காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் குறித்த பிரச்சினைக்கு (1947-ஆம் வருடம் முதல் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான 3 போர்களுக்கு இதுதான் காரணமாக இருந்தது) தீர்வு காண்பதும் தனது தலையாய பணிகளில் ஒன்றாக இருக்கும் என, 2008-ஆம் வருடம் அமெரிக்க குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடியரசுத் தலைவர் ஒபாமா கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு இந்தியாவில் வியப்புடன் கூடிய கவலையுடன் எதிர்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அவர் காஷ்மீர் குறித்து எதுவும் கூறவில்லை.
ஆனால், கடந்த நவம்பர் 8-ஆந் தேதி இந்தியா வந்திருந்த அவர், காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா தலையிடாது, ஐ.நா.அவையின் பாது காப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு அளிப்போம் எனக்கூறித் தனக்கு விருந்தளித்த இந்திய அரசை சந்தோஷப்படுத்தினார். தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து விலாவாரியாக பேசிய ஒபாமா, காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து மவுனம் சாதித்தார்.
காஷ்மீர் குறித்து ஒபாமா, மீண்டும் தனது நிலையை மாற்றிக்கொள்வாரா என்பது பல்வேறு காரணிகளைச் சார்ந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் போரின் போக்கு எவ்வாறு இருக்கிறது, அமெரிக்காவிற்கு பாகிஸ்தானின் உதவி எந்த அளவிற்குத் தேவைப்படுகிறது, இந்தக் குளிர்காலத்தில் இந்தியா (அமெரிக்காவிடமிருந்து) விமானங்களை வாங்கப் போகிறதா என்பதைப் பொறுத்திருக்கிறது அவரது முடிவு. ரூ.26,100 கோடி மதிப்புள்ள போயிங் ரக விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு வர்த்தக முடிவுகள், காஷ்மீர் பிரச்சினை குறித்த ஒபாமாவின் மவுனத்தை உறுதிப்படுத்தும். ஆனால், ஒபாமாவின் மவுனத்தாலோ அல்லது அவரது தலையீட்டாலோ காஷ்மீர் மக்கள் தங்கள் கைகளில் உள்ள கற்களைக் கீழே போட்டுவிடப் போவதில்லை.
இஸ்லாம், இந்து, பௌத்தம் ஆகிய மாபெரும் மூன்று நாகரிகங்களின் இருப்பிடமான, பாகிஸ்தான் எல்லையில் உள்ள, அந்த அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு 10 நாட்களுக்கு முன் சென்றிருந்தேன். அது தொன்மங்களை, வரலாறுகளைத் தன்னகத்தே கொண்ட பள்ளத்தாக்கு. இயேசுநாதர் அங்குதான் இறந்தார் எனச் சிலர் நம்புகின்றனர். காணாமல் போன தொல்குடியினரைத் தேடி மோசஸ் அங்குச் சென்றார் என்று வேறு சிலர் நம்புகின்றனர். சில நாட்கள் முகமது நபியின் முடி, நம்பிக்கையாளர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும் ஹஜ்ரத்பால் தலத்தில் லட்சக்கணக்கானோர் வழிபாடு நடத்துகின்றனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த போராட்ட குணம் கொண்ட இஸ்லாம், அமெரிக்காவின் பிராந்தியம் சார்ந்த நலன்கள், இந்துமயமாகிவிட்ட – வல்லாதிக்கம் கொண்டதாக உருவாகி வரும் இந்திய தேசியம் ஆகியவற்றுக்கு இடையே சிக்கிக்கொண்டுள்ள காஷ்மீர், தற்போது அணு ஆயுத மோதலுக்கான கருக்களமாகக் கருதப்படுகிறது. காஷ்மீரில் 5 லட்சத்திற்கும் அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். உலகின் உச்சபட்ச ராணுவமயமான பகுதியாக காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளது.
காஷ்மீரின் தலைநகரான சிறீநகரையும், நான் சென்றடைய வேண்டிய, ஆப்பிள் விளையும் சிறிய நகரான ஷோபியனையும் இணைக்கும் நெடுஞ்சாலைப் பகுதியில் நிலைமை பதற்றமாக இருந்தது. நெடுஞ்சாலை நெடுகிலும், பழத்தோட்டங்கள், வயல்கள், சிறிய சந்தைகளின் கடை வாசல்கள், மாடிப்பகுதி என அனைத்து இடங்களிலும் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், பாலஸ்தீன எழுச்சிப் போராட்டத்தில் ஊக்கம் பெற்ற, ‘விடுதலை’ கோரும் ‘கல்லெறிவோர்’ மீண்டும் களத்தில் இறங்கியிருந்தனர். நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் மிக அதிக அளவில் அந்தக் கற்கள் கொட்டிக் கிடந்தன. அவற்றைக் கடந்து செல்ல அதிகத் திறன் மிகுந்த கார் தேவையாக இருந்தது.
