13 ஆண்டுகளில் முதல் முறையாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஷெரி நகரில் இருந்து பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி நகரம் வரை 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு நேற்று மாலை முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.