கடந்த சில மாத காலமாக காஷ்மீர் மக்களின் போராட்டத்தை ஒடுக்க சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட காஷ்மீரிகளை இந்தியப் படைகள் சுட்டுக் கொன்றுள்ள நிலையில் காஷ்மீர் மக்கள் தொடர்ந்து தங்கள் போரட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் உட்பட பல முக்கிய நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.காஷ்மீரில் நேற்று ஊரடங்கு திரும்பப் பெறப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அமல்படுத்தப்பட்டது. படைகளை நிறுத்தியிருப்பதை எதிர்த்தும், துப்பாகிச்சூட்டில் சிலர் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் இன்று வேலைநிறுத்தத்திற்கு சில தீவிரவாதக் குழுக்கள் அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து, ஸ்ரீநகர், அனந்த்நாக், சோபோர் கந்தெர்பால், ஹந்த்வாரா, ஷோபியன், குல்காம் உட்பட பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், காஷ்மீரில் இன்று தனியார் வங்கிகள், கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் போக்குவரத்து மிகக் குறைவாகவே காணப்பட்டது.