அதிர்ஷ்டவசமாக என்னுடன் வந்த நண்பர்களுக்கு சந்துகளும், கிராமப்புற சாலைகளையும் கொண்ட மாற்று வழிகள் தெரிந்திருந்தன. இந்த ஆண்டின் எழுச்சிப் போராட்டம் குறித்து அவர்கள் கூறியதைக் காது கொடுத்துக் கேட்கப் போதுமான நேரத்தை அந்த நீண்டவழி எனக்குத் தந்தது. அவர்களிலேயே வயது குறைந்தவர், இன்னும் அவன் சிறுவன்தான், தனது அனுபவத்தைக் கூறினார். கற்களை எறிந்ததற்காகக் கைது செய்யப்பட்ட அவரது மூன்று நண்பர்கள் கைது செய்யப்பட்டபோது, போலீசார் அந்த 3 பேரின் இரண்டு கைகளிலும் இருந்த அனைத்து நகங்களையும் பிடுங்கி எறிந்தனர்.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, காஷ்மீர் மக்கள் சாலையில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தியாவின் வன்முறையான ஆக்கிரமிப்பு என அவர்கள் கருதுவதை எதிர்த்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால், 20 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் ஆதரவுடன் தொடங்கிய இந்திய அரசாங்கத்திற்கு எதிரான போராட்ட எழுச்சி பின்வாங்கி வருகிறது. இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் 500-க்கும் குறைவான போராளிகளே உள்ளனர் என்று இந்திய ராணுவமே கருதுகிறது. இந்தப் போரில் 70 ஆயிரம் பேர் மாண்டுள்ளனர். சித்திரவதையால் பல்லாயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் “காணாமல் போய்விட்டனர்”. 2 லட்சத்திற்கும் அதிகமான காஷ்மீர் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறிவிட்டனர். போராளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை குறையாமல் அப்படியே உள்ளது.
ஆனால், இந்தியாவின் ராணுவ ஆதிக்கத்தை, அரசியல் வெற்றி எனக் குழப்பம் கொள்ளக் கூடாது. சீற்றத்தைத் தவிர வேறு எதையும் ஆயுதமாகக் கொண்டிராத சாதாரண பொது மக்கள், இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ளனர். சோதனைச் சாவடிகள், ராணுவ முகாம்கள், விசாரணை மையங்கள் ஆகியவற்றின் இடையே வளர்ந்த, ‘பிடித்து, கொலை செய்யும்’ நடவடிக்கைகளைப் பார்த்தே கழிந்த குழந்தைப் பருவத்தைக் கொண்ட, உளவாளிகள் – ஆள் காட்டிகள் – ‘அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்கள்’, அரசு உளவாளிகள், மோசடி செய்யப்பட்ட தேர்தல்கள் ஆகியவை பொதிந்த கற்பனைகளை உடைய இளைய தலைமுறை ஒன்று தனது பொறுமையை இழந்துவிட்டது. அதோடு அச்சத்தையும் தொலைத்துவிட்டது. ஏறக்குறைய பைத்தியக்காரத்தனமான துணிவுடன், காஷ்மீரின் இளைஞர்கள் ராணுவத்தினரை எதிர்கொண்டு, தங்களது சாலைகளை மீட்டனர்.
பொது மக்கள் 3 பேரை இந்திய ராணுவம் கொலை செய்துவிட்டு, அவர்களை “பயங்கரவாதிகள்” முத்திரை குத்திய கடந்த ஏப்ரல் மாதம் முதல், முகமூடிகள் அணிந்த கல்லெறிவோர், அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையை சாத்தியமில்லாத தாக்கிவிட்டனர். இந்திய அரசு துப்பாக்கிக் குண்டுகளாலும், ஊரடங்கு உத்தரவுகளாலும், ஊடகங்களுக்கு எதிரான தணிக்கையைக் கொண்டும் அந்த மக்கள் மீது எதிர்த் தாக்குதல் நடத்தியது. இதில், கடந்த சில மாதங்களில் மட்டும் 111 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பதின்பருவத்தினர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயிரம் பேர் கைது செய்யப் பட்டனர்.
இருப்பினும் அவர்கள், இளைஞர்கள், வெளியே வந்தனர். கற்களை எறிந்தனர். அவர்களுக்குத் தலைவர்கள் யாரும் இல்லை. அல்லது அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை. அவர்கள் தங்களைத் தாங்களே பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டனர். திடீரென, உலகின் இரண்டாவது பெரிய ராணுவத்திற்கு என்ன செய்வதன்றே தெரியவில்லை. யாருடன் பேச்சு வார்த்தை நடத்துவது என்று இந்திய அரசாங்கம் அறிந்திருக்கவில்லை. பல பத்தாண்டுகளாக (காஷ்மீர் குறித்து) தங்களுக்குக் கூறப்பட்டு வந்தது எல்லாம் பொய்யே என்பதைப் பல இந்தியர்கள் மெதுவாக உணரத் தொடங்கினர். ஒரு காலத்தில் அசைக்க முடியாததாக இருந்த காஷ்மீர் குறித்த கருத்தொற்றுமை, தற்போது உடையக்கூடியதாகத் தோற்றமளித்தது.
நாங்கள் சோபியனை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது நான் சிறிய பிரச்சினையில் இருந்தேன். சில நாட்களுக்கு முன் தில்லியில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது, காஷ்மீர் சர்ச்சைக்கு உரிய பகுதி எனக் கூறியிருந்தேன். இந்திய அரசு கூறி வருவதற்கு மாறாக, காஷ்மீரை இந்தியாவின் ‘ஒருங்கிணைந்த’ பகுதி எனக் கூற முடியாது எனப் பேசியிருந்தேன். இதனால் ஆத்திரமடைந்திருந்த அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பவர்களும், நான் தேசத்துரோகக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட வேண்டும் எனக்கூறி வந்தனர். அரசாங்கமும், தனக்கு வலிமையற்றது என்ற தோற்றம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி, மிரட்டும் தொனியிலான அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. இதனால் நிலைமை மோசமடைந்தது. தினந்தோறும், தொலைக் காட்சிகளின் முக்கிய செய்தி அறிக்கைகளில் நான் துரோகி எனவும், வெள்ளை காலர் பயங்கரவாதி எனவும், அடங்காத பெண்களுக்கு என்றே ஒதுக்கப்பட்ட பல்வேறு அடைமொழிகளும் எனக்கு அளிக்கப்பட்டன. ஆனால், சோபியன் நோக்கிச் செல்லும் அந்த காரில் அமர்ந்துகொண்டு, நண்பர்கள் கூறும் சம்பவங்களைக் கேட்டபோது, நான் டெல்லியில் பேசியது குறித்து வருத்தப்படத் தோன்றவில்லை.
நாங்கள், ஷகீல் அகமது அகாங்கர் என்பவரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தோம். அவர் அதற்கு முந்தைய நாள் நான் தங்கியிருந்த சிறீநகருக்கு வந்திருந்தார். நான் சோபியனுக்கு வந்தே ஆக வேண்டும் என அவர் வலிந்து அழைத்ததை மறுக்க முடியாத அளவுக்கு அவரது அழைப்பில் ஒரு அவசரம் இருந்தது.
நான் ஷகீலை முதன் முதலாக 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சந்தித்தேன். அதற்குச் சில வாரங்களுக்கு முன்னர்தான், அவரது 22 வயதான மனைவி நிலோபர், 17 வயதான தங்கை ஆசியா ஆகியோரது உடல்கள், ஆழமில்லாத ஓடையில் கிடப்பது காணப்பட்டது. அந்தப் பகுதி ராணுவ முகாமிற்கும், போலீஸ் முகாமிற்கும் இடைப்பட்ட, சக்தி வாய்ந்த விளக்குகள் எரியக்கூடிய, உயர் பாதுகாப்புப் பகுதியில் இருந்தது.
முதலில் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்ததை உறுதி செய்தது. அதற்குப் பிறகு (அரசு, ராணுவ) அமைப்பு தலையிட்டது. புதிய பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், முதலில் அளிக்கப்பட்ட அறிக்கையின் முடிவுகளை மாற்றின. மீண்டும் உடல்களைத் தோண்டி எடுக்கும் அவலம் அரங்கேற்றப்பட்டு, வன்புணர்ச்சி நடைபெறவில்லை எனக்கூறப்பட்டது. இரண்டு பெண்களும் தண்ணீரில் மூழ்கியதால்தான் இறந்தனர் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களின் போராட்டத்தால் 47 நாட்கள் சோபியன் நகரம் முடங்கியது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பல மாத காலம் மக்களின் கோபத்தால் அதிர்ந்தது. இறுதியாக, இந்திய அரசு நெருக்கடியைச் சமாளித்துவிட்டது என்பது போலத் தோன்றியது. ஆனால், அந்தப் பெண்களின் கொலைகள் குறித்த மக்களின் கோபம், இந்த ஆண்டின் மக்கள் எழுச்சியின் வீரியத்தைப் பெருமளவு அதிகரித்துவிட்டது.
வெளிப்படையாகப் பேசியதால், ஷகில் போலீசாரால் மிரட்டப்பட்டார். இந்தச் சூழலில் நாங்கள் அவரைப் போய்ச் சந்திப்பது, அவர் மட்டும் தனியாக இல்லை, காஷ்மீருக்கு வெளியில் உள்ளவர்களும், அவருக்கு ஆதரவாக உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் என்பதால் நாங்கள் அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என விரும்பினோம்.
அது காஷ்மீரில் ஆப்பிள் அறுவடைப் பருவம். நாங்கள் சோபியனை நெருங்கிக்கொண்டிருந்த அந்தப் பிற்பகல் நேரத்தில், பல குடும்பங்கள் தங்கள் தோட்டங்களில் ஆப்பிள் பழங்களைப் பறித்து மரப்பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆப்பிளைப் போன்றே இருந்த சிவந்த கன்னங்களை உடைய சின்னஞ்சிறு குழந்தைகள் சிலரையும், ஆப்பிள் என்று தவறுதலாக நினைத்து, பெட்டிக்குள் அடுக்கிவிடக்கூடாதே என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. நாங்கள் செல்வதற்கு முன்பே, நாங்கள் வரும் செய்தி எட்டியிருந்தது. சாலையில் எங்களுக்காக ஒரு குழுவினர் காத்திருந்தனர்.
ஷகீலுடைய வீடு, ஒரு இடுகாட்டின் விளிம்பில் அமைந்திருந்தது. அந்த இடுகாட்டில்தான் அவரது மனைவியும், சகோதரியும் புதைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் அவரது வீட்டைச் சென்றடைந்தபோது இருட்டிவிட்டிருந்தது. மேலும், மின்சாரமும் தடைப்பட்டிருந்தது. நாங்கள் ஒரு விளக்கைச் சுற்றி அரைவட்ட வடிவில் அமர்ந்துகொண்டு, நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்த, ஷகீலுக்கு நேர்ந்தது குறித்து அவர் கூறுவதைக் கேட்டோம். மற்றவர்களும், அங்கு வந்தனர். அவர்களுக்கு நேர்ந்த கொடூரங்களையும் வெளிப்படுத்தினர். அவை மனித உரிமை அறிக்கைகளில் இடம்பெறாதவை. பொது மக்களின் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையில் ராணுவத்தினர் உள்ள ஒதுக்குப்புறமான கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு ஏற்படும் அவலகதி குறித்து அவர்கள் பேசினர். ஷகீலின் கைக்குழந்தை ஒவ்வொருவரின் மடியில் இருந்து குதித்து அடுத்தவர் மடிக்குத் தாவிக்கொண்டே இருந்தான். “தனது தாய்க்கு நடந்தது என்ன என்பதைப் புரிந்துகொள்ளும் வயதை அவன் விரைவில் எட்டிவிடுவான்” என ஷகீல் பலமுறை கூறிக்கொண்டிருந்தார்.
நாங்கள் புறப்படுவதற்குத் தயாராக எழுந்த அதே வேளையில், எங்களது வருகையை எதிர்பார்த்து ஷகீலின் மாமனார் – நிலோபரின் தந்தை – தனது வீட்டில் காத்திருப்பதாக ஒருவர் வந்து கூறினார். எங்களால் வர இயலாத வருத்தத்தை அவரிடம் தெரிவித்துவிடுமாறு கூறினோம். நேரமாகி விட்டிருந்தது. இன்னும் சிறிது நேரம் நாங்கள் சோபியனில் இருந்தால், நாங்கள் காரில் திரும்பிச் செல்வது எங்களுக்குப் பாதுகாப்பாக இருக்காது.
நாங்கள் விடைபெற்றுக் கொண்டு, காரில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களிலேயே நண்பர் ஒருவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அவருடைய சக பத்திரிகையாளர் ஒருவர் எனக்கான தகவலுக்காகக் கூப்பிட்டிருந்தார். “போலீசார் வாரண்டை தயாரிக்கின்றனர். அருந்ததிராய் இன்று இரவு கைது செய்யப்படப் போகிறார்” என அந்த நண்பர் கூறியிருந்தார். எங்கள் கார் ஆப்பிள்கள் ஏற்றிச் சென்ற லாரிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கடந்து சென்று கொண்டு இருந்தது. நாங்கள் சிறிது நேரம் மவுனமாகப் பயணித்துக்கொண்டிருந்தோம். “அவ்வாறு நடக்காது. இது உளவியல் நெருக்கடி தரும் நடவடிக்கைதான்” என்று கடைசியாக அந்த நண்பர் கூறினார்.
ஆனால், அதற்கப்புறம் எங்கள் கார் நெடுஞ் சாலையில் வேகமெடுத்துச் சென்ற தருணத்தில், நிறைய பேர் இருந்த ஒரு கார் எங்களை முந்திச் சென்றது. அதில் இருந்தவர்கள் எங்களை நோக்கி கையை அசைத்தபடி இருந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எங்கள் காரை நிறுத்துமாறு கூறினர். நடக்க இருப்பதற்காக நான் என்னைத் தயார் செய்துகொண்டேன். எங்கள் காரின் கண்ணாடி ஜன்னல் வழியே ஒருவர் பார்த்தார். அவரது கண்கள் மரகதப்பச்சை நிறத்தில் இருந்தன. பாதி நரைத்தும், நரைக்காமலும் இருந்த அவரது தாடி அவரது மார்பின் பாதி வரை இருந்தது. அவர் தன்னை அப்துல் ஹை, கொலை செய்யப்பட்ட நிலோபரின் தந்தை என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“ஆப்பிள்களை எடுத்துக்கொள்ளாமல் உங்களை நான் எப்படிப் போக விடுவேன்?” என்று அவர் கூறினார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இரண்டு பெட்டி ஆப்பிள்களை எங்கள் காரின் பின்பகுதியில் ஏற்றத் தொடங்கினார்கள். அப்துல் ஹை தனது நைந்துபோன மரநிறத்திலான மேலங்கியின் பைக்குள் தனது கையைவிட்டு அதில் இருந்த முட்டையை வெளியே எடுத்தார். அதை எனது உள்ளங்கையில் வைத்து எனது விரல்களை மூடினார். மற்றொரு முட்டையை எடுத்து எனது மற்றொரு கையில் வைத்தார். அந்த முட்டைகள் வெம்மையாக இருந்தன. “கடவுள் உன்னை ஆசீர்வதித்து, நன்றாக வைத்திருப்பாராக” என்று கூறிவிட்டு இருட்டுக்குள் நடந்துசென்று விட்டார். இதைவிட உயர்ந்த எந்த விருதை ஒரு எழுத்தாளர் விரும்பக்கூடும்?
அன்று இரவு நான் கைது செய்யப்படவில்லை. மாறாக, அதிகாரிகள் என் மீதான அதிருப்தியைக் காட்டும் பணியை ஒரு கும்பலிடம் ஒப்படைத்துவிட்டனர். இது ஒரு பொதுவான அரசியல் தந்திரமாக மாறி வருகிறது. நான் வீடு திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, பாரதீய ஜனதா கட்சியின் (வலதுசாரி இந்து தேசியவாத எதிர்க் கட்சி) மகளிர் அணியினர் என்னைக் கைது செய்யக் கோரி எனது வீட்டின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை நேரடியாக ஒளிபரப்ப, தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்களின் வாகனங்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் வருவதற்கு முன்பே வந்து இருந்தன. 2002-ஆம் ஆண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்ட, குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கொலைவெறித் தாக்குதலை நடத்திய பஜ்ரங்தள் தன்னிடம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்த எனக்குப் பாடம் புகட்டப் போவதாகக் கூறி உள்ளது. நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் எனக்கு எதிராக கிரிமினல் வழக்குகளைத் தொடுக்கப் போவதாகவும் அது அறிவித்துள்ளது.
அடாவடி நடவடிக்கைகள், போயிங் விமானங் களைக்கொண்டு, புத்தெழுச்சி பெறும் இந்தியா குறித்த தங்கள் கருத்தைப் பலப்படுத்திக் கொள்ள முடியும் என்று இந்திய தேசியவாதிகளும், அரசும் நம்புவது போலத் தோன்றுகிறது. ஆனால், வெம்மையான, அவித்த முட்டைகளின் ஆட்டங்காண வைக்கும் சக்தி அவர்களுக்குப் புரியாது.
நன்றி : நியூயார்க் டைம்ஸ்
தமிழில்: தஞ்சை ரமேஷ்
கீற்று இணையத்திலிருந்து… : http://keetru.com/index.php?option=com_content&view=article&id=12375&Itemid=403